சமூகநீதிக்கான திட்டங்களை முடக்க நினைத்தும் முடியாமல் தவிக்கும் மதவாத அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

சமூகநீதிக்கான திட்டங்களை முடக்க நினைத்தும் முடியாமல் தவிக்கும் மதவாத அரசு

தேசிய ஊரகவேலைவாய்ப்புத் திட்டம் காங்கிரஸ் அரசால் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு 2009 ஆண்டு இதன் பெயர் மாற்றப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது, கிட்டத்தட்ட சமூகநீதிக்கான ஒரு திட்டம் என்றே இதைக் கூறலாம். 

 ஆங்காங்கே இந்த திட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தாலும், இந்த திட்டம் மூலம் விளைந்த பயன்கள் ஏராளம். இந்தியா முழுவதும் பல லட்சம் ஏக்கர் வனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் வரண்டு கிடக்கும் பல குளங்கள் இந்த திட்டத்தின் மூலம் கரைகளில் வளர்க்கப்பட்ட மரங்களால் கோடையில் நீரோடு அருமையான நிழல் தரும் தோப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

கிராமங்களில் ஏழை பணக்காரர் ஜாதிய பேதம் பார்க்காமல் அனைவருக்கும் சமமான பணியாக இந்த ஊரகவேலைவாய்ப்பு திட்டம் உள்ளது.

சனாதனிகளுக்கு சமூக நீதி என்றாலே எட்டிக்காய்தானே, ஆகையால் தான் 2014 ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்று இந்தியாவிற்கு பெரும் வளர்சித்திட்டங்களை வகைப்படுத்தும் திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, தனியார் பெரும் முதலாளிகளிடம் வேலைபார்த்த நபர்களைக் கொண்டு குழுவினை அமைத்து அதற்கு நீட்டி, ஆயோக் என்று பெயர் சூட்டினார். 

 இந்த நீட்டி ஆயோக் முதல் வேலையே சமானியர்களுக்கு பயன்படும் திட்டங்களை முடக்குவதுதான், அந்த திட்டங்களுக்குச் செலவிடும் பணத்தை மடைமாற்றி கார்ப்பரேட்டுகளின் கைகளில் செல்லுமாறு ஒப்பந்தப்பணிகளாக மாற்றுவதுதான்.

 அப்படி அந்த நீட்டி ஆயோக் கைவைத்த திட்டங்களில் ஒன்றுதான் மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்புத் திட்டம். இதனை உடனடியாக நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தால் அதற்கான நிதியை மெல்ல மெல்ல குறைத்து வந்தது. ஒருநிலையில் இந்த திட்டத்தை முடக்கிவிடலாம் என்று நினைத்த போது தற்போது அதற்கான தேவைகள் அதிகம் உள்ளது. 

ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்  கீழ் திறன்சாரா வேலைக்கான தேவை 2021-2022 இல் அதிகமாகவே இருக்கிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்ட போதிலும் தேவை அதிகரித்துள்ளது.

மார்ச் 31 நிலவரப்படி, 2021-2022இல் நாடு முழுவதும் உள்ள 7.2 கோடி குடும்பங்கள் 10.55 கோடி மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினர். இத்திட்டம் தொடங்கப்பட்ட 2006 ஆம் ஆண்டில் இருந்து இது இரண்டாவது அதிகபட்சமாகும். கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த கெரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் ஆண்டான 2020-2021 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 7.55 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 11.19 கோடி பேர் இந்தத் திட்டத்தால் பலன் அடைந்தனர்.

2019-2020இல் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 5.48 கோடியைத் தொட்டது. முந்தைய ஆண்டுகளில் இருந்து இது மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். 2018-2019இல் 5.27 கோடி; 2017-2018இல் 5.12 கோடியாக அது இருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமப்புற குடும்பமும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உரிமையுள்ளது.

தொற்றுநோயைத் தொடர்ந்து தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்தோருக்கு இந்தத் திட்டம் பாதுகாப்பானதாக இருந்தது.தரவுகளின்படி, 2021-2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 358.67 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2020-2021 இல் 389.09 கோடி வேலை நாட்களாக இருந்தது. 2019-2020 இல் 265.35 கோடி வேலை நாட்களாக இருந்தது.

2021-2022இல் உருவாக்கப்பட்ட மொத்த 358.67 கோடி வேலை நாட்களில் 54.69 சதவீதம் பெண்கள் செய்தது. 2021-22ல் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சராசரி வேலை நாட்கள் 49.7 நாட்கள் ஆகும். 2020-2021இல் 51.52 நாட்களாக அது இருந்தது; 2019-2020இல் 48.4 நாட்களாக இருந்தது. 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தரவுகள் உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 77.5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பைப் பெற்றன. 2020-2021இல் இது 94.34 லட்சமாக இருந்தது. 

அதேசமயம் பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா போன்ற சில மாநிலங்களிலும், சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களிலும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மகாராட்டிரா, கருநாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் குடும்பங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. மகாராட்டிராவில், 2020-2021இல் 16.84 லட்சமாக இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 2021-2022இல் 20 லட்சமாக அதிகரித்துள்ளது. கருநாடகாவில் 2020-2021இல் 30.15 லட்சத்தில் இருந்து 2021-2022இல் 33.91 லட்சமாக அதிகரித்துள்ளது. அப்படி இருந்தும் நிதி அமைச்சர் தொடர்ந்து இந்த திட்டத்தை முடக்கும் விதமாக ஏதேதோ காரணத்தைக் கூறி தொடர்ந்து இதற்கான நிதியைக் குறைத்து வருகிறார்.


No comments:

Post a Comment