நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம்

 திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? நரிக்குறவர் வீட்டிற்கு முதலமைச்சர் சென்று உணவருந்தினாரே, அதுதான்! 

பெரம்பலூர்,ஏப்.16-  திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? நரிக்குறவர் வீட்டிற்கு முதலமைச்சர் சென்று உணவருந் தினாரே, அதுதான்  என்று பெரம்பலூரில் தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார். 

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக் கூட்டம் நேற்று (15.4.2022) பெரம்பலூர், அரியலூரில் நடைபெற்றது. 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம் சூறாவளி சுற்றுப் பயணமாக தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே எழுச்சியையும் விழிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 

சமூகநீதியை வென்றெடுக்க, சமத்துவத்தை நிலைநாட்டிட தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினைகளில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையும் வழி நடத்தும் தலைவராக அனைவராலும் அன்போடு 'ஆசிரியர்' என்று அழைத்து அவர்களையும், திராவிடர் கழகத்தையும் வழிகாட்டியாகக்கொண்டு அதன்படி, பின்பற்றும் மாணவர் களாக ஆர்வமுடன் தமிழர் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி களில் கலந்துகொண்டு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பெருவிழாவான தமிழர் தலைவரின் வருகை

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் அனைத்துக்கட்சித் தலைவர்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இந்தப் பயணம் வெற்றி பெறும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். கட்சி பேதமில்லாமல் அனைத்துக் கட்சியினரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பேராதரவை அளித்து வரவேற்ற வண்ணம் உள்ளனர்.  கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தமிழர் தலைவர் வருகையை ஒரு பெருவிழாவாக கருதி, தங்கள் பங்களிப்பினை உரிமையுடன் அளித்து வருகின்றனர். 

3.4.2022 அன்று நாகர்கோவிலில் தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம் 25.4.2022 அன்று சென்னையில் நிறை வடைகிறது. நிறைவு நாளில்  சென்னை பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில், சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். திராவிட இயக்கப் போர் வாள் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும்  பங்கேற்கின்றனர்.

பொதுமக்களின் பேராதரவு

நீட் தேர்வு எதிர்ப்பு-தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயண ஒருங் கிணைப்பாளர்கள் கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்பு ராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஆகியோர் அந்தந்தப் பகுதிகளிலுள்ள கழகப் பொறுப்பாளர்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளிலுள்ள பெரியார் பற்றாளர்களை ஒருங் கிணைத்து பரப்புரைப் பயணத்தை வெகு சிறப்பான ஒழுங் கமைவுடன், நேர்த்தியாக ஒருங்கிணைத்து வருகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணம் சிறப்பாக நடைபெறும் வகையில் பொதுமக்கள் தங்களின் பேராதரவை அளித்து வருகின்றனர்.  பரப்புரைப் பெரும்பயணப் பொதுக்கூட்டங்கள் குறித்து அந்தந்தப் பகுதிகளிலும் சுவரெழுத்து விளம்பரங்கள், தெருமுனைக்கூட்டங்கள்வாயிலாக தமிழர் தலைவர் அவர்களின் வருகைகுறித்து பொதுமக்களிடம் பரப்புரை நடைபெற்று வருகிறது.

மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரள்கின்றனர்.

பெரம்பலூர்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் நேற்று (15.4.2022) பெரம்பலூர் தேரடித் திடலில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பெ.அண்ணாத்துரை அனைவரையும் வரவேற்று பேசினார். தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், நகர கழகத் தலைவர் ந.ஆறுமுகம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராசன், கழக நகர செயலாளர் ஆதிசிவம், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின், நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை
இறுதியில் உரையாற்றிய தமிழர் தலைவர், 

”ஓராண்டுக்குள்ளேயே சரித்திரம் படைத்து கொண்டிருக் கிற சமூக நீதிக்கான சரித்திர நாயகரின் சிறப்பான ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், எப்படியெல்லாம் இந்த ஆட்சிக்கு குறுக்குசால் ஓட்டலாம்; தடைகளை உருவாக்கலாம் என்று செயல்படுகிறார்கள். அந்தத் தடைகளை எல்லாம் விளக்கிச் சொல்லத்தான், ''குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்'' என்ற குறளுக்கேற்ப பருவம் பார்க்காது உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்” என்று தொடக்கத்திலேயே தனது உரையின் நோக்கத்தை மக்களின் கைதட்டல்களுடன் வெளிப்படுத்தினார். தொடர்ந்து, மண்ணின் மைந்தர்களான நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.இராசா, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரை சிறப்பாகப் பாராட்டினார். 

