ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி:. திராவிடர் கழகம் நடத்தும் ஒவ்வொரு மாநாட்டிலும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் நிலையில், அதே துன்பங்களை அனுபவிக்கும் நெசவாளர் குறித்து அதிகம் விவாதிக் கப்படாதது ஏன்?

- பாலன், தருமபுரி

பதில்: நல்ல கேள்வி; தொழிலாளரணியின் ஒரு தனி  அங்கமாக திராவிட நெசவாளர் அணியை, நெசவுத் தொழிலாளர்கள் நிறைந்த காஞ்சிபுரம், உறையூர், சேலம், திருவில்லிபுத்தூர் போன்ற பல பகுதிகளில் துவக்கவும், பிரச்சினைகளை பற்றி விவாதித்து உரியவர் கள் கவனத்திற்குக் கொண்டு  சென்று பரிகாரம் தேட உதவிடுவதும் நிச்சயம் செய்யப்படும்.  நமது கழக தொழிலாளரணியினர் இதுபற்றி இனி தனிக் கவனம் செலுத்த ஏற்பாடு செய்வோம். யோசனைக்கு நன்றி!

கேள்வி:  ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை பெரி தாக தமிழர்களுக்கு உதவாத நிலையில் புலம்பெயர் தமிழர் நல வாரியம் எப்படி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

- . சங்கர், திருமுடிவாக்கம்

பதில்: இருட்டைக் குறை கூறிக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை க் கொளுத்தி, வெளிச்சம் கொண்டு வருவது பாதுகாப்பானது அல்லவா? பல நல்ல விளைவுகள் இந்த ஏற்பாடு மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குக் கிடைக்கும் - நிச்சயமாக!

கேள்வி:  கருநாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு முதல் முறையாக திண்டகூரு கோயிலுக்குள் நுழைந்து பூஜை செய்தது சமூக நீதியின் வெற்றியல்லவா?

- சு.சத்தியமூர்த்தி, நாமக்கல்

பதில்: நாடு 'சுதந்திரமடைந்து' 75ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் - இப்படி ஒரு செய்தி ஓரளவு மகிழ்ச்சி யானது என்றாலும் பெருமைக்குரியதா?

"விடுதலை விடுதலை பறையருக்கும்

இங்கு தீயர்புலையருக்கும் விடுதலை"

என்ற பாரதி பாட்டு வெறும் பாட்டாகத் தானே பாடி, இசையை  ரசித்து - அம்மக்களின் வலியை கவனிக் கவே இல்லையே!

கேள்வி: கடந்த அதிமுக ஆட்சியில் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களின் அடாவடிப் பேச்சு களுக்கு எதிராக எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போதாவது காவல்துறை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கொடுத்துள்ள புகாருக் காவது நடவடிக்கை எடுக்குமா?

- .தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: இவ்வாட்சியில் காவல்துறையினர் அச்சம், குறுக்கீடு இன்றி சுதந்திரமாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் நடவடிக்கைகள் வரும் என்று நம்பலாம்; ஊறுகாய் ஜாடி இவ்வாட்சியில் காலியாகவே கிடக்கும்!

கேள்வி: நிலவைப் பற்றி அறிவியல் பூர்வமாக நன்றாக தெரிந்தும், பள்ளி கல்லூரிகளில் கற்பித்தும், மாகாளய அமாவாசை திதி என்று பெருங்கூட்டம் கூடுகிறதே- பகுத்தறிவு பிரச்சாரம் போதவில்லையா?

- இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில்: ஆசிரியர்களுக்கே தெளிவு இன்னும் முழு மையாக வரவில்லை.  அறிவியல் சொல்லிக் கொடுப் பவர் பலரே - அமாவாசை தர்ப்பணம், திதி, ராகு, கேது, கிரகணக்குளியல், சாப்பிடுவது கூடாது என்ற மூட நம்பிக்கைச் சேற்றில் சிக்கி அவதிப்படுவதிலிருந்து விடுபடவில்லையே!

அறிவியலைப் படிப்பது வேறு!

அறிவியல் மனப்பாங்காகக் கற்பது வேறு!

அதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்.

கேள்வி: அன்னை மணியம்மையார் மறைந்த பின்னரும்,  தாங்கள் அதிமுகவையும், திமுகவையும் இணைக்க முயற்சி எடுத்ததாகக் கூறப்படுகிறதே உண்மையா?

- கலியபெருமாள், (ஒய்வு பெற்ற ஆசிரியர்), கோரைக்குழி

பதில்: ஆம். எம்.ஜி.ஆர்.தான் தூது அனுப்பி ஏற்பாடு செய்ய என்னை நண்பர் சோலை மூலம் சொல்லி அனுப்பி, மணிக்கணக்கில் பேசி, கலைஞரும் இதற்கு ஒப்புக் கொண்டார் - ஆனால் அவரை நம்புவது பயனளிக்காது இறுதியில் என்று எச்சரிக்கை தந்தார். அதன்பின் ஒரிசா மேனாள் முதலமைச்சர் பிஜூ பட்நாயக் வந்து பேசினார்.  எல்லாம் கூடிவரும் போது குடிலர்களும், அன்றைய ஒன்றிய அரசின் உளவுத் துறையும் அவரைத் திசைதிருப்ப கலைஞர் சொன்ன படியே பின்வாங்கி விட்டார். முழு விவரம் பிறகு தனிக் கட்டுரையாகவே எழுதுவேன். அறிவாலயம் முரசொலி விருது நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோலை இதைப் பகிரங்கப்படுத்தி, கலைஞரும் அதுபற்றி பேசியது ஏடுகளில் உள்ளது!

கேள்வி: அய்யா காலத்தில் இருந்து தொடங்கி 97 வயது வரை தங்கள் தலைமையை, ஆணையை ஏற்று செயல்பட்ட  சுயமரியாதைச் சுடரொளி ராசகிரி தங்க ராசு அவர்கள்பற்றி தங்களின் நீங்கா நினைவு?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: ஓர் எடுத்துக்காட்டான லட்சிய இயக்கத் தொண்டர் - தளபதி - தலைவர் பொறுப்புக்கான தகுதி உடையவர். அடக்கமும்  ஆழமும் நிறைந்தவர். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் கொள் கையை, இயக்கத்தை, தலைமையை முன்னிறுத்தி இராணுவக் கட்டுப்பாடு காத்த மகத்தான மாமனிதர் - ரோல் மாடல் (Role Model).

கேள்வி: உத்தரப்பிரதேசத்தில் 48 மணிநேரம் போலீஸ் காவலில் வைத்திருந்தாலும் பின்வாங்காமல் உறுதியாக இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து வந்துள்ளாரே பிரியங்கா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: பிரியங்காவின் வீரத்தையும், துணிவையும் பாராட்டவே வேண்டும்! இது ஒரு நல்ல போர்க்குணமும் கூட! (Fighting Spirit).

கேள்வி: தந்தை பெரியார் தமிழும் தமிழரும் வளர்ச்சியடைய தடை மதமே என்பதைக் கண்டறிந்து,   போராடி மதத்தையும், மொழியையும் பிரித்து வளம டையச் செய்த நிலையில், இன்று சிலர் 'இந்துத் தமிழன்' என்று மறுபடியும் சாக்கடைக்குள் தள்ள நினைக் கிறார்களே?

- தமிழ் மைந்தன்,  சைதாப்பேட்டை

பதில்: கூலிப் படைகளின் கூக்குரல் எடுபடாது; இளைஞர்கள் ஏமாற மாட்டார்கள். அது அவர்கள் பா...வின் "சிலிப்பர் செல்கள்" என்பதைப் புரிந்த வர்கள் - 'இந்துத்தமிழன்' என்ற சொல்லாடலே அவர் கள் யாருடைய ஊதுகுழல்கள் என்பதை நாட்டுக்குச் சரியாக அடையாளம் காட்டும். மா.பொ.சி. கூட திராவிட இயக்க எதிர்ப்பு என்றெல்லாம் கூறி இறுதியில் இங்கே வந்துதான் மரியாதைகூட பெற்றார்! - வரலாறு கூறும் உண்மை அது! நம் இயக்கத் தினை எதிர்த்தும் விபூதி வீரமுத்துகளும் அணுகுண்டு அய்யாவுகளும் கூட கொக்கரித்தனர் - பலன் -  சுன்னம் (பூஜ்யம்) தானே!

கேள்வி:.  வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துள்ளார்களே சரியா?

- கருணாமூர்த்தி, நெய்வேலி

பதில்: 7.10.2021 அன்றைய எனது அறிக்கையே உங்கள் கேள்விக்கு உரிய பதில்!

No comments:

Post a Comment