இரயில் பெட்டிகளில் இந்துத்துவா ஏடுகளா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

இரயில் பெட்டிகளில் இந்துத்துவா ஏடுகளா?

பெங்களூருவிலிருந்து சென்னை வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சர்ச்சைக்குரிய கட்டுரைகள் அடங்கிய அங்கீகரிக்கப்படாத செய்தித்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளதை பயணிகள் கண்டறிந்தனர். இது தொடர்பாக ரயில்வே பராமரிப்பு மற்றும் வசதிகள் செய்து தரும் ஒப்பந்ததாரருக்கு அய்.ஆர்.சி.டி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையில் “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் நடைபெற்ற இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களின் இனப் படுகொலைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், அவுரங்கசீப் பையும் ஹிட்லரைப் போல படுகொலைகளை செய்பவர் என அய்.நா. முத்திரை குத்த வேண்டும் போன்ற கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து ஒப்பந்ததாரர் பி.கே. ஷெபி  கூறியதாவது, “அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாள்களுடன்  விற்பனை யாளரால் விநியோகிக் கப்பட்டுள்ளது என்றார். 

செய்தித்தாள்களை விநியோகிக்கும் எங்கள் பணி யாட்களுக்கு, நாளிதழ்கள் குறித்த புரிதல் கிடையாது. சொல்லப் போனால், அவர்கள் விநியோகிக்கும் பத்திரி கைகளில் உள்ள செய்திகளை படிக்கவே மாட்டார்கள். இனிமேல், அங்கீகரிக்கப் பட்ட நாளிதழ்களைத் தவிர வேறு நாளிதழ்களையோ, துண்டுப் பிரசுரங்களையோ  ரயிலில் விநியோகிக்கக்கூடாது என உத்தர விட்டுள்ளேன்” என்றார். 

அய்.ஆர்.சி.டி.சி.யின் நிர்வாக இயக்குநர் ரஜினி ஹசிஜா  கூறியதாவது, “ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஒப்பந்தத்தின்படி, உரிமம் பெற்றவர் 'டெக்கான் ஹெரால்டு' மற்றும் 'கன்னடப் பத்திரிகையை' மட்டுமே பயணிகளுக்கு  வழங்க வேண்டும். யாராக இருந்தாலும் ஒப்பந்த நிபந் தனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.” என்றார்.

இந்த சர்ச்சைக்குரிய செய்தித்தாள் குறித்து ரயிலில் பயணித்த கோபிகா பக்ஷி என்பவர் ட்வீட் செய்திருந்தார். அந்த பதிவில், “இன்று காலை பெங்களூர் - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தேன். எல்லா இருக்கைகளிலும் ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் என்ற செய்தித்தாள் மூலம் பயணிகள் வரவேற்கப்பட்டனர். இத்தகைய செய்தித் தாள் பெயரை இதுவரை கேட்டதே இல்லை. அய்.ஆர்.சி.டி.சி. இதை எப்படி அனுமதிக்கலாம்” என  கேள்வி எழுப்பியிருந்தார்.

மற்ற பயணிகளும், ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், எப்படி இந்த செய்தித்தாளை விநியோகிக்கலாம் என கேள்வி எழுப்பினர்.இதற்குப் பதிலளித்த அய்.ஆர்.சி.டி.சி., “ரயிலில் எப்போதும் விநியோகிகப்படும் அங்கீகரிப்பட்ட செய்தித்தாளுக்குள் "ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்" பேப்பரை இணைத்து விநியோகித்துள்ளனர். இத்தகயை நிகழ்வு மீண்டும் நடைபெறாத வகையில், ஒப்பந்ததாரருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத் துள்ளோம். ரயிலில் கண்காணிப்பில் இருக்கும் அதி காரிகள், இனிமேல் இதனை சோதனை செய்வார்கள்” என தெரிவித்தது.

இதற்குப் பதிலளித்த பயணி பக்ஷி, “உங்களது பதிலுக்கு நன்றி, ஆனால் நிச்சயம் இந்த செய்தித்தாள், அங்கீகரிக் கப்பட்ட நாளிதழுடன் சேர்க்கப்பட்டு வந்திருக்க வாய்ப் பில்லை. இது எனது இருக்கையில் இருந்தது. மற்ற பயணிகளின் இருக்கைகளிலும் இருந்தது” என தெரி வித்திருந்தார். 

இந்த நிலையில் உடனடியாக, ரயில்வேயின் சமூக வலைதளத்தில் இருந்து 'ஆரியவர்த் எக்ஸ்பிரஸ்' தொடர்பான செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.  'ஆரியவர்த் எக்ஸ்பிரஸ்' வார இதழ் தீவிர இந்துத்துவ அமைப்பின் உறுப்பினரான பிரசாத் கோயங்கா என்பவரால் நடத்தப்பட்டு வரும் இதழாகும். இவர் இந்தியில் 'பரிவர்த்தன்' என்ற வார இதழையும் நடத்திவருகிறார். 

கருநாடகாவில் நடைபெறும் மத வன்முறை மோதல்களுக்கு இவரது இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த வெறுப்புக் கட்டுரைகளும் காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்ல ரயில் பெட்டிகளில் தினமலரும் விநியோகம் செய்யப்படுகிறது - எப்படி? இருக்கைகளில் போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். அதன் பிறகு பயணிகளிடம் பத்திரிகைக்குக் காசு வாங்க வரும்போது பிரச்சினைகளும் சர்ச்சைகளும் எழுகின்றன. இந்த வேண்டாத வேலையை இரயில்வே நிர்வாகம் உடனே நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment