அய்யா இராசகிரியார் படமாக அல்ல - நமக்குப் பாடமாகத் திகழ்பவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 14, 2021

அய்யா இராசகிரியார் படமாக அல்ல - நமக்குப் பாடமாகத் திகழ்பவர்!

தஞ்சை: பெரியார் பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள கட்டடத்திற்கு மறைந்த இராசகிரி தங்கராசு பெயர் சூட்டப்படும்

படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

பாபநாசம், நவ.14  தஞ்சையில் உள்ள பெரியார் பாலி டெக்னிக், உலகத்தின் சிறப்புப் பெற்ற பாலிடெக்னிக்காக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அந்தப் பாலிடெக்னிக் வளாகத் தில் உள்ள ஒரு கட்டடத்திற்கு இராசகிரி கோ.தங்கராசு அவர்களின் பெயர் சூட்டப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி தங்கராசு படத்திறப்பு - நினைவேந்தல்

கடந்த 21.10.2021  அன்று பாபநாசம் துர்கா திருமண மாளிகையில் நடைபெற்ற நினைவேந்தலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவரும், திராவிடர் கழக காப்பாளரும், பெரியார் பெருந்தொண் டருமான மறைந்தஇராசகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை யாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

.தந்தை பெரியாரின் அறிவுரை!

தந்தை பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையா ரிடமும், எங்களிடமும், ‘‘சிறைச்சாலைக்குச் சென்றவர் களின் குடும்பத்தினரைப் பார்த்து அவர்களுக்கு ஆறு தல் சொல்லுங்கள்; அவர்களுக்கு வேண்டிய உதவிக ளைச் செய்யுங்கள். சிறைச்சாலையில் இருக்கின்ற தோழர்களையும் பாருங்கள்; அவர்களையெல்லாம் நான் விசாரித்தேன் என்று சொல்லுங்கள்'' என்றார்.

அன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு மூன்று வகையான பணிகள் இருந்தன.

ஒன்று, சிறையில் இருக்கின்ற தோழர்களைவிட, வெளியில் இருக்கின்ற அவர்களுடைய குடும்பத்தினர் அவதிப்படக் கூடாது என்பதற்காக நேரில் சென்று ஆறுதல் சொல்வது.

இரண்டாவது, பிரச்சாரப் பணி

மூன்றாவது பணி, பிரச்சாரத்தையொட்டி, 10 ஆயிரம் பேர் பங்கேற்ற அரசமைப்புச் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில், 3 ஆயிரம் பேரை கைது செய்து, ஆறு மாதங்கள் முதற்கொண்டு, மூன்று ஆண்டு வரையில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைச்சாலையில் இருந்தனர்.

ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் அம்மாவும், நானும் சென்று, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை அறிந்துகொண்டோம்.

திருச்சி சிறைச்சாலையில் நம்முடைய தோழர்கள் இறந்தனர் என்ற வரலாறை எல்லாம் உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை - ஏனென்றால், அந்தத் தகவல்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

சிறைச்சாலைக்கென்று ஓர் அகராதி உண்டு

புதுக்கோட்டை சிறைச்சாலைக்குச் சென்றோம் - அப்பொழுது தஞ்சை மாவட்டத் தலைவராக இருந்த தோழர் தோலி.ஆர்.சுப்பிரமணியம், குடந்தை தலைவர் டி.மாரிமுத்து அவர்கள் (இவரை கொத்தனார் என்று சொல்வார்கள்), அய்யா இராசகிரியார் அவர்கள் எல்லாம், சிறைச்சாலையில் இண்டர்வியூக்கு என்ன வார்த்தை என்றால், ஜெயிலுக்கு ஓர் அகராதி இருக்கிறது - சிறைச்சாலைக்குச் சென்றவர்களுக்குத்தான் தெரியும். மனு வந்திருக்கிறது உங்களுக்கு என்பார்கள்.  சிறைக்குப் போனால் ஒரு அனுபவம், அங்கே புதுத் தமிழ் கற்றுக்கொண்டு வரலாம். அடிதண்டா போட்டார்கள் என்பார்கள். அப்படி என்றால், மூடிவிட்டார்கள் என்று அர்த்தம்.

