பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (12) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (12)

ரூபாய் இரண்டு லட்சம் எனது பெயரில் இருந்தது பற்றி வருமான வரித்துறை அதிகாரியின் விசாரணை குறித்து அய்யாவிடம் கூறியபோது, அய்யா சிரித்துக் கொண்டே, "ஆமாம்ப்பா, உன் பெயரில் நான் ஒரு அவசரத்திற்கு 'விடுதலை' ஆபீசில் நியூஸ் பிரிண்ட் பேப்பர் வாங்க அல்லது வேறு திடீர் செலவுக்கு ஒரு தொகை பாதுகாப்பாக இருக்கட்டும் எனக் கருதி நான்தான் போட்டேன். அதை உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும். அம்மாவுக்குக்கூட இது தெரியாதுநானும் சொல்ல மறந்திட்டேன். நான்தான் (பெரியார்) உன் பெயரில் போட்டேன்; அது இயக்கப் பணம்தான் என்று வருமானத் துறைக்காரருக்கே எழுதி விடுகிறேன்; அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள்" என்று சர்வ சாதாரணமாகக் கூறியது என்னை அமைதியுறச் செய்தது!

தந்தை பெரியார் அதன் பிறகு, சென்னை வந்து ஒரு வங்கிக் கணக்கில் சுமார் 1 லட்சத்திற்கு அவரே "விடுதலை ஆசிரியர் கி. வீரமணி" என்ற பெயரில்  கணக்குத் திறந்து, பின்பு என்னை அழைத்து, "அவசரமாக கோட்டா நியூஸ் பிரிண்ட்  - குடோனிலிருந்து பணம் கட்டி எடுக்க வேண்டியிருந்தால், என்னிடம் 'செக்' கேட்டு வாங்குவதற்கு சில நேரங்களில் தாமதம் ஏற்படக் கூடும். நான் வெளியூரில் சுற்றுப் பயணங்களில் இருக்கும் நிலையில் - அது மாதிரி சந்தர்ப்பங்களில் இந்த வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கட்டி விடுங்கள். அதற்குரிய எனது 'செக்' வந்த வுடன் அதை அந்த வங்கியிலேயே போட்டு நிறைவு செய்து விடுங்கள்" என்று எனக்கு அய்யா அறிவுறுத்தினார்.

சிற்சில நேரங்களில் அது எனக்கு நடை முறையில் பெரிதும் உதவியது!

அதில்கூட ஒரு முறை ஓர் அதிர்ச்சியான அனுபவம் எனக்கு ஏற்பட்டதை (சென்னையில் அய்யா தங்கியிருந்தபோது)யும் பதிவு செய்வது வங்கிக் கணக்கை கையாளும் நம் வாசகப் பெரு மக்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

ஒரு முறை 50,000 ரூபாய் நியூஸ் பிரிண்ட் ரீல் பண்டல் வாங்க L.C. கணக்கில் கொடுத்து எடுக்க 'செக்' கொடுத்தேன். அங்கேயே நேரில் சென்று கொடுத்தவுடன், அந்த 'செக்' (காசோலை) உரிய பணம் இருப்பில் இல்லை என்பதை வங்கி மொழியில் Refer to the Drawer என்ற குறிப்புடன் வந்தவுடன், நான் பதறிப்போய் "சென்ற வாரம் தானே நான் 50 ஆயிரம் தொகையை (அய்யாவிடமிருந்து வந்து 'செக்'மூலம் வந்த பணம்) எனது கணக்கில் போட்டேன்; எப்படி பணம் இல்லாமல் போக முடியும்" என்று ஆத்திரம் பொங்க அந்த வங்கி (கிளை) மேலாளரிடம் தொலைபேசியில் கேட்டேன்.

அவர் சம்பந்தப்பட்ட எழுத்தரை அழைத்துக் கேட்டவுடன் அவர், "பணம் இருப்பில் இல் லையே" என்ற அதே பதிலைச் சொன்னார். அவசரம் காட்டினார்.

நான் உடனே விரைந்து மேலாளரிடமும், பெரிய அதிகாரியிடமும் கூறி, பணம் போட்ட 'செலான்' ரசீதைக்   காட்டினேன்.

அவர்களுக்கே ஒரு குழப்பம், பிறகு எல்லா கணக்குகளையும் துவக்க முதலே ஆய்வு செய்த பிறகு, எனது கணக்கில் வரவு வைக்க வேண்டிய அந்த 50 ஆயிரம் ரூபாயை, கே.வீராசாமி (கே. வீரமணிக்குப் பதில்) கணக்கில் வரவு வைத்து விட்டனர். தவறுதலாக! அந்த 'கே.வீராசாமி' யார் தெரியுமா? சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி. அவருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை.

பிறகு கண்டறிந்து வங்கி மேலாளர் உட்பட அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். தவறுலாக பணத்தை வேறு ஒருவர் (கே. வீராசாமி) கணக்கில் சேர்க்கப்பட்டதுபற்றி விசாரணை நடத்தி குற்ற வாளியாக்கப்பட்டவரை வேலை நீக்கம் செய்ய ஏற்பாடு நடந்தபோது, நானே பெரிய அதிகாரியிடம் போய் "ஏதோ தவறுதலாக நடந்து விட்டது! அதனால் வேலையை இழந்த வேதனை அவருக்கு ஏற்படத் தேவையில்லை" என்று கூறி புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டு, "பணியை இனிமேல் கவனமாகச் செய்யுங்கள்" என்று அந்த எழுத்தரைக் கேட்டுக் கொண்டு அதை முடித்து வைத்தோம்.

தந்தை பெரியார் இதை அறிந்து கொண்ட பிறகு, "எப்போதும் வங்கி பாஸ்புக், பேலன்ஸ் சரியாக இருக்கிறதாவென்று நாம் அடிக்கடி சரிபார்க்கணும்" என்று எங்களுக்குப் பாடம் எடுத்தார்!

கற்றோம்; கற்றேன் இதையும் அந்தப் பேராசானிட மிருந்து -   எம்.. பொருளாதாரத்தில் கற்காதது. பெரி யாரிடத்தில் கற்றுக் கொண்டது இது!

Theory என்பது வேறுPractical Life என்பது வேறு; அதைத்தான் அய்யா அவருக்கே உரித்த முறையில் அனுபவத்தோடு 'அறிவு வேறு, படிப்பு வேறு' என்று கூட்டங்களில் விளக்கியுள்ளார்.

(தொடரும்)

No comments:

Post a Comment