"இல்லம் தேடி கல்வித் திட்டம்"- தமிழ்நாட்டு கல்விக் கொள்கைக்கு எதிரானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

"இல்லம் தேடி கல்வித் திட்டம்"- தமிழ்நாட்டு கல்விக் கொள்கைக்கு எதிரானது

சென்னை, அக். 26 -  இல்லம் தேடிக் கல்வி திட்டம்  என்ற பள்ளிக்கல்வித்துறையின் திட்டம் தமிழக அரசின்  கல்விக் கொள்கைக்கு நேர் எதிரானது என்று தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறி யுள்ளது. சங்கத்தின் நிறுவனத் தலைவர் .மாயவன், பள்ளிக் கல்வி இயக்கக ஆணையருக்கு மனு  ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பெருந்தொற்றால் மாணவர்களி டையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைத்திட வேண்டும் என்ற உயரிய இலட்சியம்  வரவேற்கத்தக்கது.  ஆனால் அதே சமயம் அந்த  உயரிய இலட்சியத்தை அடைவதற்கு, நமது பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டிருக்கும் வழிமுறைகள் மிகவும் ஆபத்தானவை. பல மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்கக் கூடியவை.

தேசியக் கல்விக்கொள்கை 2020-க்கு  தமிழ்நாட்டில் இடமில்லை, அதை முற்றிலு மாக நிராகரித்து, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று  தமிழ்நாடு சட்டமன்றத்தில், நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாடு அரசு அறிவித்தது.  ஆனால் இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை யில் அதற்கு நேர் எதிரான செயல்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திட வேண்டு மென்று தேசியக் கல்விக் கொள்கை - 2020 தெரி விக்கிறது. அதை அப்படியே ஏற்று நடைமுறைப் படுத்தும் திட்டமாக இந்த இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் அமைந்திருக்கிறது.

குழந்தைகளின் கல்வி நாசமாகும்

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் படி 1 முதல் 5 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க, +2 படித்தவர் களையும், 6 முதல் 8 வகுப்புகளுக்கு பாடம்  கற்பிக்க ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்க ளையும் பயன்படுத்தலாம். ஆசிரியர் பயிற்சிக் கல்வி பயின்று அதில் பட்டயமோ அல்லது பட்டமோ பெற்றவர்கள் தேவையில்லை என்ற பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பு, ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் விளிம்பு  நிலை மக்களின் குழந்தைகளின் கல்வியை நாசம் செய்துவிடும். அவர்களின் சிறப்பான  கல்விக்கு வழிவகுக்காது. மேற்கூறியவர் களைப் பயன்படுத்தினால் ஏராளமான வேண்டாத, தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமே தவிர மாணவச் செல்வங்களின் ஆக்கப்பூர்வமான கல்விக்கு ஊக்கமளிக்காது.

காலையில் பள்ளிகளுக்கு வரும் குழந்தை கள் - பிற்பகல் 4 மணி வரை பள்ளிகளில் இருப்பார்கள். மாலை பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளை இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் மடக்கி மாலை 5 மணிமுதல் 7 மணி வரை முடக்கி வைப்பது  மாணவர்களுக்கு, கல்வி மீதும், பள்ளி மீதும் வெறுப்புத்தான் ஏற்படுமே தவிர விருப்பு ஏற்படாது. மாணவர்களுக்கு மன உளைச்ச லும், மன அழுத்தமும் தான் ஏற்படுமே ஒழிய படிப்பு ஏறாது.

குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும்

குழந்தைத் தொழிலாளர்களை ஏராளமாக உருவாக்கும் திட்டம்  இது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏழை எளிய மற்றும் விளிம்பு நிலை பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை மாலை நேரத்தில் நடை பெறும் பள்ளிக்கு அனுப்புவோம்; பகலில் அவர்களையும் தங்களுடன் வேலைக்கு அழைத்துச் சென்று குடும்ப வருவாயைப் பெருக்க வழி பார்ப்போம் என்று எண்ணி செயல்படுவார்கள். ஆகவே இல்லம் தேடி  கல்வி - என்ற திட்டம் தமிழ்நாட்டில் குழந்தைத்  தொழிலாளர்களை ஏராளமான அளவில் உற்பத்தி செய்யும் திட்டமாக மாறிவிடும். இல்லம் தேடி கல்வி - என்ற திட்டம், குழந்தைகளுக்கு குலத்தொழில் கல்வித் திட்டத்தைத்தான் அறிமுகப்படுத்த உதவுமே தவிர மற்ற எதற்கும் பயன்படாது.

முறைசார் கல்விக்கு மூடுவிழா நடத்தவா?

இல்லம் தேடி கல்வி எனும் திட்டம் மாண வர்கள் பள்ளிகளுக்கு சென்று முறையாக கல்வி  பயிலும் முறைசார் கல்வி முறைக்கு மூடு விழா  நடத்துவதற்கும்; அரசுப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு, தனியார் பள்ளிகளையும், சிபிஎஸ்இ பள்ளிகளையும் ஊட்டி வளர்ப்பதற்கும் தான் பயன்படும். கல்வித் துறையில் எப்படியாவது ஊடுரு வல் செய்து, மாணவச் செல்வங்களின் பிஞ்சு உள்ளங்களில் மதச்சார்பின்மைக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை விதைப்பதற்கு காத்துக்  கிடக்கும் ஏராளமான சக்திகளுக்கு இந்த இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அவர் களுக்கு கதவுகளை அகலத்திறந்து விடுவ தற்கும், அவர்கள் அதில் பயணிக்க நடை பாதை அமைத்துத் தருவதற்கும் வழிகோலு கிறது. சுருக்கமாகச் சொன்னால் குட்டையைக் கலக்கி, பருந்துகளுக்கும் கழுகுகளுக்கும் விருந்து அளிக்கும் திட்டமாக இந்த திட்டம் மாறிவிடுமோ என்ற எங்களது அச்சத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆகவே இதில் அவசரம் காட்டாமல், ஆற அமர ஆழ்ந்து பரிசீலித்து, நல்ல முடிவுகளை மேற்கொண்டு, இந்த திட்டத்திற்காக ஒதுக்கி இருக்கும் ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட தொகையை, முறைசார் கல்வி முறையை மேலும் மேலும் மேம்படுத்த, செழுமைப் படுத்த திட்டம் வகுக்க பள்ளிக் கல்வித்துறை வழிவகை காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment