என்று முடியும் இந்தக் கொடுமை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

என்று முடியும் இந்தக் கொடுமை?

தமிழ்நாட்டில் மாணவச் செல்வங்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு

செங்கல்பட்டு,அக்.16- செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை அடுத்த அய்யஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கமல்தாஸ் (41). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷீபா. இவர் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் அனு (வயது17). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

மாணவி அனு சிறு வயதில் இருந்தே மருத்து வராகவேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து கடந்த மாதம் 12 ஆம் தேதி நீட் தேர்வு எழுதினார். தேர்வுக்குப் பிறகு தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறி வந்தார். தேர்வில் தேர்ச்சி பெறுவேனா என்பது தெரியவில்லை என்றும் அவர்களிடம் கூறினார். இதனால் தேர்வு எழுதிய பிறகு 3 நாள்கள் அவர் மனச்சோர்வுடன் காணப்பட்டார். சரியாக சாப்பிடாமலும் இருந்தார்.

கடந்த மாதம் 16 ஆம் தேதி அனுவின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விட்டனர். அனு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக அனு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து உடனடியாக செங்கல்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி அனு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் 28 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி அனு நேற்றிரவு (15.10.2021) 8 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறையாக நடந்து வந்த நிலையில் ஒன்றிய அரசால் நீட் தேர்வு திணிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் நீட் தேர்வு கூடாது என்று கூறிவரும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனும் சட்ட வரைவுகள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறமுடியாமல் போனது.

தற்பொழுது ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களால் நீதியரசர் .கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து நீதியரசர் .கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன் வரைவு தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. மேலும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்துக்கட்சியின ரும் நீட் தேர்வால் உயிரிழப்புகள் கூடாது என்று வலியுறுத்தி மாணவச் செல்வங்களை காக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசோ கண்டும் காணாமல், மனமிரங்காத ஒரு நிலையில் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment