ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: 1.  அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்கள் (குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடம்) பண்பாடு, கலாச்சாரம், சுயமரியாதை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு. ஆட்டம், பாட்டத்துடன், பணம் , பொருள், நேரம் விரயத்துடன் வட இந்திய பாணியில் நடைபெறுவதில் மணமக்கள், பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனரே?

- மன்னை சித்து , மன்னார்குடி - 1.

பதில்: உண்மைதான். வேதனையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. சுயமரியாதைத் திருமணங்களிலேயே ஆடம்பரம் வழியும் அவல நிலையும் உள்ளது. எளிமை எங்கே? என்று கேட்கும்  வண்ணம் உள்ளது. நமது திருமணங்களை ஆடம்பரமாக நடத்துபவர்களுக்கு வரிவிதித்து நாட்டு நலம், மக்கள் நல வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட அரசு சிந்திக்க வேண்டும். 

நமது பிரச்சாரத்தில் இது பற்றியும் பேச வேண்டும்!

கேள்வி: 2. நானும் திராவிட முகம் தான் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் சொல்லி இருக்கிறாரே? 

- அன்பாளன், அரியலூர்

பதில்: பலே பலே, உண்மைதான் - மகிழ்ச்சி. அதில் ஆரியம் புகுந்து மூளை விலங்கிடப்பட்டுள்ளதே என்பதே நம் வேதனையான கேள்வி!

கேள்வி: 3. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ‘பாரத் மாத்தாக்கி ஜே’ என்று முழக்கமிட்டு கலவரத்தை தூண்டுகின்றனரே  பா.ஜ.க.வினர்?

- கி.செல்வராகவன், பாண்டிச்சேரி

பதில்: சிலருக்கு அம்பேத்கர் முகமூடி இப்போது தேவை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இந்த புது வித்தை மூலம் கட்சியை வளர்க்க இப்படி ஒரு யுக்தி!

கேள்வி: 4. ‘அயோத்தியா மண்டபம் என்பது வழிபாட்டுக்குரிய இடமே இல்லை. இங்கு பக்தர்களுக்கு அனுமதியே இல்லை. உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அனுமதி’ என்று நீதிமன்றத்தில் அதன் நிர்வாகிகள் ஜகா வாங்கிவிட்டார்களே அய்யா?

- கு.சோமசேகர், மாம்பலம்

பதில்: “அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்”- அதிலும் அவாள்களோ ‘வளைந்து நெளிந்து’ இறுதியில் தன் காரியம் முடிப்பதற்கு மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்சுவர் என்பது சர்.பி.தியாகராயரின் அறிவுரை.

கேள்வி: 5. நீண்ட பயணத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பார்த்துவருகிறீர்கள். மக்களிடம் “நீட்”டுக்கான எதிர்ப்பு எப்படி உள்ளது? 

- ஆ.செல்வலெட்சுமி, நெல்லை

பதில்: நமது பிரச்சாரத்திற்கு மக்களின் பேராதரவு மிகவும் பெருகி வருகிறது. மக்கள் விழிப்புணர்வோடு தெளிவு பெறுகின்றனர். நீட், குலக்கல்வி, மாநில உரிமை பற்றி நன்கு புரிந்து, போராட்டக் களத்திற்கு ஆயத்தமாகிறார்கள்!

கேள்வி: 6. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் போலிச் சான்றிதழ் கொடுத்து வடநாட்டினர் பலர் பணியில் இணைந்துள்ளார்களே, இதில் ஒன்றிய அரசினரின் பங்கு இல்லாமலா இருக்கும்? 

- கே.எஸ்.தீர்த்தகிரி, ஆவடி, சென்னை

பதில்: விசாரணையில் உண்மைகள் வெளிவரும் அவர்களுக்கு கதவு திறந்த முந்தைய ஆட்சியினர்தான் முதற் குற்றவாளி - இதில்!

கேள்வி: 7. இந்திய கடல் வளத்தை கார்ப்பரேட்டு முதலாளிகள் சூறையாட வசதியாக மோடி அரசு நிறைவேற்றியுள்ள ‘‘கடல் மீன்வளச் சட்டம் 2021’’ பற்றி எந்த ஊடகமும் - கட்சிகளும் வாய்திறக்கவில்லையே?

- உ.விஜய், சோழங்குறிச்சி

பதில்: பலருக்குப் புரிவதே இல்லை; சிலருக்கு அலட்சியம். ஒரு சிலரே அடுக்கடுக்கான அநியாயங்களை சல்லடைக் கண்களோடு பார்த்து கண்டனம் தெரிவிக்கின்றனர்!

கேள்வி: 8. உள்துறை அமைச்சர் பேசுவது போல அத்தனை எளிதில் இந்தியை சட்டப்படி அலுவல் மொழி ஆக்கிட முடியுமா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: வடகிழக்கு, கிழக்கு, (மேற்கு வங்காளம்), மேற்கு, தெற்கு  மாநிலங்களில் எதிர்ப்பு மலைபோல் உள்ளது. அசாம் மாணவர்கள், பஞ்சாப், கருநாடகம், தமிழ்நாடு, பல எதிர்ப்புகள் - கனவு நிறைவேறாது!

கேள்வி: 9. இலங்கையில் நடக்கும் பெருஞ்சிக்கலுக்கு அவர்களின் சீனச் சார்பு மட்டுமே தான் காரணமா?

- நகுலன், சிங்கம்புணரி

பதில்: பஞ்ச பாண்டவர்களான ராஜபக்சே என்ற கொடுங்கோலர்கள் ஆட்சியே முக்கிய காரணம் - ஆளும் திறமையற்ற கூட்டத்தின் ஆப்பில் மாட்டிக் கொண்டு விழிக்கும் நிலை!

கேள்வி: 10. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கல்வி நிலையங்களில் மதவெறியர்களின் வன்முறை அதிகரித்து வருகிறதே?

- அ.தமிழ்குமரன், ஈரோடு

பதில்: திட்டமிட்டு நடைபெறுவதை தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறையின் கண்காணிப்பு, விழிப்புணர்வு பிரச்சாரம் மூலமே இந்த மூளைச் சாயமேற்றுவதை தடுக்க முடியும்.


No comments:

Post a Comment