பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (11) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (11)

நமது பேராசானின் லேசான அந்தப் புன்னகை  - நான் பல கூட்டங்களில் பேசப் போகும்போது, மாலைக்குப் பதிலாக எனக்கு  அன்பளிப்பாகத் தந்த தொகையை தேதி வாரியாக எழுதி அய்யாவிடம் ஒப்படைத்தபோது - பெற்ற புன்னகை யான் பெற்ற பேறு!

எனது திருமண நிகழ்வு 7.12.1958இல் திருச்சி 'பெரியார் மாளிகை'யில் மாலை  5 மணியளவில் தொடங்கி 7.30 மணி அளவில் முடிந்தபோது, அன்பளிப்புகள் பற்றிய குறிப்பை இன்றைய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைத் தலைவர், இப்போது "99 வயது இளைஞர்", மானமிகு அய்யா தோழர் பொத்தனூர் . சண்முகம்தான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதினார்கள் (அது இன்னமும் பத்திரமாக உள்ளது). மொத்த வரவு சுமார் 2800 ரூபாய் என்று நினைவு. சேலம் மேனாள் நகரசபைத் தலைவரும், தந்தை பெரியாருக்கு மிக நெருக்கமானவருமான அய்யா ரத்தினசாமி(ப் பிள்ளை) அவர்களும், நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களும்தான் பெரிய தொகை அளித்தார்கள்.

தலா ரூபாய் நூறு! - இது அக்காலத்தில் பெரும் தொகையாகும்! (இன்றைய மதிப்பீட்டை வைத்து ஒப்பிடாதீர்கள்) அது அக்காலத்தில் பெரிய தொகையாகும்!

அன்பளிப்புகளையெல்லாம் அன்னை மணியம்மையாரிடம் ஒப்படைத்து அய்யாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லி விட்டேன்!

95ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று சென்னை பெரியார் திடலில் (அதுதான் நம் பேராசானின் கடைசி பிறந்த நாளாக ஆகப் போகிறது என்று யாருக்குமே தெரியாது!). நான் எப்போதும்போல், ஒரு அழகான  துண்டு (கடையில் வாங்கி வந்து) - அத்துடன் ஒரு சிறு தொகையும், ஆப்பிள் பழம் ஒன்றும் தந்ததைப் பெற்றுக் கொண்டார். நகர்ந்தேன் - போட்டோகிராபர் நண்பர் 'சுபா சுந்தரம்' தான் பெரியாரின் - கழகத்தின் ஆஸ்தான 'போட்டோ கிராபர்'. அவர் படம் எடுத்துக் கொண்டே இருந்தார். அய்யா அவர்கள், என்னை உடன் அழைத்து கையில் ஒரு சிறுபையில் போட்டத் தொகை ஒன்றினை என் கையைப் பிடித்து அளவிலா மகிழ்ச்சி பொங்க எனக்குத் தந்தது என்னை இன்ப அதிர்ச்சிக்குள் தள்ளியது! (அந்தப் படம் அதிகமாக நம் தோழர்களால் பயன்படுத்தப்படுகிறது).

அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது! அந்தப் பெரும் பேறு - வாழ்வில் நான் அய்யாவிடம் பெற்ற பெரும் பேறுகளில் தலையாயது! பெருந் தொகையும்கூட!

அதை அப்படியே அம்மாவிடம் தந்தேன் (மண அன்பளிப்புத் தொகை, அய்யா வைத்திருந்து கூடுதலாகத் தந்தது உள்பட  அய்யா, அம்மா என்னை கூப்பிட்டு  இறுதியில் எனக்குத் தந்து உள்ளார்கள்!)

திடீரென்று ஒரு நாள் 'விடுதலை' அலுவலகத்தில் (பெரியார் திடலில் மாறிவிட்ட புது அலுவலகத்தில்) - வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்து என்னிடத்தில் ஒரு விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார். 'தாராளமாக நடத்துங்கள்!' என்று உற்சாகத்துடன் அவரை வரவேற்றபோது, அவர் மிகவும் மரியாதையுடன், "அய்யா உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. இரண்டு லட்ச ரூபாய் F.D. ஒரு மில்லில் முதலீடு செய்துள் ளீர்கள்! அதற்கு  Source- சோர்ஸ்,  எங்கிருந்து அப் பணம் உங்களுக்கு வந்து F.D.  பங்கு போட்டுள் ளீர்கள்" என்று கேட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி! ஒன்றுமில்லா ஓட்டாண்டியிடம் இப்படி ஒரு விசித்திரக் கேள்வியா என்று அந்த அதிகாரியிடம் "அய்யா நான் எந்த F.D.யும் போடவில்லை; எனக்கு வருமானமும் எதுவும் கிடையாது. பின் எப்படி இது என்பதுபற்றி எனக்குத் தெரியாது. எனது மாமனார், மாமியார்  வசதியானவர்கள். என் பெயரில் ஒரு வேளை போட்டுள்ளார்களோ என்று விசாரித்து பதில் அளிக்கிறேன், சில நாள் அவகாசம் தாருங்கள்" என்றேன்.

அந்த வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர்  "ஒரு வாரம் கழித்து வருவேன். தெரிந்து சொல்லுங்கள்!" என்று கூறி சென்று விட்டார்.

எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி! உடனே எனது மாமனார் - மாமியாரிடம் தொலைபேசி மூலம் விவரத்தைக் கூறி, "நீங்கள் ஏதாவது என் பெயரில் முதலீடுF.D. செய்துள்ளீர்களா?" என்று கேட்ட தற்கு, "அப்படி ஏதும் செய்யவில்லையே! உங் களிடம் சொல்லியிருப்போமே! இது புரியவில்லை" என்று பதில் அளித்தது எனக்கு மிகவும் சோத னையை ஏற்படுத்தி விட்டது!

இது 'சிக்கலான விடயமாகி' விடக் கூடாது என்பதற்காக நான் திருச்சிக்குச் சென்று அய்யா அவர்களிடம் நடந்ததை விலாவரியாகக் கூறி அறிவுரை பெற விரைந்தேன்.

அய்யாவிடம் நடந்ததைக் கூறினேன். அய்யாவின் பதில்,  விளக்கம் என்ன?

(அடுத்துக் கூறுவேன்)

No comments:

Post a Comment