நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது தமிழ்நாடு பெரும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது போர்க்கால நடவடிக்கையில் அரசு தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது தமிழ்நாடு பெரும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது போர்க்கால நடவடிக்கையில் அரசு தீவிரம்

முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை , நவ.28 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. அரசின் போர்க்கால நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

வங்கக் கடலில் நாளை (29.11.2021) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாட்டில்  வட கடலோரப் பகுதிகளில் உள்ள சென்னை மற்றும் காவிரி நீர்ப் பிடிப்பு (டெல்டா) மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில்  மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே தொடர் மழையால் தலைநகர் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சையில் மழைக்கு 159 வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. மாநிலம் முழுவதும் பெய்த மழைக்கு ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் வட கடலோர மாவட் டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப் புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மய்யம் "சிவப்பு" எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாத புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய

4 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு" எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன.

இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் நா.புவியரசன் நேற்று (27.11.2021) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28, 29, 30 மற்றும் டிச. 1-ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (29.11.2021) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக 29, 30-ஆம் தேதிகளில் அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்றும் டிசம்பர் 1-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகள் ஆகியவற்றில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சர் மு.. ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் பல்வேறு பகுதி களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 650-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம் களில் தங்கவைக்கப்பட்டனர். தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலை, டாக்டர் நாயர் சாலை, ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் எல்.பி. சாலை, கலைஞர் கருணாநிதி நகர், வடபழனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந் தது. ஒருசில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட் டது. பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. புளியந்தோப்பு, திரு.வி..நகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று  (27.11.2021) ஆய்வு செய்தார். தேங்கிய மழை நீரை விரைவாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு

இதனிடையே நவ.26-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மழையால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 344 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 2,205 குடிசைகள், 273 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறை அமைச் சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீராலும், காட்டாற்று ஓடைகள் நிரம்பி ஓடுவதாலும், தாமிர பரணி ஆற்றில் தொடர்ந்து 3-ஆவது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அணையைத் தாண்டி நேற்று காலை 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் கலந்தது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை யில் தெற்கு ஆத்தூர் அருகே உள்ள வரண்டியவேல் தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.

நெற்பயிர்களை மூழ்கடித்தது மழைநீர்

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 159 வீடுகள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக இடை விடாமல் பரவலாக மழை பெய்துகொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக,  நேற்று  (27.11.2021) காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் மாவட்டத்தில் 123 குடிசை வீடுகள், 36 ஓட்டு வீடுகள் என 159 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, குழிமாத்தூர் பகுதிகளில் 500 ஏக்கர், அம்மா பேட்டை பகுதியில் 500 ஏக்கர், தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் 500 ஏக்கர் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வயல்களில் இருந்து மழைநீரை வடியச் செய்வதற்கு தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில், ஏற்கெனவே பெய்த மழைநீர் வயல்களில் இருந்து வடிவதற்குள், தற்போது கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேலும், கோட்டூர் ஒன்றியத்தில் காரியமங்கலம், சேந்த மங்கலம், இருள்நீக்கி, ஆலத்தூர், அகரவயல், புழுதிக்குடி, நெம்மேலி ஆகிய கிராமங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மாதத்துக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் அதே கிராமங் களில் உள்ள தற்காலிக திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இவை மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளதால், இவற்றை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியபோது, “கோட்டூர் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் முளைவிட்டு சேதம் அடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால், இதற்கு தாமதம் ஆகிறதுஎன்றனர்.


No comments:

Post a Comment