எல்லோரும்  அங்கே வந்தார்கள்; வரும்பொழுது அம்மா அவர்களைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டே வந்தார்கள். இயல்பாக கும்பிடுவதுதான் என்று நாங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம்.

அப்படியே கும்பிட்டுக்கொண்டிருந்தபடியே  கைகளை மூடியபடியேஇருந்தார்கள்.

நாங்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டோம்.

அன்னை மணியம்மையார் அவர்கள் முன்னிலை யிலும், எங்கள் முன்னிலையிலும் மாரிமுத்து அவர்கள், தோலி, இராசகிரி அய்யா அவர்கள் எல்லோரும் கைகளை அகலத் திறக்கவில்லை.

அவர்களைத் திறக்கச் சொல்லிப் பார்த்தவுடன்,  எங்களுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அம்மா அவர் களும், ‘பொல பொலவென்று' அழுது விட்டார்கள்.

கைகளில் காப்பு காய்த்து இருந்தது

கைகளிலெல்லாம் காப்பு காய்த்து வீங்கிப் போயிருந்தது. எதனால் என்றால், இரும்பு உலக்கையைக் கொடுத்து, குத்தச் சொல்வதுதான் அவர்களுடைய அன்றாட வேலையாம். எப்படிப்பட்ட தன்னலமறுப்பு. ஆனால், அதை மகிழ்ச்சியோடு செய்தார்கள். அவர்கள் அதைத் தியாகம் போன்றுகூட சொல்லவில்லை.

அதைப் பார்த்துவிட்டு, கடுமையாகவிடுதலை'யில் எழுதியவுடன், காமராசர், பக்தவச்சலத்திடம் சொல்லிய தும், நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆக, இராசகிரி அய்யா அவர்கள், ஒவ்வொன்றைப் பற்றியும் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார். அதில், அழகிரி அவர்கள் பேசியதைப்பற்றியும் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொன்றுமே மிக முக்கியமாக இருக்கக் கூடி யவை. சின்ன குறிப்புகளில் இருந்து, பெரிய அளவிற்கும் ஏராளமாக இருக்கின்றன.

அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், அந்தப் பொறுப்பை, பொறுப்பாக செய்யக்கூடியவர் மட்டுமல்ல, எப்படி இணைந்து செய்வது என்பதுதான் மிக முக்கியம்.

தஞ்சை மாவட்டத் தலைவராக ஆர்.பி. சாரங்கன்

தஞ்சை மாவட்டத் தலைவராக ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களுடைய தந்தையார் நம்முடைய சாரங்கன் அவர்கள் இருந்தார். அப்பொழுது இவர் மாவட்டச் செயலாளர்.

நான் அடிக்கடி கமிட்டி நடைபெறும்பொழுது சொல் வேன், ‘‘நீங்கள் இரண்டு பேரும் கணவன் - மனைவி போன்று மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். அப்படித்தான் தலைவரும், செயலாளரும் இருக்கவேண்டும்'' என்று சொல்வேன்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதுதான் வாழ்க்கை. இன்னுங்கேட்டால், திருமணங்களில், நல்ல வெற்றிகரமான வாழ்க்கைத் துணைவர்களாக ஆக வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி என்றால், யார் முதலில் தோற்கிறார்களோ, அவர்கள்தான் உண்மையாக வெற்றி பெறுகிறவர் என்று சொல்லக்கூடிய அளவில் இருப்பதுதான்.

நெஞ்சில் நினைப்பதை

செயலில் நாட்டுவது

நீசமன்று

மறக்குல மாட்சியாம்

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்.

அப்பழுக்கற்ற தூய்மையான பொதுவாழ்க்கை

அதுபோல, அவர்களுடைய சிறந்த சிந்தனை, கடுமையான உழைப்பு என அனைத்தும் எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய அளவிற்கு அப்பழுக்கற்ற தூய்மை யான பொதுவாழ்க்கையாகும்.

அதைத்தான் இங்கே செயலவைத் தலைவர் சொன்னார் பாருங்கள்,

புத்தருடைய நெறியில்,

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று மூன்று வார்த்தைகளை சொல்வார்கள்.

இதுவரையில் எல்லோரும் அதைச் சொன்னார்கள். டில்லிக்கு நாங்கள், வடநாட்டு சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த தோழர் .வெ.கி.சம்பத் அவர்களுடைய வீடு நார்த் அவென்யூவில் தங்கியிருந்தோம்.

