கரோனா தொற்றால் உயிரிழப்பு ரயில்வே ஊழியர் குடும்பத்தினருக்கு பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

கரோனா தொற்றால் உயிரிழப்பு ரயில்வே ஊழியர் குடும்பத்தினருக்கு பணி

 புதுடில்லி,அக்.9- கரோனா தொற்றால் உயிரிழந்த 2,800-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல்தொடங்கிய 2020ஆம் ஆண்டு மார்ச்மாதம் முதல் தற்போது வரை 3,256ரயில்வே ஊழியர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதுபோல கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரயில்வேயில் பணி வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, இப்போது வரை வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்த 2,800-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட் டுள்ளதாக ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீதமுள்ளவர்களின் குடும்பத்தினருக்கும் விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, அக்.9 தமிழ்நாட்டில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கையிருப்பில் 50 லட்சத்து 12 ஆயிரத்து 159 தடுப்பூசிகள் உள்ளது. இதுவரை மொத்தம் 25 லட்சம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 100% பழங்குடியின மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விருதுநகரில் 88 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 83 சதவீதம் பேருக்கும், சென்னையில் 82 சதவீதம் பேருக்கும், மதுரையில் 79 சதவீதம், தேனியில் 75 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

மேலும், கரூர், நீலகிரி, அரியலூர், பெரம்பலூரில் மட்டும் 60 சதவீதத்துக்கும் குறைவான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் சராசரியாக 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 4 மாவட்டங்களுக்கு தடுப்பூசி பணிகளை மேம்படுத்த அதிகமான அளவில் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

வாய் நீளம்-  எச்.ராஜாவுக்கு  பிடியாணை

சிறீவில்லிபுத்தூர்,அக்.9- பா...வை சேர்ந்த எச்.ராஜா கடந்த 2018 செப்டம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசும்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஹரிஹரன் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சிறீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.  இவ்வழக்கில் ஆஜராகுமாறு, எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பியது. ஆனால் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில்  7.10.2021 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது எச்.ராஜாவுக்கு பிடியாணை பிறப்பித்து நீதித்துறை நடுவர் பரம்வீர் உத்தரவிட்டார்.

விசாரணைக்கு ஆஜராகாத எச்.ராஜாவைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த சிறீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment