நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இன்னமும் ஊறுகாய் ஜாடியில்தானே இருக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இன்னமும் ஊறுகாய் ஜாடியில்தானே இருக்கிறது?

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதானே பெண்களுக்கு 50 விழுக்காடு கொடுத்தது!

திருத்தணி, அரக்கோணம் பொதுக்கூட்டங்களில் தமிழர் தலைவர் எழுச்சி உரை!

திருத்தணி, ஏப்.24 - நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இன்னமும் ஊறுகாய் ஜாடியில்தானே இருக்கிறது? தமிழ்நாட்டில் 'திராவிட மாடல்' ஆட்சிதானே பெண் களுக்கு 50 விழுக்காடு கொடுத்தது என்று திருத்தணி, அரக்கோணம் பொதுக்கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி எழுச்சியுரையாற்றினார்.

திருத்தணி

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பெரும் பயணக் கூட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பு  பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.மோகனவேலு  அனைவரையும் வர வேற்று பேசினார்.

இசைக்கலைமணி திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் கழக பாடல் இசை நிகழ்ச்சி நடை பெற்றது.

மண்டல தலைவர் பு.எல்லப்பன், மண்டல செய லாளர் காஞ்சி கதிரவன், பெரியார் பெருந் தொண்டர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் அறிவுச்செல்வன், மாவட்ட துணை தலைவர் ஸ்டாலின், மாவட்ட ப.க.தலைவர் எழில், பொதுக்குழு உறுப்பினர் பொதட்டூர் புவியரசன், மாவட்ட ப.க. செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ.மதிவதனி, திராவிடர் கழகப் பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆற்றிய சிறப்புரை வருமாறு:

“இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் என்னுடைய வேலையை சுலபமாக்கி இருக் கிறார். கருத்துகள் முக்கியம். அதை யார் சொன்னாலும் சரி, உங்களுக்கு போய் சேர வேண்டும் என்பதுதான் முக்கியம்'' என்று கைதட்டல்களுக்கிடையே தொடங் கினார். தொடர்ந்து மக்களைப் பார்த்து, “போராட்டக் களத்திற்கு உங்களையெல்லாம் ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பணி” என்றார். 

''சொல்ல வேண்டியவை மலை போன்று இருக்கிறது. நேரம் குறைவாக இருக்கிறது. ஆகவே இந்தப் புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படித்து, பரப்ப வேண்டும்” என்று சொல்லியபடியே புத்தகத்தைக் காட்டினார். ''குலக்கல்வியை கொண்டு வந்த ராஜாஜியை, பெரியார் பதவியை விட்டு, ஓடச் செய்த பிறகு, முதலமைச்சரான காமராஜர் கல்வி நீரோடையை நாடெல்லாம் பாயச்செய்தார்” என்று சொல்லி, ” காமராஜர் நேரடியாக திராவிடர் இயக்கமாக இல்லாமல் இருக்கலாம்” என்று காமராஜரும் திராவிடர் இயக்கத்தலைவர்கள் வரிசையில் வைக்கத் தக்கவர்தான் என்று உணர்த்தினார். இதையொட்டி, ''உலகநாடுகளில் கல்வியை ஏகபோக உரிமையாக்கிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த நாட்டில்தான், கல்வியை கற்பதற்கு தண்டனைகள் கொடுத்தார்கள்” என்று அண்ணல் அம்பேத்கர் சொன்ன கருத்தைச் சுட்டிக்காட்டினார். “அதுதானே மனுதர்மம்?” என்று அம்பேத்கர் கருத்துக்கு ஆழம் சேர்த்தார். பேச்சைத் தொடங்குவதற்கு முன் புதிதாக இளைஞர்கள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டதை சொல்லி, “எந்த எதிர்பார்ப்பும் இல் லாமல் திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் எராளமாக இணைகிறார்கள் என்றால், இந்த சமூகஅநீதியை விரட்டியடிக்க பெரியார் என்ற ஆயுதம் தேவை என்று இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என்று மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். தொடர்ந்து, “மனுதர்மப்படி ஆறாம் ஜாதியாக இருக்கக்கூடிய எல்லாப் பெண்களும் படிக்கக்கூடாது என்று இருந்த நிலையில், இந்த ஊரில் ஒரு நகரசபைத் தலைவராக ஒரு பெண் வந்திருக்கிறார் என்றால், பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார் என்று பொருள்” என்று அழுத்திச் சொன்னதும் மக்கள் உணர்ச்சியுடன் கரவொலி செய்தனர். வரலாற்றில் முன்நோக்கிச் சென்று, 102 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்வியில் நமது நிலை என்னவென்று விவரித்தார். அதிலிருந்து விடுபட்டு வெற்றி பெற்ற திராவிடர் இயக்கத்தின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

 ”இப்போது மீண்டும் அதே மனுதர்ம  சூழ்ச்சிதான் நீட் வடிவில் வந்துள்ளது” என்றார். அரசமைப்புச் சட்டப்படி நமக்குள்ள வாய்ப்புகளை ஆதாரங் களுடனும், எடுத்துக்காட்டுகளுடன் புரியவைத்தார். ''இந்தக் கல்வித்திட்டத்தை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.” என்று அம்பலப்படுத்தினார். ''இது அமலுக்கு வந்தால் நமது பிள்ளைகள் இனிமேல் படிக்கவே முடியாது” என்று அதன் ஆபத்தையும், நடைமுறை சிக்கல்களையும் எடுத்துரைத்தார். 

தொடர்ந்து, “இதை மாற்றுகின்ற ஆற்றல் இந்த கூட்டணிக்கு உண்டு.” என்று பலத்த கரவொலி களுக்கிடையே அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அரசமைப்புச் சட்டம் நமக்கு ஆதரவாக இருப்பதைக் கூறி, சட்டத்திருத்தம் 21 ஏ பிரிவை படித்துக் காட்டினார். அதற்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங், கலைஞர், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோர் காரணமாக இருந்ததை விவரித்தார். இந்த கல்வித் திட்டங்களை கண்ணிவெடிகளோடு ஒப்பிட்டார். இதனால் பயனடைவது அதானி, அம்பானிதான் என்று எச்சரித்தார். ஆகவே ''கரோனாவைவிட கொடுமையான இந்தத் தேர்வுகளில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

இந்த பரப்புரை கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.கழக பொறுப்பாளர் எம்.பூபதி,  திருத்தணி நகர் மன்ற துணை தலைவர் சாமி ராஜ், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோபால், வி.சி.க.மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், வி.சி.க. மாவட்ட பொருளாளர் நேரு, வி.சி.க.நகர செயலாளர் சுப்பிரமணி, திருத்தணி நகர தி.மு.க.செயலாளர் வினோத்குமார் பள்ளிப்பட்டு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சீனிவாசன், சி.பி.எம்.திருத்தணி செய லாளர் அந்தோணி, சி.பி.எம்.மாவட்டக்குழு உறுப்பி னர் அப்சல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முடிவில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

அரக்கோணம்

திருத்தணி தோழர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அரக்கோணம் நோக்கி பயணம் செய்து உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். 

வழியில் பேண்டு வாத்தியத்துடன் தீப்பந்தங் களுடன் கூடிய சிலம்பாட்டம் ஆடி மிகச்சிறப்பான வரவேற்பை அரக்கோணம் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். எழுச்சிகரமான ஒலி முழக்கங் களுடன் தமிழர் தலைவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மேடையேறினார். 

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பெரும் பயணக் கூட்டம்  அரக்கோணம் அம்பேத்கர் வளைவு அருகில் மாவட்ட தலைவர் ‌‌‌‌‌சுலோகநாதன். தலைமையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் பு.எல்லப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட அமைப்பாளர் ஜீவன் தாஸ், பொதுக்குழு உறுப்பினர் சூரியகுமார், நகர தலைவர் சோமசுந்தரம், மாவட்ட துணை தலைவர் தீனதயாளன், மேனாள் மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட துணை தலை வர் பொன்.வெங்கடேசன், காஞ்சிபுரம் மண்டல செய லாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ.மதிவதனி, கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

இறுதியாக தமிழர் தலைவர் பேசினார். 

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் உரை வருமாறு:

''நீண்ட நெடிய பயணத்தில் ஏற்பட்டிருக்கும் வலிகள், உங்களைப் பார்த்தவுடன், நீங்கள் அளித் திருக்கும் வரவேற்பைக் கண்டபிறகு, அந்த வலிக ளெல்லாம் காணாமல் போய்விட்டன” என்றே தொடங்கினார். தமிழ்நாட்டில் நடைபெறுவது 'திராவிட மாடல்' என்று சொல்லிவிட்டு, “மனிதனுக்கு கல்வி, சுகாதாரம் இரண்டும்தான் முக்கியம். கல்வி மூளைக்கு! சுகாதாரம் உடலுக்கு! இந்த இரண்டையும் கொடுத்ததுதான் திராவிட மாடல்” என்று மக்களுக்கு தெளிவு படுத்தினார். 

''இது மற்ற மாநிலங்களில் உண்டா?'' என்று கேள்வி கேட்டார். தொடர்ந்து, ''இந்து மதத்தில் கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று ஒரு பெண்ணை வைத்துகொண்டு, பெண்கள் படிக்கக்கூடாதுன்னு வச்சிருந்தானே? அதை மாற்றி அமைத்தது திராவிடர் இயக்கம்தானே?'' என்று பதிலையும் கேள்வி ஆக்கி னார். மக்கள் சிரித்தபடியே கரவொலி செய்தனர். திராவிட இயக்கத்தின் 102 ஆண்டு கால வரலாற்றில் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவரித்தார். மொழி பற்றி பேச்சு வந்தபோது, “எங்கள் மொழி செம்மொழி; நீங்கள் வந்தேறியா வந்துட்டு; அதுவும் 3 விழுக்காடுதான்; இங்கேயே இருந்துகிட்டு; கல் தோன்றி மண் தோன்றிய காலத்தே முண் தோன்றியது என்று பெருமை படக்கூடிய மொழியான தமிழையும் கோயிலுக்குள்ளே விடவில்லை. தமிழனையும் கோயிலுக்குள்ளே விடவில்லை. அதை மாற்றிக்காட்டியது இன்றைக்கிருக்கிற திராவிடர் இயக்கம்தானே?” என்று கோபம் கலந்து பேசியதும் கைதட்டல் மிகுந்தது. “இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்று கைதட்டல் முடியும் வரை ஒரு இடைவெளி விட்டு சொன்னதும், பளிச்சென்று புரிந்துகொண்ட மக்கள் மறுபடியும் கரவொலி செய்தனர். அரியலூர் அனிதா கண்ட மருத்துவக் கனவை உருக்கத்துடன் சொல்லி, அவ்வளவு எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர்களும் மருத்துவர் ஆகக்கூடிய திராவிட மாடலை சொல்லாமல் சொன்னார். 

''33 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு இன்னமும் நாடாளுமன்றத்தில் ஊறுகாய் ஜாடியில் இருக்கும் போது, கேட்காமலேயே 50 விழுக்காடு கொடுத்ததே திராவிட மாடல் ஆட்சிதானே? என்று சொல்லி, திராவிட மாடலின் பெருமையை பெருக்கிக்காட்டினார். “அதில் பூத்த மாலர்கள்தானே இங்கே மேடையில் இருக்கிறார்கள்? செங்கல்பட்டு மாநாட்டின் தீர்மானங்களின் வெற்றிதானே இது?” என்று அடுக்கிக்கொண்டே போனார். மக்களும் இடைவெளி விடாமல் கைதட்டினர். இறுதியாக, “இந்த பத்தாம் பசலித்தனத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்” என்று எச்சரித்து உரையை நிறைவு செய்தார். 

தொடர்ந்து அரக்கோணத்தில் வெற்றிபெற்ற 27 நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் தலைவர் ஆடை அணிவித்து மரியாதை செய்தார். 

பங்கேற்றோர்

இந்த பரப்புரை கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈசுவரப்பன், நகர்மன்றத் தலைவர் இலட்சுமி பாரி, நகர்மன்றத் துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகர தி.மு.க.செயலாளர் ஜோதி, தி.மு.க.மாவட்ட பொருளாளர் கண்ணையன், மாவட்ட  தி.மு.க.துணை செயலாளர் ராஜ்குமார், நகர தி.மு.க.துணை செயலாளர் அன்பு லாரன்ஸ், காங்கிரசு கட்சி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார், வி.சி.க. மாவட்ட செயலாளர் கவுதம், சி.பி.எம்.நெமிலி பொறுப்பாளர் வெங்கடேசன்,  சி.பி.எம். பொறுப்பாளர் சீனிவாசன், ம.தி.மு.க. பொறுப்பாளர்கள் ஆறுமுகம், ஞானப்பிரகாசம், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அரிதாசு, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் புருஷோத்தமன், தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர் தாமோதரன், தலித் மக்கள் முன்னணி பொறுப்பாளர் மோகன் கழக அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர கழக செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார்.

இந்தத் தொடர் பரப்புரை பயணத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரக்கோணம் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தோழர்களுடன் சென்னை நோக்கிப் புறப்பட்டார். இரவு 11:30 மணிக்கு இரவு உணவு முடித்துக்கொண்டு, அதிகாலை 1 மணிக்கு மேல் இல்லம் வந்தடைந்தார்.

No comments:

Post a Comment