அறிவை வளர்க்கும் படிப்பகங்களுக்கு ‘டொமஸ்டிக்' முறையில் மின்கட்டணம் விதிக்கவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

அறிவை வளர்க்கும் படிப்பகங்களுக்கு ‘டொமஸ்டிக்' முறையில் மின்கட்டணம் விதிக்கவேண்டும்!

முதலமைச்சருக்கும், மின்துறை அமைச்சருக்கும் தமிழர் தலைவர் வேண்டுகோள்

கோவை, அக்.26 அறிவை வளர்க்கும் படிப்பகங்களுக்குடொமஸ்டிக்' முறையில் மின்கட்டணம் விதிக்க வேண் டும்  என்று முதலமைச்சருக்கும், மின்துறை அமைச்ச ருக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 10.10.2021  அன்று முற்பகல் 11 மணியளவில் காணொலி மூலம் கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் பகுத்தறிவுப் படிப்பகத்தைத் திறந்து வைத்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பெரியாருடைய கருத்துகளுக்காகத் தாகம் கொண்டு தவிக்கிறது இன்றைய இளைய தலைமுறை!

பெரியாரைப் பார்க்காத தலைமுறை, இன்றைக்குப் பெரியாரை கொண்டாடுகிறது. பெரியாருடைய கருத்து களுக்காகத் தாகம் கொண்டு தவிக்கிறது - ஏக்கம் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை - மிக அருமையான ஒரு வாய்ப்பாக இன்றைக்கு இருக்கிறது.

எப்படி இந்த சூழ்நிலைகள் ஏற்பட்டன?

இந்தப் படிப்பகங்கள் அதற்கு முக்கிய காரணமாகும்.

நண்பர்களே, கல்வியிலே இரண்டு வகையான கல்வி உண்டு.

பார்மல் எஜூகேசன் - நான்பார்மல் எஜூகேசன்

பார்மல் எஜூகேசன் என்றால்,

வழக்கமாக சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளிக் கூடம் - ஆரம்பப் பள்ளிக்கூடம் - உயர்நிலைப் பள்ளிக் கூடம் - மேல்நிலைப் பள்ளிக்கூடம் - தொழிற்பள்ளிக் கூடம் - கல்லூரி - பல்கலைக் கழகம் - பட்டம் பெறுவது.

இவையெல்லாம் மரபு வழியில் - வழக்கமான கல்வி முறை.

நான்பார்மல் எஜூகேசன் என்றால் என்ன?

பல்கலைக் கழகங்கள் எல்லாம் பெரியாரை இன்றைக்கு ஆய்வு செய்கின்றன

அது இப்பொழுது பெரும்பாலும் இளகியது. பெரியார் நான்காம் வகுப்புகூட படிக்கவில்லை. ஆனால், பல் கலைக்கழகங்கள் அவர் பெயரால் அமைந்ததோடு மட்டுமல்ல  - பல்கலைக் கழகங்கள் எல்லாம் அவரை இன்றைக்கு ஆய்வு செய்கின்றன.

உலகளாவிய நிலையில் இன்றைக்குப் பெரியார், கூர்ந்து கவனிக்கப்படுவது மட்டுமல்ல, தேர்ந்து ஆய் வுக்குட்படுத்தப்படுகிறார்.

இன்று காலையில், ‘இந்து' நாளேட்டில் ஓர் ஆங்கிலப் புத்தகத்தினுடைய ஆய்வு வெளிவந்திருக்கிறது. அந்த புத்தகத்தினுடைய தலைப்பு To Kill A Democracy: India’s Passage to Despotism - ஜனநாயகத்தைக் கொல்லுகின்ற சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நுழைகின்றதோ என்பதைப்பற்றி ஓர் ஆய்வு.

Debasish Roy Chowdhury and John Keane

என்ற இரண்டு பேர் எழுதி, இன்றைக்கு அந்தப் புத்தகத்திற்கு மதிப்புரையை  Seema Chishti  என்ற ஒரு பெண் பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார்.

இரண்டு பெரும் ஆய்வறிஞர்கள் எழுதி, ஆக்ஸ் போர்டு யுனிவர்சிடி பிரஸ் வெளியிட்டுள்ள அந்த ஆங்கில புத்தகத்தில், அம்பேத்கர், பெரியார் ஆகி யோரைப்பற்றி ஒரு பகுதி வருகிறது.

