இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (9) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 26, 2022

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (9)

 இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (9)

அம்மா அவர்கள் உடல்நலக்குறைவுடன் சென்னை, பொது மருத்துவமனையில் வழக்கமாக அவர் சிகிச்சை பெறும் தனிவார்டில் இருந்தபோது, திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்தில் இருந்த ஒரு பெண்ணை (சுமார் 14 வயதிருக்கும்) காண வில்லை என்று அலைந்து திரிந்து பார்த்து, அப்போது அங்கே பொறுப்பேற்றிருந்த பெரியார் மாளிகை நிர்வாகி அவர்கள் இதனை ஓரிரு நாள் பொறுத்தே என்னிடம் சொன்னார். அம்மாவின் இந்த உடல் நிலையில், அவரிடம் சொல்வதா, சொல்லாமல் இருப்பதா என்ற குழப்பம்  - திருச்சியில் இருப்பவர்களுக்கும் இங்கே இருந்த சில நண்பர்களுக்கும் இருந்தது. 

நான் நன்கு யோசித்த பிறகு, அம்மாவிடம் இதை மறைக்கக் கூடாது; இதை சாதாரணமாக அம்மா எடுத்துக் கொள்ளமாட்டார். மிகவும் வேதனைப்படுவார். நாம் அனைவருமே அதற்கு பொறுப்பேற்கவேண்டிய “குற்ற வாளிகள்” ஆகிவிடுவோம் - என்று பக்குவமாக இதனை அம்மாவிடம் தெரிவித்துவிடலாம் என்று முடிவு எடுத்து பக்குவமாக தெரிவிக்க - அம்மா மிகவும் வருத்தமும், கோபமும், சோகமும் அடைந்தார்.

"ஏன் அவர் (திருச்சியில் இருக்கிறவர்) என்ன செய்தார்? உடனடியாக தகவல்களைத் திரட்டி ஓரிரு நாட்களுக்குள் எனக்குத் தெரிவித்து, மேல் நடவடிக்கைக்கான ஆலோசனை நடத்த வேண்டும்" என்றார். டாக்டரிடம் அனுமதி பெற்று திடலுக்கே வந்து தங்கினார்.

அடுத்த நாள் ஒரு தகவல் திருச்சியிலிருந்து கிடைத்தது. இல்லத்திலிருந்து வெளியே சென்ற அந்தப்  பெண்ணை சிலர் அழைத்துச் சென்று அங்கே ஒருவர்  - அதிகாரி - வீட்டில் வேலை செய்ய விட்டதாக கசிந்தது அத்தகவல்.

உடனே அம்மா பல பேர்களை திருச்சியில் தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு முழு விவரங்களைத் திரட்டச் சொன்னார் - அந்த உடல் நிலையிலும்கூட!

இரண்டாம் நாள் அங்கிருந்த ஒரு அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து சென்னையில் உள்ள அவரது நண்பராகவோ, உறவினராகவோ உள்ள ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி வீட்டிற்கு இந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விட்டதாக முன்பு தகவல் சொன்னவர்கள் கூடுதல் தகவலாக இதனைச் சொன்னார்கள்!

தமிழ்நாடு அரசின் முக்கிய மூத்த அய்.ஏ.எஸ்சின் உதவியாளர் வீட்டில் அண்ணா நகரில் பணியில்  இருக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன், அம்மா என்னையும் நிர்வாகி சம்பந்தம் அவர்களையும் அழைத்து, இங்கே போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் ஒரு பிராது கொடுக்கச் சொல்லியதோடு, வழக்குரைஞர்களை - சென்னையில் இருப்பவர் களையும் உடனடியாக அழைத்து வரும்படி எங்களுக்கு ஆணையிட்டார் - கோபம் குறையாத நிலையில்! உடனே ஏற்பாடு செய்தோம். தமிழ்நாடு அரசில் அந்த அதிகாரி மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி என்பதால், சென்னை நகர போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை மெத்தனமாக நத்தை வேகத்தில் நகர்ந்த நிலையிலேயே இருந்தது.

இதை நாங்கள் புரிந்து கொண்டோம் - அம்மா நாளும் எங்களைத் துளைத்துக் கேள்வி மேல் கேள்வி கேட்டும் பரபரப்புக் குறையாமல் இருந்தார்.

அந்தப் பெண் குழந்தையை கண்டுபிடித்தாக வேண்டும் - திரும்பக் கொண்டுவந்து குழந்தைகள் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்பதைவிட, அந்த நிகழ்வு அம்மாவுக்கு அதிக கவலை, மன உளச்சலை ஏற்படுத்தி, அவரது உடல்நிலையை மோசமாக்கி விடக் கூடாதே என்ற 'இரட்டைக் கவலையில் பூட்டப்பட்டவர்களானோம் - நாங்கள்!'

அம்மாவிடம் நெருங்க அச்சப்பட்டு - சற்று ஒதுங்கி அந்த சில நாட்கள் நடந்தோம்.

அம்மா, வழக்குரைஞர்களிடம் சட்ட நட வடிக்கை மேற்கொள்ள வற்புறுத்தினார்கள்.

பிணீதீமீணீs சிஷீக்ஷீஜீus என்ற ‘ஆட்கொணர்வு மனு' வழக்கு 'ரிட்' ஒன்றை அம்மாவை மனுதாரராக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது வழக்குரை ஞர்கள் போட்டார்கள்.

அப்போது பொறுப்புத் தலைமை நீதிபதி (குஜராத்திற்கு செல்லும் முன்பு) இருந்த ஜஸ்டீஸ் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், ஜஸ்டீஸ் ஏ.வரதராசன் ஆகியோர் அமர்வு உடன் விசாரித்து காவல் துறையினருக்கு கடும் ஆணை வழங்கி "இரண்டொரு நாளில் கண்டிப்பாக நேரில் அப் பெண் குழந்தையை எங்கள் முன் - இந்த உயர்நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்" என்று தீர்ப்புரை - ஆணை வழங்கினர்.

காவல்துறையினர் உடனடியாக அங்கே சென்று அந்தப் பெண்ணை கொணர்ந்து சேர்த்து விட்டார்கள். அந்தப் பெண் அழுது புலம்பியது அம்மாவை நேரில் பார்த்தபோது - அம்மாவும் கண்ணீருடன் அது திரும்பி வந்தது குறித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நாங்களும் தப்பித்தோம்!

அதற்குப் பிறகு எனது தலைமையில் திருமண மாகி, இரண்டு பெண் குழந்தைகள் நன்கு படித்து தற்போது பெங்களூரில் ‘செட்டிலாகி' இருக்கிறார்கள்! பாசம் மாறாமல் எங்களிடமும் இல்லக் காப்பாளர் தங்காத்தாளிடமும் தொடர்புடன் இருக்கிறார்!

சில மாதங்களில் அம்மா மறைந்த நிலையில், திடலுக்கு வந்து அந்த இரண்டு மாண்பமை நீதிபதிகளும் - அம்மாவிற்கு மலர் வளையம் வைத்தபோது, அந்தக் குழந்தையை ஆட் கொணர்வில் கொண்டு வந்து அம்மாவுக்கு நிம்மதியை தங்கள் ஆணை மூலம் தர முடிந்தது - பற்றிக் கூறிக்கொண்டே இரங்கலையும் ஆறுதலையும் எங்களிடம் கூறினார்கள்!

பெற்றால்தான் பிள்ளையா? - இப்படி துடிதுடித்து காத்த தாய் அல்லவா அவர்!

- புரிகிறதல்லவா, இப்போது அன்னையின் பாசம் எப்படி அளவற்றது என்பது!

No comments:

Post a Comment