பிறகு, வர்ணாஸ்சிரம தர்மப்படி நமது கல்வியின் நிலை யென்ன என்பதை குறிப்பிடும்போது, கல்யாண மந்திரம், கருமாதி மந்திரம் என்று தமிழர் தலைவர் பேசிக்கொண் டிருந்தபோது, வலப்பக்கமிருந்த ஆ.இராசா, ‘சமயத்தில் மாத்தியும் சொல்வான்’ என்று இடைமறித்துச் சொன்னதும், தமிழர் தலைவர் அதை ஆமோதிப்பதுபோல, “அவர் சொல் வது  உண்மை. உங்களுக்குத் தெரியவேண்டும்” என்று, “நாவலர் சோமசுந்தர பாரதியார் உங்களை போல ஒரு திருமணத்திலே அமர்ந்திருக்கிறார். ஒரு பார்ப்பன சிறுவன் புரோகிதம் செய்கிறான் - மந்திரம் சொல்கிறான். தாலி எடுத்துக் கொடுக்கும் நேரத்தில் சோமசுந்தர பாரதியார் வேகமாகச் சென்று அந்தச் சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். எல்லோருக்கும் அதிர்ச்சி. பிறகு விளக்கினார். 'இந்தப் புரோகிதன் கல்யாண வீட்டில், கருமாதி மந்திரத்தைச் சொல்கிறான்' என்று சொன்னார். அதன் பிறகு அனைவரின் கோபமும் அந்தச் சிறுவன் மீது திரும்பியது” என்று விளக் கியதும் மக்களைப்போலவே, ஆ,இராசாவும் வாய்விட்டுச் சிரித்தவாறே ஆசிரியரின் நினைவுத் திறனைக் கண்டு வியந்தார். இதுதான் திராவிட மாடலின் அஸ்திவாரம் என்று சேர்த்துச் சொல்லி வியப்பைக் கூட்டினார். இதன் மீது அமைந்த ஆட்சிதான் இப்போது நடைபெற்றுக்கொண் டிருக்கிற ஆட்சி! என்று விடாமல் அடுக்கினார்.

''இதுதான்யா திராவிட மாடல் ஆட்சி!''

தொடர்ந்து, குலக்கல்வி பற்றியும், அதை பெரியார் ஒழித்ததுபற்றியும் சொல்லிவிட்டு, “குலக்கல்வியை ஒழித்த பிறகு அதைப்பற்றி விளக்கிப் பேசும் மாநாடுகள் நடந்தன. அந்த மாநாடு நடந்த இடங்களிலே பெரம்பலூரும் ஒன்று” என்று பெரம்பலூர் மக்களுக்கே தெரியாத ஒரு வரலாற்றுத் தகவலை வெளிப்படுத்தினார். (பலத்த கைதட்டல்) 

மேலும் அவர், ”அப்படியெல்லாம் ஒழித்த குலக்கல்வி மறுபடியும் வந்தாச்சுங்க” என்று மக்களை எச்சரித்தார். ஒன்றிய அரசின் கல்வித்திட்டம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக அலசி அதன் ஆபத்தை மக்களுக்கு விளக்கினார். தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தில் கல்வியில் நமக்குள்ள உரிமையை சட்டப்பிரிவுகளைப் படித்துக்காட்டிப் பேசினார். அம்பேத்கர் பிறந்தநாள் பற்றியும், தமிழ்நாடு முதலமைச்சர் அதை சமத்துவ நாள் என்று அறிவித்ததையும் சொல்லி, வெறும் பேச்சோடு அல்ல, திராவிடர் இயக்கம் செயலிலும் காட்ட ஆவடி நரிக்குறவர் வீட்டிற்குச் சென்று உணவு சாப்பிட்டதையும் சொல்லிவிட்டு, “இதுதான்யா திராவிட மாடல் ஆட்சி” என்றார் பலத்த கைதட்டல்களுடன்.

பிறகு சமபந்தி போஜனத்தையும் ஒரு பிடிபிடித்தார். அங்கேயும் சமைப்பது மேல்ஜாதிக்காரர்கள்தான். ஆர்.எஸ்.எஸ்.காரன் அப்படித்தான் தாழ்த்தப்பட்டவன் வீட்டில் சாப்பிடுவது என்பதையும் சேர்த்துச் சொல்லி, “ஆனா, இங்கே அப்படியா?” என்று குத்தூசியால் குத்துவதுபோல ஒரு கேள்வியைக் கேட்டார். இந்தத் தகவல், “நான் ஏன் இந்துவாக இருக்க முடியவில்லை” என்று ஒரு புத்தகமாகவே வந்திருப்பதாக ஆதாரத்தையும் சேர்த்துச்சொல்லிவிட்டு, “நாங்கள் எதைப்பேசுகிறோமோ அதையே செய்கிறவர்கள்” என்றார் பலத்த கைதட்டல்களுக்கிடையே.