நாடாளுமன்றத்தில் இருக்கின்ற வாக்கு வங்கியை யொட்டி வரக்கூடிய ஜனநாயகம் என்றாலும்,  அரசியல் சமத்துவத்தைவிட, சுதந்திரத்தைவிட, சமூகத்தில் ஏற் படக்கூடிய சுதந்திரம் இருக்கிறதே, அந்த சமத்துவமும், சுதந்திரமும்தான் உண்மையான மக்களாட்சிக்கு வழிவகுக்கும்.

இதை நீண்ட நாள்களுக்கு முன்பு அம்பேத்கர் சொன்னார். பல நேரங்களில், அவற்றையெல்லாம் தாண்டி, தந்தை பெரியார் போன்றவர்கள் மிகத் தெளி வாக உலகப் பார்வையோடு சொன்னார்கள்.

ஒரு நாட்டுக்காக, ஒரு நாட்டு மக்களுக்காக சொல்லவில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு - இங்கே சிலர் பெரியாரை, ஒரு சிறிய குமிழுக்குள் - பார்ப்பன எதிர்ப்புக்குள், கடவுள் மறுப்புக்குள் அடைத்து வைத்து - பெரியார் எப்பொழுது சொன்னார்? என்று திசை திருப்பி, பெரியார் யார் என்று ரத்தப் பரிசோதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக்கூடிய அற்பர்கள்; பார்ப்பனக் கைக்கூலிகள். அந்தக் கைக்கூலிகள், விபீஷண ஆழ்வாளர்கள்.

நாட்டில், விபீஷணர்களுக்கென்று இடமில்லை. அவர்களுக்கென்று இருக்கின்ற இடம் விபீஷணர்கள் அவ்வளவுதான் - அனுமார்களுக்கு எப்பொழுதும் உச் சத்தில் இடம் கிடையாது - எதிரிகளுடைய காலடிதான்.

அந்த அளவிற்கு இருக்கும்பொழுது, இப்படிப்பட்ட அறிஞர்கள், பெரியாரை நேரடியாகப் பார்த்து பேசாதவர்கள். எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

Debasish Roy Chowdhury and John Keane

அந்தப் புத்தகத்தை எழுதிய இரண்டு அறிஞர்களான Debasish Roy Chowdhury and John Keane ஆகிய இரண்டு பேர் சொல்கிறார்கள்,

Roy and Keane invoke Periyar’s worldview, of the essence of democracy being equality and freedom for each of its members. It is not limited to elections where “bread and fish” secure votes and sap the system of its essence. A “well-functioning democracy requires a special kind of social life. Democracy is freedom from hunger, humiliation and violence... It’s freedom from fear and the right not to be killed. It’s equal access to decent medical care and sympathy for those who have fallen behind. Democracy is a learned sense of worldly wonder. It’s the everyday ability to handle unexpected situations wisely. It’s the rejection of the dogma that things can’t be changed because they’re ‘naturally’ fixed in stone.”

By meticulously recording the degrading of life in India for an average citizen, the authors conclude that India had been setting itself up for a collapse. The dangers of the promise of equality, once it remained unfulfilled, lead to a contempt for democracy when large sections begin to thirst for someone who could cut through the system and deliver. “Give me a despot,” they said.

The despotism in India has come combined with Hindutva ideology, which as a consequence of electoral dominance, is trying to fundamentally remake the nation as an ethnic democracy. Even though this was pointedly negated during the freedom struggle and the crafting of the Constitution.

‘‘ஒரு ஜனநாயகத்தின் மக்களாட்சியினுடைய அடிப் படை - கரு - தத்துவம் எதைப் பொறுத்தது - எப்படி அமைந்தது என்று சொன்னால், அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் இருக்கக்கூடிய சுதந்திரமும், அவர்கள் பெறக்கூடிய சமத்துவமும்தான்.

தேர்தல் நேரத்தில் நாங்கள் அதைக் கொடுக்கிறோம் - எனக்கு ரொட்டி கிடைக்கும், மீன் கிடைக்கும் என்பதைப் பொறுத்ததல்ல. வாக்குகள் வாங்கிவிட்டோம், மக்கள் போட்டு விட்டார்கள் - நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டோமே என்று சொல்லி, சர்வாதிகாரத்தில், ஜன நாயகத்திற்கு விடை கொடுத்து உள்ளே போக முடியாது.

உண்மையான ஜனநாயகம், பெரியாருடைய பார் வையில், உலகளாவிய அளவிற்கு உரிய இந்தத் தத்துவம் என்று சொல்கிறார்கள்.

பெரியாருடைய உலகளாவிய தத்துவம் என்ன வென்று சொல்லுகின்ற நேரத்தில்,

நன்றாக இயங்கக்கூடிய ஜனநாயகம் என்பது - சிறந்த சமூக வாழ்க்கை. அந்த சிறந்த சமூக வாழ்க்கை என்பது என்ன?

பசியிலிருந்து விடுதலை ஜனநாயகத்திற்கு -

வன்முறையும் இருக்கக்கூடாது - அதேநேரத்தில், அவமானப்படுத்தப்படக் கூடாது மக்களை!

நீ கீழ்ஜாதிக்காரன், நீ தொடக்கூடாதவன், நீ எதற்கும் லாயக்கற்றவன் - நீ தகுதியற்றவன், திறமையற்றவன் என்று சொன்னால்,

இது அவனுடைய சமத்துவத்தைவிட, சமத்துவம் பேதம் என்று சொல்வதைவிட, எட்டி நில் என்று சொல்வதைவிட, அவன் மனதில் தாழ்வு மனப்பான் மையை உண்டாக்கி, அவன் எதற்கும் பயன்படக் கூடாத அளவிற்கு ஆக்குவது ஜனநாயகத்திற்கே விரோதம்.

பயத்திலிருந்து வெளியே வந்தான். அந்தத் துணிச்சல், அதுதான் பெரியாருடைய தத்துவம்.

பெரியார் எல்லோருக்கும் உரியார்!

இப்படி பெரியாரைப் பேசாத நாள்கள் எல்லாம், ஆய்வு செய்யாத நாள்கள் எல்லாம் அவர்களுக்குப் பிறவா நாட்கள்.

அப்படிப்பட்ட ஒரு அற்புதமான சிந்தனை - பெரியார் எல்லோருக்கும் உரியார்.

இன்றைக்குப் புரிந்துவிட்டது -  நாம் சொன் னோம்  - நம்முடைய சுயநலத்திற்காக  அல்லது நம்முடைய தலைவருக்காக அதை சொல்லு கிறோம் என்று சிலர் குறுகிய பார்வையோடு கணக்குப் போட்டார்கள்.

ஆனால், இன்றைக்கு உலகம் சொல்லுகிறது - இந்த அறிஞர்கள் சொல்லுகிறார்கள் - ஆய் வாளர்கள் பதிவு செய்கிறார்கள் - ஆவணங்கள் சான்றாக அணிவகுத்து நிற்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பை, இன்றைக்கு நாம் காணுகிறோம்.

எப்படி?

நூலகங்கள், படிப்பகங்கள்- அவர் நடத்திய ஏடுகள்  குடிஅரசு', ‘பகுத்தறிவு', ‘உண்மை', ‘விடு தலை', ‘ஜஸ்டிசைட்', ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்', ‘புரட்சி' போன்றவை.

தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்

அண்ணா சொன்னார்,

தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என்று. மாலை நேரத்தில் வகுப்புகள் தொடங்கும் - மூன்று மணிநேர உரைகள் - அந்த உரைகள் எல்லாம் நல்வாய்ப்பாக தொகுக்கப்பட்டு நம்மிடம் இருக்கின்றன.

நூல்களாக ஆகியிருக்கின்றன - புத்தகங்களாக ஆகியிருக்கின்றன - கருவூலங்களாக ஆகியிருக்கின்றன - போற்றிப் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.

மற்ற மற்ற  உலகப் புரட்சியாளர்கள் - மதத் தலை வர்கள் எல்லாம் சொன்னார்கள், எழுதினார்கள் என்று இருக்கின்ற தத்துவார்த்தங்கள் எல்லாம் நேரடியான, ஆதாரத்தை சான்றாகக் கொண்டு இருக்கக் கூடியவை - நம்பிக்கைக் கொண்டு இருக்கக் கூடியன.

ஆனால், இது நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு மாறாக - சான்றைக் கொண்டிருக்கிறது - சரித்திர சான்றாக.

ஒரு கருத்தை பெரியார் சொன்னாரா என்றால், அப்படி சொன்னாரா?  சொல்லவில்லையா? என்பதற்கு ஆதாரம் இங்கே இருக்கிறது - அதற்கான சான்றை காட்டுவோம்.

நாங்கள் எல்லாம் ஆதாரத்தோடு பேசக்கூடியவர்கள்.

என்னைப்பற்றி இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார், கவிஞர் அவர்கள்.

எனக்கென்று சொந்த புத்தியில்லை - அது பெரியார் தந்த புத்தி.

அய்யா அவர்களே, 95 வயதில், கடைசி மேடையில்கூட, ஒரு நோட் பேட் வைத்துக்கொண்டு, என்ன பேசவேண்டும் என்பதை எழுதுவார்; எதை எதைப் பேசியிருக்கிறோம் என்று எழுதுவார்கள்.

அவையெல்லாம் நான்பார்மல் எஜூகேசன் - இந்தப் படிப்பகங்கள் - அவற்றைத் தொகுத்து வைப்பது படிப்ப கங்கள் - நூலகங்கள்.

இவைதான் அறிவுப் புரட்சியினுடைய ஊற்றுக்கள். அதிலிருந்து வருகின்ற நாற்றுகள்தான் இன்றைக்குப் பல தலைவர்களாக வந்திருக்கக்கூடிய பெருமக்கள் - ஆய் வாளர்களாக - பேராசிரியர்களாக - கல்வியாளர்களாக மலர்ந்திருக்கிறார்கள்.

‘‘காமராஜரை ஏன் ஆதரிக்கவேண்டும்?’’

பெரியார் அய்யா சொன்னார், படிப்பகங் கள்தான் மிகவும் முக்கியம் என்று.

சோழவந்தானில், காமராஜர் அவர்களின் பெயரால், ஒரு காங்கிரஸ் தியாகியினுடைய மகன், படிப்பகத்தை உருவாக்கினார்.

அங்கே தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - ‘‘காமராஜரை ஏன் ஆதரிக்க வேண்டும்?'' என்ற நூலில் வெளிவந்திருக்கிறது.

படிப்பகங்களைப்பற்றியே அவர் பாதி உரைக்கு மேல் பேசியிருக்கிறார்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கி 90 ஆண்டு களுக்குமேலாக ஆகியிருக்கின்றன.

நாகர்கோவிலில், கோட்டாறு என்ற பகுதியில், சுயமரியாதை வாசிப்பு சாலை - படிப்பகம் இருந்தது. அதிலிருந்துதான் நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் என ஏராளமானோர் வந்தார்கள்.  நீண்ட காலமாக அந்த வாசிப்பு சாலை இருந்தது - அது நம்முடைய பொறுப்புக்கு வராமல், வேறொருவரிடத்தில் இருந்ததால், சிதைந்து போனது. அதற்குப் பதிலாக வேறொரு இடத்தில் (ஒழுகினசேரி) படிப்பகத்தைத் தொடங்கினோம். நம் கைகளில் இருந்திருந்தால், அதை இன்றும் சிறப்பாக செயல்பட வைத்திருப்போம்.

தென்மாபட்டு முருகய்யா வாத்தியார்  வைக்கம் வீரர் வாசக சாலை

அதற்கடுத்தபடியாக, பழைய இராமநாதபுரம் (இப் பொழுது சிவகங்கை மாவட்டம்) திருப்பத்தூருக்கு பக்கத்தில் உள்ள தென்மாபட்டு என்ற ஊரில், முருகய்யா வாத்தியார் என்பவர் எல்லோராலும் பேசப்படக்கூடியவர். பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாலையில், ‘‘வைக்கம் வீரர் வாசக சாலை'' என்ற படிப்பகத்தை சிறப்பாக நடத்தி வந்தார். அது கொஞ்சம் கொஞ்சமாக நலிந்தவுடன், நல்ல வாய்ப்பாக நம் கவனத்திற்கு வந்தபொழுது, இப்பொழுது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள், சென்ற முறை அமைச் சராக இருந்தபொழுது, சிறப்பான வகையில் கட்டடங் களைக் கட்டி,  தவத்திரு பொன்னம்பல அடிகளாரையும், என்னையும் அழைத்திருந்தார். சிறப்பான அளவிற்கு இன்னமும் தொடர்கிறது. நம்முடைய அமைச்சர் அவர் களின் முயற்சியினாலும், தி.மு.., தி.. தோழர்களுடைய முயற்சியினாலும் தென்மாபட்டு முருகய்யா வாத்தியார் அவர்களுடைய நினைவைப் போற்றும் - வைக்கம் வீரர் வாசக சாலை என்ற பெயரில் சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது.

