7.5 சதவீத இடஒதுக்கீடு வாழ்வில் விடிவெள்ளியாக உள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

7.5 சதவீத இடஒதுக்கீடு வாழ்வில் விடிவெள்ளியாக உள்ளது

 முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அரசுப் பள்ளி மாணவி கடிதம்

காரைக்குடி, அக். 26- அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொழில்நுட்ப பிரிவில் சேரவும் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவால், பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவி நன்றி தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் வெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ரோசினி (18). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் 512.32 மதிப்பெண் எடுத்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டா லின்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் மட்டும் இருந்த 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை, பொறியியல், வேளாண்மை, கால்நடை, சட்டக்கல்வி போன்ற தொழில் நுட்ப  படிப்புக்கும் நீட்டித்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் ரோசினிக்கு இடம் கிடைத் துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ரோசினி முதலமைச் சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவி ரோசினி கூறுகையில், ‘‘எனது தந்தை 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின்னர் எனது தாய் ஜெயராணி நூறு நாள் வேலை உள்பட பல்வேறு வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்தார். பிளஸ் 2 வரை மிகவும் கஷ்டமான நிலையில் படித்தேன். மேல்படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அதிக செலவாகும் என்பதால் படிக்க முடியாத நிலை ஏற் படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்நுட்ப பிரிவுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்து எங்கள் வாழ்வில் ஒளியேற்றி உள்ளார். கல்வி ஆலோ சகர் கலைமணி ஆலோசனையில் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் புரடெக்சன் பொறியியல் பிரிவில் சேர்ந்துள்ளேன். கல்வி கட்டணம், விடுதி, உணவுக் கட்டணம் அனைத்தும் இலவசம். இந்த 7.5 சதவீதம் இடஒதுக்கீடு என் வாழ்வில் விடிவெள்ளியாக உள்ளது. என்னை போன்ற பல மாண வர்கள் பலனடைந்து உள்ளனர். நன்றி கூற வார்த்தைகள் இல்லை என முதல மைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்’’ என தெரிவித்தார்.

No comments:

Post a Comment