தொடர்ந்து மற்ற விசயங்களை விளக்கமாகச்சொல்லிவிட்டு, “மக்களுக்குத்தான் இறையாண்மை இருக்கிறது. மந்திரி களுக்கல்ல. ஆகவே, உங்கள் உரிமைகளைப் பெற,  போராடத் தயாராகுங்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார். அங்கிருந்து அடுத்த கூட்டத்திற்குச் செல்ல அரியலூருக்குப் புறப்பட்டார்.

இந்தப் பரப்புரைப் கூட்டத்தில் தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் இராஜேந்திரன், ம.தி.மு.க. மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் வரதராசன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், வி.சி.க. மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், இ.யூ.மு.லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் இராமலிங்கம், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, சி.பி.எம். மாவட்ட செயலாளர் இரமேஷ், ம.ம.க. மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, வேப்பந்தட்டை கழக ஒன்றிய செயலாளர் இராசு, ப.க. மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஆலத்தூர் ஒன்றிய கழக  செயலாளர் வேலாயுதம், மாவட்ட மகளிரணி தலைவர் குணகோமதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாந்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் சூர்யகலா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் கழகத் தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் விசயேந்திரன் நன்றி கூறினார்.

அரியலூர்

பெரம்பலூரை அடுத்து நேற்று (15.4.2022) அரியலூரில்  அண்ணா சிலை முன்பு நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத் தலைவர்  விடுதலை நீலமேகம் தலைமையில் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்  அனைவரையும் வரவேற்று பேசினார்.

மண்டல தலைவர் சு. கோவிந்தராசன், மண்டல செயலாளர் இரா. மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சி.காமராசு, ந.தங்கவேலு, ந.செல்லமுத்து, மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், மண்டல இளைஞரணி தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட தொழிலாளரணி  அமைப்பாளர் சி.சிவக்கொழுந்து, மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், அரியலூர் ஒன்றிய தலைவர் மருதமுத்து, அரியலூர் நகர தலைவர் துரை.காமராசு, அரியலூர் நகர செயலாளர் கு.தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தொடக்கவுரை நிகழ்த்திட கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றிய பின், நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அரியலூரில் தமிழர் தலைவர்

அரியலூரில் அனைத்துக்கட்சியினர் உரையாற்றியவுடன், தமிழர் தலைவர் உரையாற்றினார். முன்னதாக அரியலூர் அனிதாவின் குடும்பத்தினர் ஆசிரியரை மேடையில் சென்று பார்த்தனர். 

அங்கிருக்கும் மக்களுக்கு நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்பு என்பதைப்பற்றி விளக்கிப்பேசினார். பழைய துரோணாச்சாரியார் கதையைச் சொல்லி, இன்றைக்கு ஏகலைவன் கட்டைவிரலைக் கேட்டால் என்னாகும்? கட்டைவிரலைக் கேட்பவர்கள் காணாமல் போவார்கள்” என்று சொல்லி இன்றைக்கு இருக்கும் உணர்ச்சியை பிரதிபலித்தார். தொடர்ந்து இதுகுறித்த பல தகவல்களைச் சொல்லி விழிப்புணர்வு பெறுங்கள்” என்று கூறி விடைபெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து திருச்சி நோக்கி புறப்பட்டு, நள்ளிரவுக்குப் பிறகு வந்து சேர்ந்து தோழர்களுடன் அடுத்த நாளைய நிகழ்ச்சியைப் பற்றி கலந்தாலோசனை செய்துவிட்டு உறங்கச்சென்றார்.

இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சரும் மாவட்ட தி.மு. கழக செயலாளருமான சா.சி.சிவசங்கர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தி.மு.க. மாநில சட்டதிட்டக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், தி.மு.க.மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, இந்திய தேசிய காங்கிரசு கட்சி மாநில துணை தலைவர் க.இராசேந்திரன், காங்கிரசு கட்சி மாவட்ட தலைவர் ஆ.சங்கர், சி.பி.எம். மாவட்ட செயலாளர் ம.இளங்கோவன், எம்.ஜி.ஆர். கழக மாநில அமைப்பு செயலாளர் நெ.கோ.கலைவாணன், வி.சி.க.மாவட்ட செயலாளர் பெ.மு.செல்வநம்பி, சி.பி.அய். மாவட்ட துணை செயலாளர் த.தண்டபாணி, தி.மு. கழக நகர செயலாளர் இரா.முருகேசன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கிருட்டிணன், கருநாடக கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் அரியலூர் ஒன்றிய கழக செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment