நல்ல உள்ளம் - நல்ல உடல் நலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 26, 2022

நல்ல உள்ளம் - நல்ல உடல் நலம்!

திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை அமைப்பு களின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் காணொலி மூலம் நேற்று (25.3.2022) மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.

பேசிய மகளிர் அனைவரும் ஆக்கப் பூர்வமான கருத் துகளை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்து வைத்த கருத்துகள் முக்கியமானவை.

(1) குடும்பத்தில் குழந்தைப் பருவம் முதல் தந்தை பெரியார் கொள்கைகளை ஊட்டி வளர்க்க வேண்டும்.

(2) குடும்பத்தோடு இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

(3) 'வீடு தோறும் விடுதலை' என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். 5000 பேர் தீவிரத் தொண்டர்கள் பொறுப்பா ளர்கள் என்றால் தலைக்கு 12  சந்தா என்றால் 60 ஆயிரம் சந்தாக்கள் எளிதில் சேரும்.

(4) பழைமையில் மூழ்கியுள்ள மக்களிடத்தில் எடுத்த எடுப்பிலேயே கடவுள் மறுப்புப் போன்றவற்றைப் பேசு வதைத் தவிர்க்க வேண்டும்.

(5) குணம் கொள்கை என்று வகுத்துக் கொள்ள வேண்டும்.

(6) பண்போடு மற்றவர்களிடம் பழக வேண்டும்.

(7) தொண்டினை முதலில் முன்னிறுத்த வேண்டும் அதுதான் தொண்டறம் என்பது.

(8) சுற்றி உள்ளவர்களிடம் நல்ல தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்திட வேண்டும். நம்மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்ட நிலையில், நமது கொள்கைகளைப் படிப்படியாக, மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் உற்றார் உறவினர்களிடமும் சுற்றத் தாரிடமும், சூழ்ந்துள்ள அக்கம் பக்கத்தாரிடமும் வெளிப் படையாக கோபப்படாமல் எடுத்துரைக்க வேண்டும்.

(9) கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களின் பண்பு, தொண்டுள்ளம் எத்தகையது என்பதை மாற்று நம்பிக்கையில் உள்ளவர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.

(10) மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்கள் மூடநம்பிக்கைவாதிகளாக இருந்தால் அந்தச் சமூகம் எப்படி வளர்ச்சி பெறும்?

("பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது." - தந்தை பெரியார் - 'குடிஅரசு' 16.6.1935 பக்கம் 7)

(11) கழக மகளிர் சந்திப்பு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நடக்க வேண்டும்.

(12) நாட்டில் பாலியல் வன்கொடுமை நாளும் அதிகரித்து வருகிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

(13) பெண்களுக்குக் கராத்தே முதலிய பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். (பெண்களுக்குத் துப்பாக்கி உரிமம் அளிக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே திரா விடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது).

(14) ஒழுக்கத்திற்கு முதலிடம் ('பக்தி தனிச் சொத்து  - ஒழுக்கம் பொதுச் சொத்து" - தந்தை பெரியார்).

(15) பெண் கல்வி மிகவும் முக்கியம். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் முதலில் பெண்ணுக்குக் கல்வி கற்பிக்க முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே சிறப்படையும் - அதனால் தான் தந்தை பெரியார் அவ்வாறு கூறினார். 

("பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகவே!" - தந்தை பெரியார் - குடிஅரசு 16.11.1930 பக்கம் 7)

(16) இருபால், முப்பால் மாணவத் தோழர்களையும் சந்தித்து இயக்கத்தின்பால் ஈர்க்க வேண்டும்.

(17)  வெறும் ஏட்டுக் கல்வி மாற்றத்தைக் கொண்டு வராது. பகுத்தறிவுதான் முன்னேற்றத்தின் படிக்கட்டு. 

(18) கரோனா காலத்தில் காணொலி மூலம் இணைந்த மாணவர்கள், இளைஞர்களோடு தொடர்பு கொண்டு, அடுத்த தலைமுறையினரை இயக்கத்திற்குப் பயன்பாட்டுக்கு ஆற்றுப்படுத்த வேண்டும்.

(19) நல்ல உள்ளம் - நல்ல உடல் நலம் முக்கியமானது.

(20) தொலைக்காட்சி என்பது தொல்லைக்காட்சியாக மாறக் கூடிய ஆபத்து - நாள் முழுவதும் அதில் காலத்தைக் கழிக்கக் கூடாது.

(21) சமூக வலைதளங்களில் நமக்கு எதிராக தவறாக வெளியாகும் தகவல்கள் கருத்துகளுக்கு அவ்வப்போது சுடச்சுட பதில் அளிக்க முன் வர வேண்டும்.

(22) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கழகத் தலைவரின் கருத்துகளும், வழிகாட்டு தலும் நம் இயக்கத்திற்கு குறிப்பாகப் பெண்களுக்கு பயன் படக் கூடிய அரிய கருத்துக்கள். சிந்திப்பீர்!

No comments:

Post a Comment