நாட்டைப் பிளவுபடுத்துவோர் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 18, 2022

நாட்டைப் பிளவுபடுத்துவோர் யார்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நடைபெற்று வருகிறதுமக்கள வையில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் மக்களவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பதிலளித்து வருகிறார்.

இந்த விவாதத்தின்போது, தி.மு.. மக்களவை உறுப்பினர் கனிமொழி  ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழி லாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசப் பொருள்களை விநியோகித்து வருகிறோம். அப்படியிருக்கும்போது, அவர்களுக்கு வழங்கப் படும் ரேஷன் பொருட்களுக்கான நிதியை ஒதுக்குவது யார் என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழியின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஹிந்தியில் பதில் அளித்தார். அதற்கு கனிமொழி  எம்.பி. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தான் ஆங்கிலத்தில் பேசும்போது, அதற்கு ஹிந்தியில் பதில் அளிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று கடுமையாக சாடியதுடன்,  உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரியும். நான் ஆங்கிலத்தில்தான் கேள்வி கேட்டேன்.  நீங்களும் ஆங்கிலத்தில் பதில் கூறுங்கள். ஹிந்தியில் பேசினால் எனக்குச் சரியாக புரியாது எனத் தெரிவித்தார். அதனால் ஆங்கிலத்தில் பதில் அளியுங்கள், அல்லது தமிழில் பதில் அளியுங்கள் என்று வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து, ஒன்றியஅமைச்சர் பியூஸ் கோயல், தான், சகோதரியை மதிப்பதாக கூறி ஆங்கிலத்தில் பதிலளித்தார். அப்போது, புலம்பெயர் தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான நிதியை ஒன்றியஅரசு வழங்கும் என்று கூறினார்.

'கொட்டினால் தான் தேள்' என்பார்கள். கவிஞர் கனிமொழி கேள்வி எழுப்பியது ஆங்கிலத்தில் தானே! சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு ஆங்கிலம் தெரிந்தும், இந்தியில் பதில் அளித்தது ஏன்? அகம்பாவமாக இருக்க வேண்டும் அல்லது இந்தி வெறியராக இருக்க வேண்டும்.

கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டி, ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட தனது கேள்விக்கு ஒன்றிய அமைச்சரை ஆங்கிலத் திலேயே பதில் சொல்ல வைத்தது - சரியான அணுகு முறையே!

ஒரே நாடு, ஒரே மொழி என்று சொல்கிறவர்களின் நோக்கம் இப்பொழுது புரிகிறதா? இப்பொழுதுகூட வட மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி மொழியில் உரையாடல்கள் அனுமதிக்கப் படுகின்றன - ஆனால் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழில் உரையாடல்கள், விவாதங்கள் நடைபெற அனுமதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தும், அதற்கு அனுமதி கிடைக்கப் பெற வில்லை. இதுதான் ஒற்றைத் தேசியமா? நாட்டைப் பிளவுப்படுத்துபவர்கள் யார்? வடக்கரா, தெற்கரா? சிந்திப்பீர்.

No comments:

Post a Comment