ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

 கேள்வி-1.  திருக்குறளில் குறிப்பிடப்படும் ஆதிபகவனும், வேதத்தில் குறிப்பிடப்படும் பரமாத் மாவும் ஒன்றுதான் என்று கூறுகிறாரே தமிழ்நாடு ஆளுநர்?

 - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: “திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து அதிகாரமே

1. அவரால் எழுதப்பட்டதல்ல; பிறகு புகுத்தப்பட்ட இடைச்செருகல் என்ற கருத்து குறளை ஆய்வு செய்த ..சி. போன்ற தமிழறிஞர்கள் கருத்து.

2. பத்து குறள்களும் - தலைமைப் பண்புகளும், இயற்கையின் தோற்றம் பற்றியதே என பல தமிழ் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

3. ஆத்மா - வீடு - மோட்சம் போன்ற சொற்கள் கூட காணக்கிடைக்காதது திருக்குறள்.

இந்நிலையில், அனுப்பி பல மாதங்கள் ஆகிய நீட் தேர்வு கோப்பு, மற்றும் எழுவர் விடுதலை கோப்பு என்ற நிர்வாகப் பணிகளைப் பார்த்து உடனடியாக செயல்படுவதே அவருடையப் பணி.

அதை விடுத்து அவர் ஏன் இப்படி அவருக்குப் புரியாத விஷயங்களில் தலையிடுகிறார்? அல்லது மற்றவர் எழுதித்தரும் உரைகளை வைத்து கருத்துக் கூறி விவாதங்களை ஏன் உருவாக்க வேண்டும் என்பதே நம் கேள்வி.

கேள்வி-2. இவ்வாண்டு (2022-2023) மருத்துவப் படிப்பில் சேர 40 ஆயிரம்பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகவும் இது கடந்த இரண்டு ஆண்டுகளை விடக் குறைவானது என்றும் புள்ளி விவரம் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே!

     - பா. செல்வி, வாணுவம்பேட்டை.

பதில்: நீட் தேர்வின் கொடுமை - குளறுபடிகள் - தற்கொலை செய்திகள் ஆகியன நம் மாணவர்களின் மருத்துவக் கனவையே தள்ளிப் போட வைத்து விட்டது போலும்!

கேள்வி-3.  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைத்திருப்பதின் மூலம் உலகத் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாக மகிழலாம்தானே!

       - . இளங்கோவன், காஞ்சிபுரம்

பதில்: நிச்சயமாக - சமூக நீதிக்கான பாடத்திட்டமும் அங்கே ஏற்பாடு ஆகி வருகிறது. துணைவேந்தர் மற்றும் முயற்சித்த பேராசிரியர்கள் - பதிவாளர் அனைவரும் நம் பாராட்டிற்குரியவர்கள்.

கேள்வி- 4. மதுப் பழக்கத்தால் இந்திய அளவில் நிமிடத்திற்கு 6 பேர் இறக்கின்றனர் என்றும் இதில் 18 சதவீதம்பேர் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுப்பதோடு, இளைஞர்களிடையே போதைக்கு அடிமையாகும் பழக்கம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதை நோக்குகையில் இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது?

          - . வெங்கடேசன், ஆரணி.

பதில்: உண்மைதான், வேதனைதான். எவ்வளவு விரைவில் அது அழிகிறதோ - ‘டாஸ்மாக்மூடப்படுகிறதோ - அதனை இளைஞர்களைவிட, பெற்றோர் - மகளிர் வரவேற்பர் - ஆனால் தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகம், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை, பழிவாங்கல், கள்ளச்சாராயம் பெருகுமோ என்ற அச்சம். மற்ற மாநிலத்திற்கு வருவாய் மாறும் அபாயம் - இவைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, மாற்று வழியில் மாநில நிதி அமைச்சர் தனது மதியூகத்தால் புதிய முறைகளில் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் தரும் வாய்ப்பை உருவாக்கினால்  ஓரிரு ஆண்டு காலத்தில் அந்த நிலை ஏற்பட வாய்ப்பு நிச்சயம் உண்டு.

முதலமைச்சருக்கு மது விலக்கு இலக்குதான்- கால தாமதம் இன்றியமையாதது.

கேள்வி - 5. உலகிலேயே முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்திருப்பது மருத்துவத் துறையில் ஓர் முக்கிய திருப்புமுனை அல்லவா?

              - எஸ்.பத்ரா, வந்தவாசி.

பதில்: நிச்சயமாக, நாளை நிச்சயம் இதனால் பலன் - பயன் மனித குலத்துக்கு ஏற்படுவது உறுதி.

கேள்வி -6. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களைப் போற்றும் வகையில் லண்டன் மாநகரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தது தமிழ்நாட்டு மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் பாங்கு அல்லவா?

         - கோ. நண்பன், திருவண்ணாமலை.

பதில்: நன்றி காட்டுவதில் பாராட்டுவதில் -  தக்காரை தக்க முறையில் பெருமைப்படுத்துவதில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆட்சிக்கு இணை எதுவும் இல்லை!

கேள்வி -7. மருத்துவத் துறையில் மட்டுமன்றி ஒன்றிய அரசின் மற்ற மற்ற துறைகளிலும் கல்வி வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

       - இர. கலைவாணி, மேடவாக்கம்.

பதில்: கண்காணிக்கக் குழு தேவை - அகில இந்திய அளவில் மக்கள் போராட்டம் - வேண்டுகோள் தேவை.

கேள்வி -8. ஒமைக்ரான் தொற்று என்பதால் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு தடைவிதித்துவிட்டு, அண்மையில் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கங்கை நதியில் மூன்று லட்சம் பேர் நீராடுவதற்கு அனுமதித்தது சரியா?

               - சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில்: பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்

புத்தி வந்தவர்கள் இதுபோன்ற ஒமைக்கரான் தொற்றுக் காலத்தில் திருவிழா - பண்டிகைகளை தவிர்ப்பர். வடக்கேபகவான் பார்த்துக் கொள்வார்என்று ஒன்றிய அமைச்சர்களும், பா... தலைவர்கள் சிலருமே அருளுபதேசம் செய்கின்ற அறிவுக் கொழுந்துகளாக அல்லவா இருக்கிறார்கள்!

கேள்வி - 9. கரோனா உயிர்ப் பலியை தடுப்பூசி குறைக்கிறது என்ற உண்மை வெளிப்படையாகத் தெரிந்தபின்னும், தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சார மும், போராட்டமும் சிலரால் நடத்தப்படுகிறதே?

 - சில்வியா, கோயம்புத்தூர்

பதில்:  மனநல நோய் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் - இந்த நவீன மூடத்தனம் கொண்டவர்கள்!

கேள்வி -10. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிவாரண நிதி ரூ.6230 கோடியை ஒன்றிய அரசு தராமல் இழுத்தடித்து வருகிறதே?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: கேட்ட நிதி ரூ. 6230 கோடியில் தமிழ்நாட்டிற்கு இதுவரை துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை மோடி அரசு; ஆனால் இலங்கைக்கு 3730 கோடி ரூபாயை வாரி வழங்குகிறது.

No comments:

Post a Comment