அப்பொழுது பார்ப்பன பத்திரிகை செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்,

நீங்கள் மதத்தை எதிர்ப்பவர்கள் ஆயிற்றே? புத்த நெறியை மட்டும் எப்படி ஆதரிக்கிறீர்கள் என்று தந்தை பெரியாரிடம் கேட்டார்.

புத்த மதமல்ல - நெறி!

உடனே பெரியார் அவர்கள், ‘‘புத்த மதம் அல்ல; நெறி'' என்றார்.

இல்லீங்க, அங்கேயும்,

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று சொல்லி, கீழே விழுந்து எழுந்திருக்கிறீர்களே? என்றார் அந்தச் செய்தியாளர்.

அதற்கு பாலி மொழியில் என்ன பொருள் தெரியுமா? என்று கேட்டார் பெரியார்.

அதை சடங்காக்கி விட்டார்கள்; அதற்குப் பொருள் என்ன தெரியுமா?

புத்தம் சரணம் கச்சாமி என்று சொன்னால், உன் தலைவனுக்குக் கீழ்படிந்து நடந்துகொள்.

தம்மம் சரணம் கச்சாமி என்றால், இந்தக் கொள்கை யில் என்னை நான் ஒப்படைத்துக் கொண்டேன் என்ப தாகும்.

சங்கம் சரணம் கச்சாமி என்றால், இந்தத் தலைவன், கொள்கை கொண்ட இயக்கம் இருக்கிறதே, அதற்கு நான் என்றைக்கும் பணிபுரிபவன், அடிபணிந்தவன் என்று பொருள் இதில் எது பகுத்தறிவுக்கு விரோதம்''  என்று கேட்டார் தந்தை பெரியார்.

அதை அப்படியே அப்பழுக்கற்ற முறையில் கடைப் பிடித்தவர் பாடமாக மட்டுமல்ல, இங்கே படமாக இருக் கக்கூடிய நம்முடைய அய்யா இராசகிரியார் அவர்கள்.

எனவே, அவருடைய வழிகாட்டுதல் என்பது நமக்கு மிகவும் முக்கியம்.

பெங்களூருவில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம்

இன்னொரு செய்தியை சொல்கிறேன்,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு எங்களை அழைத்திருந்தார்கள். அந்தக் கருத்தரங்கம், சமூகநீதி, இட ஒதுக்கீடு கருத்தரங்கம்.

அரசாங்கம் சார்பாக, பிற்படுத்தப்பட்டவர் நலத் துறையின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம் அது.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வெங் கடாசலய்யா என்ற பார்ப்பனர் எனக்கு அருகில் அமர்ந் திருந்தார். அவரும் அந்தக் கருத்தரங்கத்தில் உரையாற்ற வந்திருக்கின்றார். எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, நம்முடைய மாடர்ன் ரேசன லிஸ்ட் பத்திரிகையை கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்தார்.

முதலமைச்சர் சித்தராமையா நிகழ்ச்சிக்கு வருவதற் குத் தாமதமானதால், குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கருத்தரங்கம் தொடங்கப்படவில்லை.

நாங்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தோம். இரண்டு, மூன்று வரிசையில் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு அமர்ந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு தாமதமானதால், ஒவ்வொருவரும் எழுந்து  என்னருகே வந்து, வணக்கம் அய்யா என்று சொல்லி, விசாரித்துவிட்டுச் சென்றார்கள்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் வியப்பு!

அதைப் பார்த்த அந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆச்சரியத்துடன், அவர்கள் எல்லாம் யார் என்று அவரு டைய பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார்.

அவர்கள் எல்லாம் திராவிடர் கழகத்துக்காரர்கள், அவர்கள் எல்லாம் பெரியாரிஸ்ட் என்றார் அவர்.

திரும்பி என்னிடம், எல்லாம் வயதானவர்களாக இருக்கிறார்களே, ஆனால், ஆக்டிவாக இருக்கிறார்களே என்றார்.

ஒரு கருப்புச் சட்டைக்காரரை அழைத்து, உங்களுக்கு என்ன வயது? என்று கேட்டார்.

92 வயது  என்றார் அவர்.

அதைக் கேட்டவுடன், அந்த நீதிபதிக்கு வியப்பாக இருந்தது.

நீதிபதியின் கேள்வி!

நிகழ்ச்சி தொடங்கி, அந்தக் கருத்தரங்கத்தில் உரை யாற்றியதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  இடையில் தேநீர் விருந்து நடைபெற்றது. அந்த அறையில் எல் லோரும் அமர்ந்திருந்தோம்.

அந்த நீதிபதியும் அங்கே இருந்தார். அவர் என்னிடம்,

‘‘Mister Veeramani I would like to ask one question, can I ask you'' என்றார்.

‘‘மிஸ்டர் வீரமணி, அவர்களே எனக்கு ஒரு சந்தேகம், அதை நான் உங்களிடம் கேட்கலாமா?'' என்றார்.

தாராளமாகக் கேளுங்கள், பதில் சொல்வதுதான் எங்களுடைய வேலையே என்றவுடன்,

அவர் சிரித்துக்கொண்டே கேட்டார்,

  I have seen so many of your cadre and people associated  they are all well young people, they are energetic, they are very active, I am astounded என்று சொல்லிவிட்டு,

அவர்கள்எல்லோரையும் நான் விசாரித்தேன். ஒருவர் 90 வயது என்கிறார், இன்னொருவர் 92 வயது என்கிறார், ஆனால், அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார் களே, இது என்ன ரகசியம்? அவர்கள் எல்லாம் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார்களேஎன்றார்.

அந்த அறையில் நாங்கள் 4, 5 பேர்தான் இருக்கிறோம்.

நான் சொன்னேன்,

Just give me five minutes, I will tell you before that you can meet another person

என்று சொல்லிவிட்டு, வேலு என்கிற எங்களுடைய தோழர் இருக்கிறார். அவருக்கு வயது இப்பொழுது 102 ஆகிறது. அவரை அழைத்து வரச் சொல்கிறேன், பாருங்கள் என்றேன்.

அவரை அழைத்து வரச் சொன்னேன், வேலு அவர்கள் வேக வேகமாக வந்து, அய்யா வணக்கம் என்றார்.

அவருக்கு என்ன வயது என்று உங்களால் சொல்ல முடியுமா? என்றேன்.

அவர் சிறிது நேரம் யோசனை செய்தார்.

வேலு, நீங்களே உங்களுடைய வயதைச் சொல்லுங் கள் என்றேன்.

சார், எனக்கு 102 வயது என்றார்.

திராவிடர் கழகத்துக்காரர்களெல்லாம் அதிக வயதுள்ளவர்களாக இருக்கிறார்களே என்று கேட்டார்.

நான் சொன்னேன், “மதிப்பிற்குரிய நீதிபதி அவர் களே, அண்மையில்டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அது என்னவென்றால்,

உலகத்தில், இங்கிலாந்து, அய்ரோப்பா போன்ற நாடுகளில் ஒரு சர்வே எடுத்தார்கள். அதில், யார் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாரோ அவர்தான் அதிக நாள் வாழ்கிறார்கள் என்ற செய்திதான் அது.

அந்தச் செய்தி உண்மையா? இல்லையா? என்று பார்க்கவேண்டுமானால், எங்களுடைய தோழர்களைப் பார்த்தாலே போதும். காரணம், இவர்களுக்கெல்லாம் தலைவரே, 95 வயது வரை வாழ்ந்தவர்என்று அவரிடம் சொன்னேன்.

விருப்பு வெறுப்பின்றி கடமையாற்றவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கள் தோழர்கள்!

95 வயது இளைஞராக வாழ்ந்தவர் தந்தை பெரியார். எல்லாம் என் முடிவில்தான் இருக்கிறது, என்னுடைய வாழ்க்கை  என் முடிவில்தான் இருக்கிறது; என்னுடைய ஒழுக்கத்தில்தான் இருக்கிறது; என்னுடைய கட்டுப்பாட் டில்தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவில் வாழ்பவர்கள்.

அதுபோன்று, அய்யா இராசகிரியார் அவர்கள், எதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லக்கூடியவர்.

தயவு தாட்சண்யம்  என்று சொல்ல மாட்டார். காரணம் தமிழில் வடமொழி கலந்த சொல்தான் அது.

நிருதாட்சண்யம் என்கிற ஒரு வார்த்தை உண்டு. எடுத்துக் கொண்ட வேலை என்னவோ அதுதான். அதைப்பற்றித்தான் எடுத்துச் சொல்லவேண்டும். அந்த மாதிரி விருப்பு வெறுப்பின்றி கடமையாற்றவேண்டும் என்று நினைப்பதினால்தான் எங்கள் தோழர்கள் நீண்ட வயதுவரை வாழ்கிறார்கள்.

வாழ்த்தைவிட வசவை அதிகம் பெறுகிறவன் நான்! என்றார் தந்தை பெரியார்

பிறந்த நாள் விழாவில், பெரியார் அவர்களைப் பார்த்து, ‘‘பெரியார் அவர்கள் நூறாண்டை தாண்டி வாழவேண்டும்'' என்று சொன்னார்கள்.

அய்யா அவர்கள் உரையாற்றும்பொழுது, ‘‘நீங்கள் சொல்வதினால் நான் வாழ்ந்திடப் போவதில்லை. எனக்கொன்றும் வாழ்த்தில் நம்பிக்கையில்லை. வாழ்த் தில் நான் நம்பிக்கை வைத்தால், வசவில் நான் நம்பிக்கை வைக்கவேண்டும். என்னை வாழ்த்துபவர்களைவிட, வசவு, வைகிறவன்தான் எனக்கு அதிகம். ஆகவே, நான் இரண்டையுமே பார்க்கமாட்டேன்என்று சொல்லிவிட்டு,

என்னைக் கருமி, சிக்கனவாதி என்று சொல்கிறீர் களே, நூறாண்டு வாழ வேண்டும் என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள், ஏன் ஆயிரம் ஆண்டு என்று சொன்னால் என்ன? இதில் என்ன சிக்கனம் வேண்டி இருக்கிறது; இதில் என்ன கருமித்தனம் வேண்டி இருக்கிறதுஎன்று நகைச்சுவை உணர்வோடு கேட்டார்.

உள்ளத்தில் நினைப்பதைத்தான்

வெளியில் பேசுவோம்!

ஆகவே, இந்த இயக்கம் என்பது -

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

என்று வள்ளுவருடைய குறள் உண்டு.

அதுபோன்று, உள்ளம் நினைப்பதைத்தான் பேசு வோம். மனிதர்களில் பல  பேர் நினைப்பது வேறு; சொல் வது வேறு. அதுவும் அரசியல் என்றால், சொல்ல வேண் டிய அவசியமே  இல்லை.

நினைப்பது வேறு; சொல்வது வேறு; செய்வது இன்னொன்று.

ஆனால், நினைப்பது, சொல்வது, செய்வது எல்லா வற்றிலும் ஒன்றாக இருப்பதற்குப் பெயர்தான் சுய மரியாதை, பெரியாருடைய தத்துவமாகும்.

அந்தத் தத்துவப்படி 97 ஆண்டுகாலம் அய்யா இராசகிரி தங்கராசு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்.

எந்தப் பணியை அவர் செய்தாலும் அதில் நேர்மை; அதேபோன்று பிள்ளைகளை வளர்ப்பது என்றாலும், அவர்களுடைய உறவுக்காரர்களாக இருந்தாலும், கொள்கை உறவுகளாக இருந்தாலும், ரத்த உறவுகளாக இருந்தாலும், அவர்கள் அத்தனை பேரையும் கண்டிப்போடு சமமான அளவில் பார்க்கக் கூடியவர்.

என்னை விட அவர் மூத்தவர்; அவர் ஏன் என்னை இயக்கத் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்? இயக்கம் - கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தவர்.

நெஞ்சத்தில் நேர்மைபிறரை சங்கடப்படுத்தாத வாழ்க்கை

எனவேதான், அவர் படமல்ல; பாடம். தனி மனித ஒழுக்கத்திற்கும் சரி; பொதுவாழ்க்கை என்றாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி - நெஞ்சத்தில் நேர்மை - பிறரை சங்கடப்படுத்தாத வாழ்க்கை.

எல்லாக் கட்சிக்காரர்களும் அவரை மதிக்கிறார்கள். இன்றைக்கு இஸ்லாமிய சகோதரிகள் இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், மனதால் ஒன்றுபட்டவர்கள் என்று காட்டக் கூடிய அளவிற்கு, இங்கே மதவெறிக்கு இடமில்லாத ஒரு இடம் - பெரியார் மண் இந்த மண்.