குனியமுத்தூர் சதாசிவம் - அம்மணி அம்மாள்

அதேபோன்று, கோவையை எடுத்துக்கொண்டால், என்றைக்கும் போற்றி, நம் நினைவில் இருக்கக்கூடிய நம்முடைய அய்யா குனியமுத்தூர் சதாசிவம் அவர்களும், அம்மணி அம்மாள் அவர்களும் பாடசாலையை நடத்தினார்கள். அதையொட்டி படிப்பகத்தையும் நடத்தி வந்தார்கள்.

கோயம்புத்தூர் குனியமுத்தூரில் உள்ள படிப்பகம் நீண்ட நாள்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

எனவே, படிப்பகங்கள்தான் நம்முடைய அறிவுக்கு நல்ல அளவிற்கு வாய்ப்பை உருவாக்குகின்ற கல்வியகங்கள் - அரசியல் கல்வியகங்கள் - சமூகக் கல்வியகங்கள் - சமத்துவத்தைப்பற்றி பேசக்கூடியவை.

திராவிட இயக்கம் வளர்ந்ததே திண்ணைகளில்தான்!

திராவிட இயக்கம் வளர்ந்ததே திண்ணைகளில்தான். அங்கேதான் விவாதங்கள் நடைபெறும்.

நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான்கள் எல்லாம், பெரிய வரலாற்றுச் சின்னங்கள் போன்று வித்தைகளைக் காட்டுகின்றன. கேவலப்படுத்தப்படக் கூடியவை அவை.

கூலிப்படைகள் - போர்ப் படைகளோடு ஒப்பிடப்பட முடியாதவை!

கூலிப் படைகள் என்றும் நிலைத்ததாக சான்று இல்லை; அப்படைகள் போர்ப் படைகளோடு ஒப்பிடப்பட முடியாதவை. கூலிப் படைகள், போர்ப்படைகளைவிட அதிகமாக இருக்கலாம். ஆனால், அவை நிலைத்ததாக வரலாறு கிடையாது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னதை நான் அடிக்கடி மேற்கோளாகக் காட்டுவேன்.

‘‘பேயைவிட, பேய் பிடித்தவன் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் அதிகமாக ஆடுவார்கள்'' என்று சொல்வார். அதுபோன்று இன்றைக்கு சில பேர், தங்களைவிட பெரியாள் யாருமில்லை என்று நினைக்கிறார்கள்.

விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்றவர்கள் எல்லாம் இடம் தெரியாமல் போனார் கள். .பொ.சி. அவர்கள், திராவிட இயக்க ஒழிப்பு மாநாடுகளை மாவட்டந்தோறும் நடத்தினார்.

திராவிடம் போட்ட பிச்சையினால்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

இன்றைக்கும் ஒருவர், ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்', ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றார். திராவிடம் போட்ட பிச்சையினால்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்.

திராவிடத்தைக் காட்டித்தானே நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; உங்களுக்கு கூலி அதில்தானே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இதையெல்லாம் இளைஞர்கள் பொருட் படுத்தவேண்டும். உண்மை எப்பொழுதும் நிலைக்கும். உண்மையை நிரூபிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்; ஆனால்,  கற்பனைகள் - ஒப்பனைகள் கொஞ் சம் நேரம் கலையாமல் இருக்கும்; ஆனால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே, அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், எச்சரிக்கையாக இருக்கவேண்டும்; ஏமாந்துவிடக் கூடாது.

இன்றைக்கு நமக்குரியவர்கள், கருமத்திற்குரியவர்கள், கடைசி வரையில் இருக்கக் கூடியவர்கள்.

படிப்பகத்தை தோழர்கள்

தொழிலாக நினைக்கவில்லை!

இதை வைத்துப் பிழைக்கவேண்டிய அவசிய மில்லை. பெரியார்தான் சொல்வார், ‘‘என்னுடைய தோழர்களைப் பாருங்கள்; இவ்வளவு பெரிய படிப்பகத்தை வெள்ளலூரில் உருவாக்கி இருக் கிறார்களே - இதைத் தொழிலாக நினைக்கின்ற வர்களா? என்னுடைய மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மண்டல தலைவர், பொறுப் பாளர்கள், தோழர்கள் எல்லாம் இந்த இயக்கத் திற்குத் தங்களுடைய உழைப்பையும், தொண் டையும், பொருளையும் கொடுக்கின்றவர்களே தவிர, இயக்கம் அவர்களுக்கு சம்பளம் கொடுப் பதில்லை. இப்படி ஓர் இயக்கம் - உலகத்திலேயே வேறு எங்கும் கிடையாது'' என்றார்.

