பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (14) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (14)

பேராசான் தந்தை பெரியார் எப்படிப்பட்ட பேருள்ளம் - பெருந் தன்மையின் உச்சமாக, தனது வாழ்நாளில் விளங்கினார் என்பதை எனது சிறிய அனுபவத்தில் - அய்யா அவர்களிடம் நான் நேரில் கண்டு, உய்த்து, உணர்ந்த மற்றொரு நிகழ்வு.

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.மலையப்பன் அய்..எஸ். அன்றைய திருச்சி மாவட்டக் கலெக்டர் அவர்களைப்பற்றி - அவரை அப்பணியில் தொடரவிடக் கூடாது என்று திட்டமிட்டு இரண்டு உயர்ஜாதி நீதிபதிகள் எழுதிய தீர்ப்பின் தன்மையை கண்டனம் செய்து திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் பேசினார் என்பதற்கு அவதூறு வழக்கு அய்யாமீதும் அப்பேச்சின் வெளியீட்டாளர் (விடுதலையில்) என்பதற்காக அம்மா மணியம்மையார் மீதும் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்கிறது!

இரு நீதிபதிகள், "நீதிபதிகள் நியமனத்தில் தகுதி திறமை பார்க்காமல் நியமனம் செய்யப்படுவதால் நீதியின் தரம் தாழ்ந்து விட்டது" என்பது போன்ற சமூகநீதிக்கு விரோதமான, ஆதிக்கவாத கருத்து களை அடக்கிய தீர்ப்பு அத்தீர்ப்பு - அதைக் கண்டித்து தான் பெரியார் பேசி அய்க்கோர்ட் அவதூறு (Contempt Case) போட்டு, 100 ரூபாய் அபராதம், கோர்ட் கலையும் வரை தண்டனை போட்டார்கள்; அபராதம் கட்ட மறுத்தார்; அவரது கார் 'ஜப்தி' செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலைக்குப் பின்னர், சில நீதிபதிகளின் ஒழுங்கீனங்களும், ஒழுக்கம் மீறின நடவடிக் கைகளையும் ஆதாரபூர்வ நிகழ்ச்சிகளாகத் தொகுத்து, - சென்னை   மீரான் சாயபு தெருவில் உள்ள அய்யாவின் இல்லத்தில் அய்யா சென்னை வந்து தங்கியிருந்தபோது - நான் எழுதிய ஒரு நீண்ட கட்டுரை (அப்போது நான் B.L. இறுதி வகுப்பு சட்டக் கல்லூரி மாணவன்)யை அய்யா அவர்களிடம் காட்டினேன்; அய்யா அய்க் கோர்ட்டில் கொடுத்த ஸ்டேட்மண்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தக் கட்டுரை - 'ஹிந்து' நாளேடு - மற்றும் சில முக்கிய ஆதாரங்களிலிருந்து எடுத்துத் தொகுத்துள்ளேன் என்று கூறினேன். அய்யா வாங்கி நீண்ட - பல பக்கங்களை கொண்ட அக்கட்டுரையை முழுமையும் படித்து விட்டு என்னை அழைத்து, "மிக அருமையாக இது இருக்கிறது. அதனை உன் பெயரில் வெளியிட்டால் உன்மீதும் வழக்குப்போடவும் (நாளைக்கு) முயற்சிப்பார்கள்.

அதோடு இது மிகவும் வெயிட்டான (Weight) மேட்டர்; அதனால் இதை எனது அறிக்கையில் அமைந்த கட்டுரையாகவே போடலாம்" என்று நினைக்கிறேன் என்றார்!

எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! அய்யா எப்படி தனது தொண்டனின் வளர்ச்சியும், வாழ்வும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த கவலையோடும் பொறுப்போடும் இருக்கிறார்  என்று உணர்ந்தபோது அய்யாமீது - தலைவரின் மேல் கொண்ட மரியாதையும், பாசமும் பல மடங்கு பல்கிப் பெருகி விட்டது!

அக்கட்டுரை 'விடுதலை'யில் அய்யாவின் அறிக்கையாக வந்தவுடன் பெருத்த வரவேற்பைப் பெற்று, அய்யாவிடம் நேரில் வந்து பாராட்டினர் பல வாசகர்களும்.

வேலூரிலிருந்து நமது கழக முக்கியஸ்தர் ஒருவர் அய்யாவின் மதிப்பை பெற்று அறக்கட்ட ளையிலும் உறுப்பினராக இருந்த ஒருவரும் மற்றும் வேலூரில் முக்கிய கழகப் பொறுப்பாளர்கள் - சில அதிகாரிகள் எல்லாம் ஒரு குழுவாக அய்யாவைப் பார்த்து நலம் விசாரித்துச் செல்ல சென்னை வந்திருந்தனர்.

வழமை போல் அவர்கள் அய்யாவின் உடல் நலம் விசாரித்து விட்டு, அனைவரும் ஒருமித்து, அய்யா வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதிகள், வக்கீல்கள், மற்ற பத்திரிகையாளர் எல்லாம் நேற்று முன்தினம் விடுதலையில் நீங்கள் எழுதிய 'நீதி கெட்டது யாரால்?'  என்ற தலைப்பில் வெளிவந்த அறிக்கை பற்றித்தான் ஒரே பேச்சாக இருந்தது ஊர் முழுதும்! பல மூத்த வக்கீல்கள் உட்பட விடுதலை பேப்பர் கேட்டு வாங்கி படித்துப் பாராட்டினார்கள் என்றனர்!

அய்யாவும் வந்திருந்தவர்களில் சில முக்கிய கழகப் பிரமுகர்கள் அனைவரும் எல்லோரும் பாராட்டிப் புகழ்ந்த பின் மெதுவாக சிரித்துக் கொண்டே,  அதற்காகவா இங்கு வந்து பலரும் பாராட்டினீர்கள்.

"ஒண்ணு தெரியுமா உங்களுக்கு?" அதை நான் எழுதல; வீரமணிதான் எழுதினார். அவர் சட்டக் கல்லூரியில் B.L. படித்து முடிக்கப்போறாரு. அவருக்கு அந்த கட்டுரையினால் ஏதாவது வழக்கு  வந்து விடக் கூடாது என்பதற்காக முக்கிய Matter கனமான செய்தி என்பதினாலும் என் பெயரில் அதை வெளியிடச் சொன்னேன். அவர்தான் எழுதினார்" என்று அமைதியாக சொன்னார்.

அவர்களுக்கு திடீர் அதிர்ச்சி, சிலருக்கு ஒரு வகையான இக்கட்டான இறுக்கமான நிலையும்கூட - காரணம் - என்னைப் பற்றி அய்யாவிடம் சென்னையில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் வியாதிக்கு ஆளானவர்கள் வெறுப்பைத் தாங்கள் மேற் கொண்டு அய்யாவிடம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் 6 மாத தண்டனை அனுபவித்துக்  கொண்டிருந்த அய்யாவிடம் கூறியவர்களில் சிலரும் அதில் இருந்தனர்.

அவர்களுக்கும்  நாசூக்காகப் பாடம் எடுத்து ஒரே கல்லில் இரு மாங்காய்  அல்ல, பல மாங்காய்கள் அடித்த பேராசானின் பெருமைதான் என்னே! வாழைப் பழத்தில் ஊசி ஏற்றியது மாதிரி செய்த அமைதிப் பணியின் ஆழம்தான் என்னே! வியக்கத் தக்கது அல்லவா!

(தொடரும்)

No comments:

Post a Comment