கடவுளும் - கரோனாவும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

கடவுளும் - கரோனாவும்!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. கரோனா, ஒமைக்ரான் பாய்ச்சல் கடும் வேகத்தில் ஒரு பக்கம்; ஆனால் ஆங்கிலப் புத்தாண்டன்று கோவில்களுக்குப் பக்தர்கள் செல்ல முண்டி யடிக்கின்றனர். அரசும் தடை செய்ய அஞ்சும் ஒரு சூழல்.

பக்தி மக்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை எண்ணினால் ஒரு பக்கத்தில் வேதனை - இன்னொரு பக்கத்திலோ இந்த 2022லும் மக்களிடம் பக்திப் போதை தாறுமாறாக ஏறி, தங்களுக்கு மட்டுமல்ல - நாட்டுக்கும் எந்த அளவுக்குக் கெடுதலை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற் கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முதலாவதாக ஆங்கிலப்  புத்தாண்டு பிறப்புக்கும் இந்து மதத்துக்கும் - என்ன சம்பந்தம்? வெள்ளைக்காரர்களை மிலேச்சர்கள் என்று சொன்னவர்கள் தானே இவர்கள்.

இந்த நிலையில் வெள்ளைக்கார ஆங்கிலேயர்களின் புத்தாண்டில் ஹிந்துக் கோயில்களைத் திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கொண்டு இருப்பதன் பொருள் என்ன?

சங்கராச்சாரியார்கள்கூட ஆங்கிலப் புத்தாண்டில் இந்துக் கோயில்களைத் திறக்கக் கூடாது என்று சொன்னதில்லையா?

ஆனால் எந்த இந்துவும் அதனை சட்டை செய்யவில்லை என்பதுதான் எதார்த்தம்!

இந்துக் கோயில்களின் நடையைச் சாத்துவது, திறப்பது என்பதற்கெல்லாம் ஆகமங்கள் உண்டு என்று இவர்கள் பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் செய்தால் அது ஆகமங்களுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று பிளந்து கட்டுகிறார்கள்.

அதே நேரத்தில் இந்துக் கோயில் சம்பிரதாயங்களுக்கும், ஆகமத்துக்கும் விரோதமாக இரவு முழுவதும்  கோயில்களைத் திறந்து வைத்திருப்பது பற்றி மூச்சு விடுவதில்லை.

என்ன காரணம்? வருமானம்தான் - அர்ச்சகர்கள் வயிற்றில் அறுத்துக் கட்டத்தான்!  'காசேதான் கடவுளப்பா!' என்று சும்மாவா சொன்னார்கள்? கோயில் என்பது ஒரு சுரண்டல் நிறுவனம் - ஏற்பாடு, என்று நாம் சொன்னால் 'அய்யய்யோ, நாத்திகம் - நாத்திகம்!' என்று கூப்பாடு போடும் பக்த சிரோன் மணிகள், இப்பொழுது அந்த வாய்களை எங்குக் கொண்டு போய் ஒளிய வைத்துள்ளார்கள்.

ஒரு செய்தி: எல்லா ஏடுகளிலும் படத்துடன் வெளியாகி யுள்ளது. ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டில் அதிகாலை கூட்ட நெரிசலால் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.15 பேர் காயம் அடைந்தனர் என்பதுதான் அந்தச் செய்தி. இதில் ஒன்றும் நமக்குக் கிஞ்சித்தும் மகிழ்ச்சி இல்லை - விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் 'கடவுள் காப்பார்!' என்ற நம்பிக் கையில் பறி போகின்றனவே என்றுதான் பதறுகிறோம்.

திருவிழா நெரிசலில் பக்தர்கள் பலியாவது ஒன்றும் புதிதல்ல. கேரளாவில் அய்யப்பன் கோயிலில் மகரஜோதியன்று கூட்ட நெரிசலில் 15.1.2011 அன்று 64 பேரும், 14.1.2012 அன்று 154 பேரும், மரணம் அடையவில்லையா?

இன்னொன்றையும் - பக்தியை மூளையிலிருந்து கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு, அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும். நாட்டில் எத்தனைக் எத்தனை கோயில்கள் கடவுள்கள், மக்கள் தொகையைவிட அதிகமாக இருக்கின்றன?. பக்திக்கும் குறைவு இல்லை. கரை புரண்டு ஓடுகிறது. இவ்வளவு இருந்தும் மக்களின் உயிர்களைக் கரோனா பலி கொள்கிறதை தடுக்க முடிந்ததா?

கரோனா காலத்தில் கோயில் கதவுகள் சாத்தப்படுகின்றன என்பது எதைக் காட்டுகிறது? கடவுளுக்குச் சக்தியிருந்தால், கோயில் கதவுகளை இழுத்து மூடுவார்களா?

வைகுண்ட ஏகாதசிக்கு வரும் பக்தர்கள்! (திருப்பதி ஏழு மலையான் கோயில் உட்பட) கண்டிப்பாக இரண்டு கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சி இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளதே! இதற்கு என்ன பதில்? தேவஸ்தானம் என்பது நாத்திக அமைப்பாகி விட்டது என்று பக்தர்கள் கூறுவார்களா?

தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் வைகுண்டம் என்ற ஒன்று இல்லையாயினும் சாவூருக்குப் போக வேண்டிய நிலை ஏற்படும் என்ற யதார்த்த நிலை தேவஸ்தானம் போர்டுவரை தெரிந்திருக்கிறதே!

இதில் ஒரு கடைந்தெடுத்த நகைச்சுவை என்னவென்றால், பூரி ஜெகநாதனுக்கே முகக்கவசம் (Mask) அணிவித்துள்ளனர் என்பதுதான்.

கடவுள் உண்டா? பிரார்த்தனை என்றால் என்ன? என்று ஆய்வு செய்வதற்கு ஆழ்ந்த சிந்தனையும், துணிவும் தேவை; அவற்றை பக்திப் போதை ஏறியவர்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான்! அதே நேரத்தில் நடைமுறையில் (Practical) கடவுள்கள் இருந்தும், பிரார்த்தனைகள் நடந்தும் கரோனா வைத் தடுக்க முடியவில்லை என்ற அளவிலாவது ஒரு முடிவுக்கு வர வேண்டாமா? கடவுளை மறந்து மருத்துவ மனைக்குச் செல்லுவது- தந்தை பெரியார் கூறிய கடவுளை மற - மனிதனை நினை என்ற உண்மைத் தத்துவத்தின் அடிப்படையில்தானே! சிந்திப்பீர்!

No comments:

Post a Comment