அதேபோன்று எந்த மதம்? என்ன கொள்கை? என்பதைப்பற்றி கவலையில்லை. கடவுளை நம்பக் கூடியவர்களா? அவர்களைப் பார்த்து நாங்கள் எதிரிகளாக நினைப்பதில்லை. நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள்தான்; கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் மறுப்பாளர்களாக இருப்பவர்களால், கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஏதாவது ஆபத்தா என்றால், ஒருபோதும் ஆபத்து கிடையாது.

பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்சிலையைத் திருடுகிறவர்கள் யார்?

ஆனால், மத நம்பிக்கைக் கொண்டவர்கள், கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் - கடப்பாரையைத் தூக்குகிறவர்கள் யார்? பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்? நாத்திகர்களா? சிலையைத் திருடுகிறவர்கள் யார்? நாத்திகர்களா? இல்லையே!

ஆகவேதான், நாத்திகன் என்று சொன்னால், ஒழுக்கவாதி - நாத்திகன் என்று சொன்னால், உண்மையானவன்.

கடவுள் மறுப்பு என்றால் வேறொன்றும் இல்லை. கடவுளை மற என்று சொன்ன பெரியார், மனிதனை நினை என்று சொன்னார்.

காரணம், மனிதனை மறந்துவிட்டு, கடவுளையே நினைத்துக்  கொண்டிருக்கிறான். அதனுடைய விளைவுதான், நாட்டில் எங்கே பார்த்தாலும் கலவரங்கள் மிகப்பெரிய அளவிற்கு.

எனவேதான், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!”

நம்முடைய முதலமைச்சர், இந்தியாவிலேயே ஒப்பற்ற முதலமைச்சராக திகழக்கூடிய இன்றைக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார்.

முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக, ஆட்சிப் பொறுப்பேற்று 150 நாள்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார்.

முதலமைச்சரின் இரங்கல் செய்தி!

ஒரு சிறப்பான தொண்டூழியத்தில் இருக்கக் கூடிய ஒருவருக்கு  நாங்கள் பாராட்டுவது முக்கியமல்ல. அய்யா இராசகிரி அவர்கள் மறைந்த நேரத்தில்,

‘‘பெருவாழ்வு வாழ்ந்து, பெரியாரிய தொண்டாற்றியவர் இராசகிரி தங்கராசு'' - முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் என்று குறிப்பிட்டு உடனடியாக இந்தக் குடும்பத்திற்கும், இயக்கத்திற்கும் இரங்கல் செய்தி அனுப்பி ஆறுதல் சொன்னார்.

முதலமைச்சர் ஆறுதல் சொன்னார் என்றால், தமிழ்நாடே ஆறுதல் சொல்கிறது என்று அதற்குப் பொருள்.

அவர் தமிழ்நாட்டையும் தாண்டி, திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதை சொல்லும் என்று சொன்னோம். திராவிடம் வென்றது - இன்றைக்கு இந்தியாவிலேயே எடுத்துக்காட்டான முதலமைச்சர் எங்கே இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

தோழர் கோ.சி. மணியை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவர் அய்யா இராசகிரியார்

இங்கே இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கெல்லாம் தெரியும். இந்த வட்டாரத்திலேயே சோழ மண்டல தலைவர் என்று கலைஞரால் அழைக்கப்பட்டவர் தோழர் கோ.சி.மணி.

மறைந்தும் மறையாமல் இருக்கும் மேனாள் அமைச்சரும், சிறந்த சுயமரியாதை வீரருமான தோழர் கோ.சி. மணி அவர்களை இந்த இயக்கத்திற்குக் கொண்டு வந்த ஒருவர்தான், இங்கே படமாக இருக்கக்கூடிய அருமை அய்யா இராசகிரி அவர்களாவார். அவருடைய பணி என்பது கொள்கைத் திருப்பணியாகும்.

அப்படிப்பட்ட பணியை 97 வயதிலும், இறுதி மூச்சு அடங்குகிற வரையிலும் அவர்கள் செய்தார் என்றால், நமக்கெல்லாம் பாடம். தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று சின்னதோர் கடுகு உள்ளத்தோடு இல்லாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம் மக்கள் என்று தாயுள்ளத்தோடு பழகுங்கள் என்பதற்குத்தான் அவர் அடையாளம்.

