இவர்தான் அன்னை மணியம்மையார்! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 18, 2022

இவர்தான் அன்னை மணியம்மையார்! (2)

 இவர்தான் அன்னை மணியம்மையார்! (2)

கழகத் தலைவரான பின் ஒரு நாள் என்னிடம் கேட்ட கேள்வி பற்றி நேற்று (17.3.2022) எழுதி முடித்திருந்தேன்.

"ஏனப்பா நீ என்னிடம் முன்பு மாதிரியில்லாமல் சற்று தள்ளியே விலகி இருப்பதாக உணர்கிறேன். என்ன காரணம்?" என்று கேட்டு விட்டார்.

எனக்கு இது ஒரு வகையான 'இக்கட்டை'த் தந்தது - விடையளிப்பது - அவரிடத்தில் உண்மையை மறைப்பது சரியல்ல, அதே நேரத்தில் வேறு காரணம் - 'அதெல்லாம் ஒண்ணுமில்லே சும்மா' என்று கூறி அவரிடம் தப்பித்துக் கொள்ள வும் முடியாது. காரணம் அவர் எதையும் கூர்ந்து கவனித்து, துல்லியமாக எடை போட்டுக் கணிப் பவர் அம்மா. மேலும்  நான் அய்யாவிடமோ, அம்மாவிடமோ எதையும் மறைத்துப் பேசிய வனே இல்லை.

சில விடயங்களில் மாறுபட்ட ஒரு கருத்து எனக்கு வந்து, அதுபற்றி அய்யாவோ, அம்மாவோ என்னை அழைத்துக் கேட்டால் - அது என் 'வீட்டு குடும்ப விடயமாக' இருந்தாலும்கூட - உள்ளதை உள்ளபடியே பேசும் சுபாவமுடையவன் - அவர்கள் இருவருக்குமே நன்கு தெரியும்.

நான் அம்மாவிடம், "ஒண்ணுமில்லேம்மா, அது தாங்கள் இயக்கத்திற்கு தலைவராக பொறுப்பேற்று விட்ட நிலையில், இயக்கத்தில் நான் பொதுச் செயலாளர்; உங்களது ஆசிரியத் தலைமைக்குக் கீழே பணிபுரியும் பொறுப்பு ஆசிரியர் நான் விடுதலைக்கு. எனவே நான் அப்படி உணர்ந்து நடந்து கொள்ளுவதும்  - தலைவர் தொண்டன் உறவு முதலில்; அம்மா - பிள்ளை உறவு அடுத்ததே; உங்களிடம் நான் முன்புபோல வீட்டு உரிமையை - நாட்டுத் தலைவரையே நிர்ணயிக்கும் ஒரு  இயக்கத்தின் தலைவர். அதனாலே தான் பொது வாழ்வு - தன் வாழ்வு என்று தங்களுக்கோ, அய்யாவுக்கோ பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒன்றி விட்ட நிலையில் தலைவருக்குத் தொண்டன் என்பது தானே முக்கியம் - முன்னுரிமை. அம்மாவுக்குப் பிள்ளை என்ற பாசம் எப்போதும் உண்டென்றாலும், அதன் காரணமாக எந்தத் தருணத்திலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது (I Should not take special advantage) என்ற உறுதியான - தெளிவான நிலைப்பாட்டை" நான் கூறினேன். நான் 6.1.1974 முதலே எனது மனதுக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டு அதன்படி சற்றுத் தள்ளி பழகியதைக் கண்டுபிடித்துத் தான் தலைவர் - அம்மா என்னிடம் கேட்டு விட்டார்.

அம்மா தன் கண்களில் வழிந்த கண்ணீரோடு எனது பதிலைக் கேட்டு நகர்ந்து விட்டார். பதிலே சொல்லவில்லை. அப்போது எனது கண்களில் வழிந்த "கண்ணீர்த் துளிகள்" அதிகம்; அதையும் துடைத்துக் கொண்டே தொடர்ந்தேன் என் பணியை.

1978 மார்ச் 16ஆம் தேதி வரை அதாவது அம்மா மறைவு வரை அந்த இராணுவக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்கத் தவறவில்லை. அம்மா - பிள்ளை உறவும், பாசமும் எப்போதும் வற்றாத அடி நீரோட்டமாகவே இருந்தது.

'உன் அம்மா' என்று பாசப் பொழிவாக அம்மா எழுதிய கடிதங்களை எடுத்துப் படித்து பழைய நினைவுகளை அவரது வற்றாத கருணை மழையை நினைத்து ஏங்கி - அவர் மறைவுக்குப் பின் ஏக்கப் பெருஞ் சுமையுடன் தொடர் பயணத்தை நடத்திடத் தொடர்ந்தேன்.

அம்மாவுக்கு இதய வலி (Cardiac Asthma)  தொல்லை அடிக்கடி வந்து அவரைத் தொல்லைப் படுத்தியதால் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் வார்டு 26Aஇல் ஒரு தனி சிறிய அறையை அம்மாவுக்கு அவரது டாக்டர் செந்தில்நாதன் அவர்கள் ஒதுக்கி சிகிச்சை அளித்து வந்தார்கள். அவருடன் இன்றும் பிரபலமாக உள்ள டாக்டர் திருமலை, டாக்டர் அண்ணாமலைசாமி (தற்போது மதுரையில் உள்ள எனது கெழுதகை நண்பர்  - டாக்டர்) ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

ஒரு நாள்  வழக்கம்போல தனது டாக்டர் குழுவினருடன் அம்மா இருந்த அறைக்கு வந்து, பரிசோதித்து உரையாடத் தொடங்கினார்; மற்றவர்கள் போய் விடுவார்கள். காரணம் அம்மாவிடம் அவரது டாக்டர் திரு. செந்தில்நாதன் சில மணித் துளிகள் கூடுதலாக, நட்பு ரீதியிலான விசாரணை முதலிய பல விடயங்களைப் பேசுவார். நான் அருகில் இருப்பேன்,  ஒரு நாள் அம்மாவைப் பார்த்து டாக்டர்; "ஏம்மா ஏதோ கவலைப்படற மாதிரி தெரியுது. எதுக்கு உங்களுக்கு கவலை - எல்லாந்தான் மற்றவர்கள் நன்கு - அய்யாவுக்குப் பிறகு - உங்களுக்குத் துணையாக இருந்து பார்த்து வர்றாங்களே! ஏன் அநாவசியமா கவலைப்படறீங்க. இதோ ஆசிரியர் தான் பலவேலைகளை உங்களுக்கு உறுதுணையா இருந்து நல்லாத்தானே நடத்துகிறார். "விடுதலை" பேப்பர் நல்லாத்தானே நடக்குது. பள்ளிக்கூடங்கள் எல்லாம் திருச்சியில் நல்லாத்தான் நடக்குதுன்னு கேள்விப்படறேன். எல்லாம் ஆசிரியர் பார்த்துப் பார்; கவலையை விடுங்கம்மா - நிம்மதியா இருங்க" என்றார். 

அதுக்கு அம்மா சிரிச்சுக்கிட்டே, "ஆமா நல்லாத்தான் பார்த்துக்கிறாங்க; ஆனால் என் கவலை அவனைப்பற்றி என்ன தெரியுமா?" என்றார். "சொல்லுங்களேன் எங்கிட்ட" என்றார் சிரிச்சுக்கிட்டே டாக்டர்.

(தொடரும்)

No comments:

Post a Comment