பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 3

தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம் எத்தகையது?

       மக்கள் சிந்தனைக்கு...        

இந்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க முயன்று வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை ஒரு தலைமுறையின் கல்வியை தீர்மானிக்கக் கூடியது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையை உருவாக்க இந்திய அரசு தற்போது கடைப்பிடித்து வரும் நடவடிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை. 

சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள். அரசியல் கட்சிகள், ஆசிரியர், மாணவர் அமைப்புகள், கல்வியியல் செயல்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் ஆலோசனை எதையும் கோரிப் பெறாமல், அதிகாரிகள் மட்டத்திலேயே இத்தகைய கொள்கை முடிவை மேற்கொள்வது இந்தியாவின் மக்களாட்சி அமைப்பிற்கே ஆபத்தானது.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது வலைதளத்தில் ஓர் ஆவணத்தை ஆங்கில மொழியில் வெளியிட்டு 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த ஆவணம் யாரால், எதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதைக்கூட வெளிப்படுத்தாமலும். இவ்வாவணத் தில் உள்ள கொள்கை முன்மொழிவுகள்  (Policy Initiatives) வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க சில உள்ளீடுகளாக  (Some Inputs for Draft National Education Policy - 2016)  கொள்ளப்படும் என்பதும் எந்தவித ஜனநாயக . நடைமுறைக்கும் ஏற்புடையது அல்ல. 

இந்த ஆவணம், 

* குழந்தைப் பருவத்திற்கான வரையறையையே மாற்றுகிறது. 

* கல்வியின் பொருளையும், நோக்கத்தையும் மாற்றுகிறது. 

* ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையான ஏக இந்தியா, ஏக மொழி, ஏகக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒற்றை மொழியாகவும், இந்தியப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டிற்கான மொழியாகவும் முதன்மைப்படுத்துகிறது.

* இதன் விளைவு இந்திய மொழிகள் அனைத்தும் அழிவதோடு தமிழர் உள்ளிட்ட பெரும்பகுதி இந்திய மக்களை பண்பாட்டு வரலாறு அற்றவர்களாக மாற்றுகிறது.

* கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் பண்பாட்டின் கூறுகளான கல்வி, மொழி ஆகியவற்றில் மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க இயலாத நிலையை உருவாக்கி, மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிற அமைப்பாக மாநில அரசு சுருங்கிப் போக வழிவகுக்கிறது. 

* தொடக்கக் கல்வியின் இரண்டாம் நிலையிலேயே  (Upper Primary-Class VI to VIII)  குழந்தைகளை வேலைவாய்ப்புத் திறன் பெறச் செய்வதும், பள்ளிக் கல்வி தொடர் தகுதியற்றவர் எனச் சான்றிட்டு தொழில்கல்வி கற்க 14 வயதுகூட நிரம்பாத குழந்தைகளை விரட்டுவது பெரும்பகுதி மக்களை பள்ளி - கல்லூரிக் கல்வி  (Mainstream Education) யிலிருந்து வெளியேற்றி கூலி வேலையாட்களாக வாழ்வாதாரத்தைத் தேட வழிவகுக்கிறது. 

* உயர்கல்வியில் புதிய நிறுவனங்களை அரசு தொடங்க' முதலீடு செய்யாது. சமூகநீதியின்பால் வழங்கப்படும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு உரிமை. கல்வி உதவித்தொகை ஆகியவற்றைப் பற்றி பேசாமல், அரசமைப்புச் சட்ட நோக்கத்திற்கே எதிராக அனைத்து சமூகத்தையும் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கல்வி உதவித் தொகை என்பது சமூகநீதிப் போராட்டத்தின் விளைவாக அமைந்த சமூக, கல்வி ரீதியாக சட்டப்படி பெற்ற அனைத்து உரிமைகளையும் ரத்து செய்யும் வழியை வகுக்கிறது.

* நீதிமன்றத்தை அணுக முடியாமல் நடுவர் மன்றம் உருவாக வழிசெய்கிறது. 

* இதுபோல பல ஆபத்துகள் நிறைந்த இத்தகைய கல்விக்கொள்கை உருவாக்கத்தை ஏற்க இயலாது. 

*மக்களாட்சியில் கல்விக்கு இத்தகைய நெருக்கடியை எந்த நாட்டிலும் எந்த சமூகமும் சந்தித்தது இல்லை.  

* இச்சூழலில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்களை அழைத்து விவாதிப்பது காலத்தின் தேவை என உணர்ந்து திராவிடர் கழகம் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 

* இக்கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, ஒரு செயல்திட்டத்தையும் முன்வைக்க வேண்டுகிறோம்.

* செயல் திட்டத்திற்கான ஆலோசனைகளை தற்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள 43 பக்க ஆங்கிலத்தில் உள்ள  “Some Inputs for Drafl National Education Policy-2016"  என்ற ஆவணத்தை நிராகரிப்பது

* வரைவு-தேசிய கல்விக்கொள்கை வகுக்க ஒரு வரைவுக் குழுவை கல்வியாளர்களை கொண்டும். ஒரு கல்வியாளரை தலைவராகக் கொண்டும் அமைக்கக் கோருவது. மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், அனைத்து சமூகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் இக்குழுவை அமைக்கக் கோருவது. 

* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோருவது. 

* மொழிக், கல்விக் கொள்கையில் இந்திய அளவில் கொள்கை வகுக்கப்பட்டாலும் மாநிலம் (தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியாக ஆக்கப்பட்டிருப்பது) தன் தேவைக்கேற்ப கல்வி, மொழிக் கொள்கையை வகுத்துக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தக் கோருவது,

* இருபால் மாணவர் படிக்கும் (Co-Educational) பள்ளி - கல்லூரி முறையை தொடரச் செய்வது.

* இந்திய அளவில் தகுதித் தேர்வு என்ற பெயரில் மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் திட்டத்தை முற்றிலுமாக நிராகரிப்பது. 

* உலக வர்த்தக அமைப்பின் கீழ் சேவையில் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தின் (WTOGATS) பேச்சு வார்த்தையிலிருந்து கல்வித்துறையில் இந்திய அரசு விலகிக்கொள்வது. இவற்றின் அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக வலியுறுத்தி மக்கள் இயக்கங்களை திட்டமிடுதல். 

* கல்வி தரும் பொறுப்பில் இருந்து அரசு விலகக் கூடாது. 

* குறைந்தபட்சம் 12ஆம் வகுப்புவரை அரசு தன் பொறுப்பிலும் செலவிலும் கல்வி தர வலியுறுத்துவது. 

* தாய்மொழி வழியில் கல்வி கற்க உரிய வாய்ப் பையும், நடவடிக்கையையும் அரசு ஏற்படுத்த வலியுறுத்துவது. 

* சமூக ஒடுக்குமுறைக்கும், கல்வி பின்தங்கலுக்கும் (Social and Educational Backwardness)  ஏற்றவாறு இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை தொடர்வதை உறுதிப்படுத்துவது. 

* அரசு உயர்கல்வி நிலையங்களைப் பெருக்குவது. 

*இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்றவாறு கல்விக்கொள்கை அமைவதை உறுதிப் படுத்துவது.

(28.7.2016 அன்று சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துகட்சிக் கூட்டத்தின் முடிவு இது)


No comments:

Post a Comment