ஆகவேதான், அவர் படமாகி விட்டாலும், நமக்கு என்றைக்கும் பாடமாகத் திகழ்கிறார். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது - பெரியாருடைய நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தவேண்டும் - அய்யா மறைந்துவிட்டார் உடலாலே! அன்னையார் முன்னின்று நடத்தவேண்டும்; அன்னையார் இல்லை.

எளியவன் என்னுடைய தலையில் விழுந்த சுமையை சுமந்தவர்கள் அய்யா இராசகிரியார் போன்றவர்கள்!

அந்த மிகப்பெரிய பொறுப்பு, சாதாரண எளியவனாகிய என்னைப் போன்றவர்களின் தலையில் விழுந்தது. ஆனால், அய்யா இராசகிரியார் போன்றவர்கள் அந்த சுமையை இணைந்து சுமந்து கொண்டார்கள்.

காரணம், என்னுடைய தோள்கள் எளிய தோள்கள்; என்னுடைய கால்கள் அவ்வளவு வலிமையானதல்ல.

ஆனால், நாங்கள் எல்லோரும் அமர்ந்திருப்பது பெரியாருடைய தோள்களில். அந்தத் தோள்களில் இயக்கத் தோழர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என்னைத் தூக்கி சுமக்கிறார்கள். எனவே, என்னை உற்சாகப்படுத்துகிறார்கள்.

பெரியாருடைய நூற்றாண்டையொட்டி 100 பவுன் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது

அந்த வகையில் திட்டமிட்டபொழுது, இந்தப் பாபநாசத்திலேதான், மறைந்த நண்பர் கருப்பையா மற்ற தோழர்கள் இருந்த காலத்தில், தஞ்சை மாவட்ட கமிட்டிக் கூட்டம் இங்கேதான் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரியாருடைய நூற்றாண்டு விழாவை எப்படி கொண்டாடுவது? என்று ஆலோசிக்கப்பட்டது.

அய்யா, அம்மா காலத்தில் திருச்சியிலேயே எல்லா கல்வி நிறுவனங்களும் தொடங்கி நடைபெற்று வந்தன. தஞ்சை மாவட்டத்தில் அதுபோன்று எதுவுமில்லை. பெரியாருடைய நூற்றாண்டு விழாவையொட்டி ஏதாவது செய்யவேண்டும் என்று அய்யா இராசகிரியார் சொன்னார்.

நூறு பவுன் கொடுப்பது என்று முடிவெடுத்தார்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு பவுன் விலை 80 ரூபாய்தான். 100 பவுன், 80 ஆயிரம் ரூபாய்தான்.

ஆக, 100 பவுன் கொடுப்பது என்று இந்த பாபநாசத்தில் கூடிய திராவிடர் கழகக் கூட்டத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. அதற்கெல்லாம் காரணம், அய்யா இராசகிரியார் அவர்கள்தான்.

பெரியார் பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள கட்டத்திற்கு இராசகிரியார் பெயர் சூட்டப்படும்!

தஞ்சையில் உள்ள பெரியார் பாலிடெக்னிக், உலகத்தின் சிறப்புப் பெற்ற பாலிடெக்னிக்காக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அய்யா இராசகிரியார் போன்றவர்களுடைய உழைப்பினாலே, மறைந்த கழகப் பொருளாளர் அய்யா கா.மா.குப்புசாமி போன்றவர்களுடைய உழைப்பினால், அது வந்தது என்கிற காரணத்தினால், நிச்சயமாக அய்யா இராசகிரியார் அவர்கள், எந்தப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர் என்கிற முறையில், அந்தப் பாலிடெக்னிக் வளாகத்தில் ஒரு கட்டடத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்படும் என்று இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் கூறி,

எல்லோரும் ஆறுதல் பெறுவோம் -

எல்லோரும் அவரைப் படமாக மட்டும் பார்க்காமல், பாடமாகப் பெற்று, அவர் விட்ட பணியை நாம் உண்மையோடு, நேர்மையோடு, கடமை உணர்வோடு செய்து முடிப்போம் என்று சொல்லி,

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

வளர்க சமூகநீதி!!! நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment