கடவுளும் மதமும் -1 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 18, 2022

கடவுளும் மதமும் -1

16.04.1949 - குடிஅரசிலிருந்து... 

குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)

சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு, அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு, மக்களுக்குள் தானாகவே ஒருவிதக் குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை நாம் நன்றாய் உணர்ந்து வருகின்றோம். அதோடு கூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில், அரசியல், தேசியம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும், சமயம், புராணம், பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும் இவ்வியக்கத்தை எதிர்க்க கடவுளையும், மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக்கொண்டும் விஷமப் பிரசாரம் செய்து வருவதனாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக்கொண்ட உண்மை நண்பர்களில் சிலர், இவ்விஷமப் பிரசாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சில பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும், நமது நிலையையும், கடவுள், மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கிவிட வேண்டுமென்பதாகக் கருதி இதனை எழுதப் புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன் பல தடவை பேசியும், எழுதியுமிருக்கின்றோம். ஆயினும் அவைகளைவிட இது சற்று தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவுசெய்து இதைச் சற்று நிதானமாகவும், கவனமாகவும் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். இந்த முதல் பகுதியானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரையின்போது நம்மால் எடுத்துச் சொல்லப்பட்டதை அனுசரித்தும், சில நண்பர்கள் அதை விளக்கி எழுதும்படி சொன்னதை ஆதரித்தும் எழுதப்பட்டதாகும்.

நமது கவலை?

முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும், கொண்டு வந்து குறுக்கே போட்டுவிட்டால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றே ஒழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.

அதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படியெனில் சில சைவத் தலைவர்கள் நமக்கு எதிராகத் தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும், ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியாரென்றும் கூறிக்கொண்டு அவ்வார்த்தைகளையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு, அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப்போர் தொடுக்க ஆரம்பித்ததின் பலனாய், சைவ சமயம் என்பதும் சமயாச்சாரியர்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது.

என்ன? எப்படி? எதனால்?

இன்றைய தினம் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும், சமயப் பற்றும் கொண்டவன் என்றும், மற்றவர்கள் நாத்திகர்கள் - சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு, அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது.

இது எப்படி இருந்தபோதிலும், கடவுள், மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும், இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினால் உண்டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும், இவற்றில் நமது அதாவது மக்கள் - கடமை என்ன என்பது பற்றியும் சற்று ஆலோசித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். 

அதைப்பற்றி முதலாவதாக இங்கு குணம், உருவம், பெயர் அற்ற தன்மைகளையுடைய கடவுள் என்பதைப் பற்றியும், மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே இங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர, மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப்பிரிவுகளான கிறிஸ்தவ, இஸ்லாமிய, சைன, பவுத்த, சீக்கிய, சைவ, வைணவ, ஸ்மார்த்த, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங்களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாகப் பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை. 

ஏனெனில், அவற்றிற்கு ஏற்கெனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்தும், நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்குள் புகுந்துமே தான், ஒவ்வொருவரும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர்களையோ, அவதாரங்களையோ, சமயங்களையோ, சமயாச்சாரியார்களையோ காப்பாற்றிக்கொள்ள முடிந்ததேயொழிய அறிவின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலகம் அறிந்ததாகும். ஆதலால் இப்பகுதியில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

சக்தி என்பது எது?

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது? எப்படி ஏற்பட்டது? என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் செய்யப்பட்டு இருக்கவேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது.  

 

No comments:

Post a Comment