எல்லாம் ‘ஜும்லா' தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

எல்லாம் ‘ஜும்லா' தானா?

 மின்சாரம்

இந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பரில், நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.9 சதவீதத்தை தொட்டது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மய்யத்தின் (CMIE) தரவு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது

பல மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதற்கு முன்பே, இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் சரிந்து வரும் போக்கைக் காட்டுகிறது.

சமீபத்திய வேலையின்மை விகிதம் என்ன?

டிசம்பரில் வேலையின்மை விகிதம் 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரில் 7 சதவீதமாகவும், 2020 டிசம்பரில் 9.1 சதவீதமாகவும் இருந்தது.

நகர்ப்புற வேலையின்மை விகிதம், முந்தைய மாதத்தில் 8.2 சதவீதத்தில் இருந்து டிசம்பரில் 9.3 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.4 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தரவு காட்டுகிறது.

வேலைவாய்ப்புக்கான ஆபத்துகள் என்ன?

வாராந்திர அளவில் நகர்ப்புற வேலையின்மை விகிதம், டிசம்பர் நடுப்பகுதியில் சுமார் 10.09 சதவீதமாக, இரட்டை இலக்க விகிதம் அதிகரித்தது.

நகர்ப்புற வேலைவாய்ப்பு என்பது சிறந்த ஊதியம் பெறும் வேலைகளுக்கான பிரதிநிதியாகும். மேலும் இந்த எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு, சிறந்த ஊதியம் பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் வேலைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

ஒமைக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பல மாநிலங்கள் புதிய தடைகளை விதித்துள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நுகர்வு அளவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார மீட்சியை மேலும் மோசமாக பாதிக்கும்.

ஒரே நாளில் 33,750 புதிய கரோனா பாதிப்புகள் மற்றும் 123 இறப்புகள் பதிவாகியுள்ளன. 10,846 வைரஸ் தொற்றிலிருந்து, பூரண குணமான நிலையில், நாட்டின் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,45,582அய் தொட்டுள்ளது.

2014இல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாயப்பு என்று வசீகரமாக அறிவித்தார். ஏழு ஆண்டு காலம் என்ன நடந்தது? 14 கோடி வேண்டாம், அதில் பாதி அளவுக்காவது நடந்ததுண்டா?

ரூபாய் மதிப்பு குறைப்பு என்ற ஓர் அதிரடி திட்டத்தைக் கொண்டு வந்தார் பிரதமர். அமைச்சரவையில் கூட முடிவு செய்யப்படவில்லை. ஓர் இரவில் அறிவித்தார். ஆனால், இமாலயப் புரட்சி என்று இருட்டைப் பகலாக்கிக் கொட்டி முழங்கினார்கள்.

எவ்வளவுக் கருப்புப் பணம் மீண்டது என்பதற்கு கணக்கே இல்லை. வங்கிகளுக்கு வந்த ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட இருமடங்கு செலவாயிற்று என்பதுதான் வேடிக்கை.

தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து அதற்குப் பதிலாக புதிய நோட்டுகள் பெறுவதற்காக மணிக் கணக்கில் வங்கி வாசல்களுக்கு முன்பு கால்கள் கடுகடுக்கக் காத்திருந்த அவல நிலைதான் - பலரின் உயிரும் பரிதாபமாகப் பறிப் போயின.

சிறு குறு தொழில்கள் சீர்குலைந்தன. பல நிறுவனங்கள் தொழிலாளர்களை வெளியேற்றின. ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' போல நிலைமை சீர்கேடு அடைந்ததுதான் மிச்சம்.

ஆனால் பிஜேபிகாரர்களான ரெட்டி சகோதரர்கள் கருநாடகத்தில் தங்கள் வீட்டுத் திருமணத்தில் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்தனர்.

சேகர் ரெட்டியிடம் 80 கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய்கள் இருந்தன. ரொக்கம் ரூ.170 கோடி கைப்பற்றப்பட்டது. வேலூரில் ரெட்டியின் காரில் கைப்பற்றப்பட்ட ரூ.24 கோடி அனைத்துமே ரூ.2000 நோட்டுகளே. 130 கிலோ தங்கம் சிக்கவில்லையா?

ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடப்படும் என்று அவிழ்த்துக் கொட்டினார். பிறகு அதுபற்றிக் கேட்டபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார்?

அதெல்லாம் சுத்தஜும்லா” (JUMLA) என்றாரே பார்க்கலாம். போகிறப் போக்கில் சொல்லும், போலி வாக்குறுதி என்பது இதன் பொருள். பெரிய பதவிகளில் உள்ளவர்கள் எந்தத் தரத்தில் உள்ளனர்? நாம் யாரைத்தான் நம்புவதோ?

No comments:

Post a Comment