ஆகவேதான், இந்தப் படிப்பகம் என்பது இருக்கிறதே, அது ஓர் அரிய வாய்ப்பு - நூலகம் மிகச் சிறப்பானது.

பெரியாருடைய பாசறை - இருகூர்!

வெள்ளலூர் பகுதிகளுக்கு நான் வரும்பொழுது, பழைய நினைவுகளை மறக்க முடியாது. இருகூர் என்பது பெரியாருடைய பாசறை - இன்றைய இளைஞர்களுக்கு அந்தத் தகவல்கள் எல்லாம் தெரியாது. இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டவர் தீவிரம் போன்றவர்கள், அவருடைய சகோதரர்கள், அவருடைய குடும்பத்தினரைப் போன்று ஒவ்வொருவரையும் பார்த் தீர்களேயானால், இந்தக் கோவை பகுதியில் ஏராளம் உண்டு.

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்த வர்களின் பட்டியல் ஏராளம் உண்டு. அதிலும் ஒரு கொடுமை என்னவென்றால், ஏராளமான தோழர்களை இந்தக் கரோனா கொடுமையினால் இழந்திருக்கின்றோம்; என்னால் செரிமானம் செய்துகொள்ள முடியாத இழப்புகள் அவை. ஒரு போர் நடந்துகொண்டிருக்கின்றது இப்பொழுது - நல்ல வாய்ப்பாக ‘‘திராவிடம் வெல்லும் அதை நாளைய வரலாறு சொல்லும்'' என்று சொன்ன நேரத்தில், அதற்கு எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத் தனர் - திராவிடம் வென்றது.

ஆனால், இங்கே  - கோவையில் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதை காவி மண்ணாக ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்; அவர்களு டைய கனவு பலிக்காது.

என்னிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள், பா... தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று சொன்னீர்களே, நான்கு இடங்களில் அவர்கள் வெற்றி பெற்று இருக் கிறார்களே? என்று.

காலூன்றவில்லை - தோள் ஊன்றினார்கள்!

காலூன்றுவது என்றால் என்ன? அவர்கள் தனித்து நின்று வெற்றி பெற்றால் சொல்லலாம்;  அவர்கள் தோள் ஊன்றினார்கள் என்று சொன்னேன். அடுத்தவர்களு டைய தோள்மீது ஏறி நின்று இந்த வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.

எனவே, என்றைக்கு அவர்கள் தனியே நின்று வெற்றி பெறுகிறார்களோ, அப்பொழுதுதான் அவர்கள் காலூன்றியவர்கள் என்று அர்த்தம்.

அடுத்தவர்களின் தோள்மீது ஏறிக்கொண்டு, என் னுடைய உயரம் எவ்வளவு என்று காட்டுவது என்றால், அது தோள் ஊன்றுவதே தவிர, காலூன்றுவது என்று ஆகாது.

பொய்க்கால் மட்டுமல்ல - மிஸ்டு கால்!

தோளிலிருந்து இறக்கிவிட்டால், அவர்களால் காலூன்றி நிற்க முடியாது. ஏனென்றால், அது பொய்க்கால் மட்டுமல்ல - மிஸ்டு கால். ஆகவே, அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டாம்.

அவர்களால் நேரிடையாக வர முடியவில்லை என்பதினால்தான், கூலிப்படைகளைப் பிடிக்கிறார்கள்.

கூலிக்கு மாரடிப்பது என்று சொல்வார்கள் இல்லையா - அதுபோல, உண்மையாக அழுபவர்களுக்கும் - கூலிக்கு மாரடித்து அழுபவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா - அதை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் நண்பர்களே!

இன்றைக்குப் பெரிய விழா நடைபெறுகிறது - அய்யா இராமச்சந்திரனார் அவர்கள், அவருடைய துணைவியார் ரங்கநாயகி அம்மையார் அவர்கள், இன்னும் மற்ற தோழர்கள். குடும்பம் குடும்பமாக எங்களுடைய இயக்கத் தோழர்கள்.

எங்களுடைய குடும்பம் என்று சொல்வது - ரத்த உறவு குடும்பம் ஒரு பக்கம் - கொள்கை உறவு குடும்பம் என்பது ரத்த உறவு குடும்பத்தைவிட வலிமையானது.

மகளிர் அமைப்பினரைப் பார்த்தீர்களேயானால், கோவை மகளிர், கலைச்செல்வி தலைமையில், மற்ற மற்ற தோழர்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தில் உரிமை மிக்கவர்கள்.

ஒரு போராட்ட அறிவிப்பா? மகளிர் வருவார்கள். என்ன அதற்கு அடிப்படை? என்ன பதவி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்? ஒன்றும் இல்லையே!

நான் அடிக்கடி சொல்வதுபோன்று, பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்.

உலகம் பெரியார் மயம்பெரியார் உலக மயம்!

ஆனால், இன்றைக்கு இளைஞர்கள் பலர் முன்வருகிறார்கள்- இந்த இயக்கம் இருக்கும் என்பது மட்டுமல்ல, பெரியார் உலகமே இப்பொழுது புதுப்பிக்கக் கூடிய அளவிற்கு, உலகம் பெரியார் மயம் - பெரியார் உலக மயம்; பெரியார் சிந்தனைகள் - பெரியார் உலகமாக மக்கள் மத்தியில் உருவகப்படுத்தப்படவிருக்கிறது.

அந்த உலகத்தைப் பார்த்தால், இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்களே,  இதோ அந்த உலகம் பாருங்கள் என்று சொல்வதற்குத்தான், பெரியார் உலகம்.

ஆகவே, நான் வெள்ளலூருக்கே வந்து இந்த நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவேண்டும் என்றுதான் ஆயத்தமானேன். அதற்காகவே இந்த நிகழ்வு தள்ளித் தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், இன்னமும் கரோனா தொற்று மற்ற மாவட்டங்களைவிட கோவையில் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், நம்முடைய நிகழ்ச்சிக்கு ஏராளமான தோழர்கள் வருவார்கள்; அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்கிற காரணத்தினாலும், நம்முடைய தோழர்களுடைய உயிர் மிக முக்கியம் என்கின்ற காரணத்தினாலும், பொதுமக்களுடைய உயிரும் மிக முக்கியம் என்பதினாலும், அந்த வகையில், ஒரு பெருந்திரளாக இந்த நிகழ்ச்சிக்குக் கூடவேண்டாம்; ஓர் அரங்கத்தில் நடந்தாலும்போதும், காணொலிமூலம் நடத்துங்கள் என்ற முடிவுக்கு நாம் வந்தோம்.

மணி அவர்களுடைய குடும்பத்தினரைச் சந்திப்போம்!

அருமைத் தோழர்களே, அடுத்து நாம் கோவைக்கு வரக்கூடிய வாய்ப்பு வரும்பொழுது, நிச்சயமாக இந்தப் பகுதிக்கு வருவோம். வெள்ளலூர் தோழர்களையெல்லாம் பார்த்து, மணி அவர்களுடைய குடும்பத்தினரைச் சந்தித்து, இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்து, தோழர் களை சந்திப்பேன் என்று கூறி,

மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு ஒழியவேண்டும் என்று மிகப்பெரிய அளவிற்கு, மாநிலம் தழுவிய அளவிற்கு பிரச்சாரத்தை முதல் கட்டமாக ஆக்குகிறோம்.

12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம்!

நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள் அற்புதமான முயற்சிகள் செய்து, நீதிபதி .கே.ராஜன் அவர்கள் கொடுத்த அறிக்கையை 8 மொழிகளில் மொழி பெயர்த்து, 12 முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதங்களும் பொறுப்பாளர்கள்மூலம் அந்தந்த முதலமைச்சர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அவரவர்களுக்கு அந்த உணர்ச்சிகளை உண்டாக்கி, ஓர் அகில இந்திய இயக்கமாகக் கட்டுவதற்கான ஏற் பாடுகளை மிக அடக்கமாக, ஆழமாக செய்துகொண் டிருக்கிறார்.

நாங்கள் மனம் தளரமாட்டோம்!

எனவே, ஏற்கெனவே முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து, 21 ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்றோம்.

ஆகவே, நாங்கள் மனம் தளரமாட்டோம்; களத்தில் நிற்கின்ற வீரர்கள் எவரும், வெற்றியை எதிர்கொண்டு தான் போராடுவார்கள் - உயிரையே இழப்பது என்று சொன்னாலும்கூட!

அப்படிப்பட்ட உறுதியில், உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை நாம் பெற்றிருக்கின்றோம்.

அதற்கு வாய்ப்பாக, என்றாலும் இந்தப் படிப்பகம் கட்டி நீண்ட காலம் ஆகின்றது என்பதற்காகத்தான், காணொலிமூலமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றேன்.

பெரியாருடைய சிந்தனைகள் உலகளாவிய சிந்தனைகளாக உள்ளன!

எனவே, இந்த சூழ்நிலையில் நண்பர்களே, பெரியாரு டைய சிந்தனைகள் உலகளாவிய சிந்தனைகளாக உள்ளன. இன்றைக்கு ஆய்வுக்குரியவைகளாக இருக் கின்றன.

கற்போம் பெரியாரியம்' என்ற நூலை நீங்கள் வாங்கிப் படித்தால், உங்களுக்குப் புரியும். எல்லோருக்கும் ஏற்ற ஒரு பாட புத்தகம் போன்று அமைந்திருக்கிறது. எனவே, அதை படித்தவர்கள்மூலமாகப் பரப்புங்கள்.

இந்தப் படிப்பகங்களில், மாலை நேரங்களில், மாலை நேர கல்லூரியாக, பிரச்சாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்; இந்தப் பகுதியில் உள்ள வாய்ப்புக் குறைந்த, வசதி குறைந்த மாணவர்களுக்கெல்லாம் டியூசன் முறையில், அவர்களுக்குக் கணினி பயிற்சி உள்பட கொடுத்து சிறப்பான பணிகளை செய்யவேண்டும்.

இதற்கு ஒத்துழைப்புக் கொடுத்த தோழர்களைப் பாராட்டுகிறேன். இரண்டு லட்சம் ரூபாயினை அம்மா தவமணி அவர்களும், டாக்டர் கிருஷ்ணகுமார் அவர் களும் கொடுத்திருக்கிறார்கள்; அவர்களுக்கு நன்றி!

நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். தலைமைக் கழகம், மேலும் 20 ஆயிரம் ரூபாய்க்கான புத்தகங்களைக் கொடுத்து, ஆக மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கான புத்தகங்களை அனுப்புகின்றோம்.

ஒரு நல்ல நூலகம் என்று பெயருக்கு உரிய அளவில், சிறப்பாக செயல்படவேண்டும். 24 மணிநேரமும் ஒரு கண்காணிப்பாளர் இருக்கவேண்டும்.

இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ளவிருக்கின்றேன்.

முதலமைச்சருக்கும் - மின்சாரத் துறை அமைச்சருக்கும் நமது கோரிக்கை!

மாலை நேரங்களில் ஓய்வு நேரம் என்பதினால், நூலகத்திற்கு வந்து படிப்பார்கள்; மின்சாரம் இருக்க வேண்டும்; இப்பொழுது மின்சாரத் துறையில், வியா பாரத்திற்கு ஒரு கட்டணத்தை  வைத்திருக்கிறார்கள்; ஆனால், பொது அமைப்பில் இருக்கக் கூடியவர்கள் அதுபோன்ற கட்டணத்தைக் கட்ட முடியாது.

ஆகவே, ஒரு வேண்டுகோளை, தமிழ்நாடு அரசுக் கும், குறிப்பாக முதலமைச்சர் அவர்களுக்கும், மின்சாரத் துறை அமைச்சருக்கும் நான் வைக்கிறேன்.

அக்கோரிக்கை என்னவென்றால்,

நாடெங்கும் இருக்கின்ற படிப்பகங்கள் - நூலகங்கள் - அறிவகங்கள் - மரபு சாரா கல்வி முறையை அறி வுறுத்தக் கல்வி நிலையங்கள். மாலை நேரங்களில் சிறப்பான வகையில், டியூசன் போன்றவை நடத்தப்பட வேண்டும். அதுபோன்றவைகளுக்கு கமர்சியல் ரேட் என்று போடுகிறார்கள்  மின்சாரக் கட்டணத்தில், 100 யூனிட் இலவசம். அதற்கு மேல் வரும் யூனிட்டிற்குத்தான் கட்டணம். ஆகவே, 100 யூனிட் மின்சாரத்தை இலவச மாகக் கொடுத்தால் போதும்.

ஆகவே, இதனைப் பரிசீலிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். பரிசீலிப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

அந்த வகையில், படிப்பகங்கள் சிறப்பாக நடை பெறுவதற்கு,  நல்ல எதிர்காலம் இந்த ஆட்சியில் உண்டு. ஏனென்றால், இது பொற்கால ஆட்சி - திராவிட இயக்க ஆட்சி.

உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment