ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 12, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி:
கூட்டணி தர்மம் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பொறுப்புக்குத் திடீரென ஒருவரைத் திணிப்பதால் உள்ளாட்சி அமைப்புகளின் சுதந்திரமும், ஜனநாயகமும் பாதிக்கப்படுமல்லவா?

- ஆசைத்தம்பி, கோரைக்குழி

பதில்: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று போட்டி போட்டுள்ள நிலையில், வெற்றி வரும்போது கூட்டணியினருடன் -

1. இணைந்து பகிர்ந்து கொள்ளுதலே சிறந்தது (பகுத்துண்டு வாழும் பாங்கு - ஜனநாயகமும் ஆகும்).

2. தலைமை எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்பட்டே வெற்றி பெற்ற கட்சியினர் செயல்படுவதே கட்டுப்பாடு - பொது ஒழுக்கம் ஆகும்.

3. தங்களது வெற்றி சிறப்பாக உள்ளாட்சியில் அனைவருக்கும் பயன்படுதல் அவசியம். கூட்டுக் குடும்பத்தில் பகிர்வது போல!

- - - - -

கேள்வி:  உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதா?

-தமிழ்ச்செல்வன், சிறுபாக்கம்

பதில்: முதல் அமைச்சர் முழு முயற்சி செய்கிறார்; முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை; வெற்றி பெறும் என்று நம்புவோமாக!

- - - - -

கேள்வி: புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள் பள்ளிக் கல்வித் துறையால் புகுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

- சங்கர் அப்பாசாமி, திருமுடிவாக்கம்.

பதில்: இந்தக் கேள்வியையும் பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களுக்கே அர்ப்பணிக்கிறோம்.

- - - - -

கேள்வி:  பாதுகாப்பு என்ற பெயரால் தமிழ்நாடு மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிக்கும்போது, இந்திய - ஒன்றியக் கடலோரப் பாதுகாப்புப் படை ஏன் தடுக்க முடியாமல் உள்ளது?

- முல்லைகோ, பெங்களூரு

பதில்: இந்திய ஒன்றிய கடலோரப் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றுவதற்குப் பதிலாக சிற்சில நேரங்களில் நமது மீனவர்களைத் தாக்கிடும் செய்திகள் வெளிவருவது வேதனைக்குரியதே, விடியல் எப்போதோ?

- - - - -

கேள்வி:  “இனப் பகைவர்கள் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசைமாரிப் பொழிந்தாலும் பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் வாளும் கேடயமுமாக தமிழ் இனத்தைத் திமுக என்றும் காக்கும்“ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மார்ச் 6 அன்று உறுதி மேற்கொண்டது - அவர் சரியான திசையில் - பாதையில் பயணிக்கிறார் என்பதற்கு சரியான சான்று அல்லவா?

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

பதில்:அதனால்தான் ஆரியமும் - ஆர்.எஸ்.எஸ்.சும் - முதலமைச்சரை சாராத வண்ணம் உள்ளனர் - புரிகிறதா? 

ஈரோட்டுப் பாதைதான் அவரது பாதை, அது எப்போதும் சரியான பாதை தானே!

- - - - -

கேள்வி: ஏற்கனவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் மக்கள் அவதிப்படும் அவலநிலையில், தற்போது சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்குக் கூடுதல் வரி விதிக்க நிதி ஆயோக்  ஆலோசிப்பதாக வரும் செய்தி ஏழை எளிய மக்களுக்கு நேர்ந்த பேரிடி அல்லவா?

- கே. காமராஜ், செய்யாறு

பதில்: உண்மையான ஏழைகளுக்காகவா ஒன்றிய அரசு உள்ளது? அம்பானி, அதானி போன்ற - அதுவும் கரோனா கொடுந்தொற்றுக் காலத்திலேகூட நாள் ஒன்றுக்கு “வெறும்“ ஆயிரம் கோடி   ரூபாய் மட்டுமே சம்பாதித்த ஏழைகள்(!) நலன்களைக் காக்கவேதான் உள்ளது! புரிகிறதா?

- - - - -

கேள்வி:  உக்ரைன் - ரஷ்யப் போரால்  மாணவர்களுக்கு நேர்ந்த இன்னல்களைக் கருத்தில் கொண்டு ‘நீட்’ எனும் கொடுவாளை ஒழிக்க ஒன்றிய-மாநில அரசுகள் முன்வருமா?

 - ச. சாந்தி, கரூர்.

பதில்: இப்போதுதான் கருநாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் கண் திறக்கத் தொடங்கி உள்ளன. விரைவில் அந்த வட்டம் விரியும். உண்மை வெல்ல எப்போதும் சற்று காலதாமதம் ஆகும்தானே!

- - - - -

கேள்வி: தெலங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறையா?

- க. வெற்றி, கன்னியாகுமரி.

பதில்: டெக்னிக்கலா - சட்டப்படி அத்தொடர் கலைக்கப்படாமல் நடந்துள்ள நிலையில், அது சட்டப்படியே சாத்தியமாயிற்று!

முதன் முறையாக எத்தனையோ விஷயங்கள் அரசியல் வானில் அன்றாடம் நடைபெறுகின்றன. அதில் இதுவும் ஒன்று!

No comments:

Post a Comment