கோவிலுக்குச் செல்லும் சேகர்பாபுவும் - கலைஞர் சொன்ன பதிலும் - சுவையான தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

கோவிலுக்குச் செல்லும் சேகர்பாபுவும் - கலைஞர் சொன்ன பதிலும் - சுவையான தகவல்!

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை, செப்.27 கோவிலுக்குச் செல்லும் சேகர் பாபுவும் - கலைஞர் சொன்ன பதிலும் - சுவையான தகவலை நினைவுபடுத்தி உரையாற்றினார்  தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள்.

 கடந்த 17.9.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், வைக்கம் போராட்டம் ஆகிய நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, அந்நூல்களை வெளியிட்டு, தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, திரா விடர்த் திருவிழா என்ற தலைப்பில், ஜப்பானிய மொழி யில் மொழி பெயர்க்கப்பட்ட இரண்டு நூல்களை வெளியிடுகின்ற இந்த இனிய நிகழ்வுக்கு, வரவேற்புரையை நல்கியிருக்கின்ற பொறியாளர் இன்பக்கனி அவர்களே,

நோக்கவுரை ஆற்றியிருக்கின்ற மதிப்பிற்குரிய பெரியவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்த நிகழ்வில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற முனைவர் .சுலோசனா அவர்களே,

அன்பிற்கினிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி அவர்களே,

அருமை அய்யா சுப.வீரபாண்டியன் அவர்களே,

சமூகநீதியைக் காப்பேன் என்று சூளுரைத்து செயலாற்றிக் கொண்டிருக்கின்ற அருமை அய்யா

இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, எந்நாளும் தன் உடலில் ஜீவன் இருக்கும்வரை வாழ்க பெரியார் என்று கூறிக்கொண்டே - சமூகநீதியைக் காப்பேன் என்று சூளுரைத்து செயலாற்றிக் கொண்டிருக்கின்ற அருமை அய்யா வீரமணி அவர்களே, நன்றியுரை நல்கவிருக்கின்ற பார்த்தசாரதி அவர்களே,

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து நூலைப் பெற்றிருக்கின்ற ஜப்பான் தூதரகக் கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர் செல்வி மியூசிகி இனோஉவே சான் அவர்களே,

மற்றும் இந்த அரங்கில் பெருந்திரளாக - ஆட்சி அதிகாரம் என்பது எங்கள் கனவிலும் இல்லை - கருஞ்சட்டைதான் எங்கள் உயிருள்ளவரை என்று அரங்கிலே குழுமியிருக்கின்ற அனைத்துக் கருஞ்சட்டை வீரர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய பணிவான நல் வணக்கத்தைப் பெரியார் பிறந்த நாளில் கூறுவதில் மட்டமற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

என்னுடைய வழிகாட்டி

ஒருதர்ம சங்கடமான' நிலை - அய்யா அவர்களின் பேச்சைக் கேட்டுத்தான் எனக்குப் பழக்கம். அய்யா அவர்களுக்கு மேடை போட்டுத்தான் எனக்குப் பழக்கம். அதேபோல், என்னுடைய வழிகாட்டி என்றுகூட சொல் லலாம். எப்பொழுதெல்லாம் சந்தேகங்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அருமை அய்யா சுப.வீ. அவர் களைத் தொடர்புகொள்வேன். இது சரியா?  தவறா? என்று.

அவருக்குத்தர்மசங்கடமா?' எனக்குதர்மசங்கடமா?' என்று தெரியவில்லை. இன்றைக்கு நான் பேசி, அவர் கேட்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திருக் கின்ற இந்தப் பெரியார் திடலுக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அய்யா அவர்கள் உரையாற்றும்பொழுது, பல கருத்துகளை எடுத்தியம்பினார். நான் ஆன்மிகவாதி - ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தி ஆண்டவனை தரிசிக்க வேண்டும் என்று சொல்பவன் அல்ல.

அவர் போகட்டும் அய்யா, என்னை அழைக்கவேண்டாம் என்று சொல்

நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணை கின்றபொழுது, இன்றைக்கு நான் என் உயிரினும் மேலாகக் கருதுகின்ற, என்னுடைய இயக்கத்தினுடைய தலைவர் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் - மறைந்தும் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடத்திலே என்னை அழைத்துச் செல்லுகின்றபொழுது, ‘‘சேகர்பாபு அவர்கள் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறார் அப்பா'' என்றார்.

உடனே, அவர் என்னவென்று கேட்டார்.

சேகர்பாபு கோவிலுக்கு எல்லாம் செல்வாராம்; அதற்கு நீங்கள் தடை விதிக்கக்கூடாதாம்; அப்படி யென்றால், இயக்கத்தில் இணைந்து கொள்கிறேன் என்று கூறுகிறார் என்றார்.

உடனே, ஒருகணம்கூட சிந்திக்காமல், ‘‘அவர் போகட்டும் அய்யா, என்னை அழைக்கவேண்டாம் என்று சொல்'' என்றார்.

உடனடியாக, ஒரு கணம்கூட, ஒரு நொடிகூட, ஒரு சிட்டிகைகூட தாமதிக்காமல் அந்தப் பதிலை சொன்னார்.

கோவில்கள் கூடாதென்பதல்ல - அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது

அப்படியென்றால், திராவிடத்தினுடைய கொள்கை என்னவென்றால், இறைவன், கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுளை வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னதைப்போல், ‘‘கோவில்கள் கூடா தென்பதல்ல - அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது'' என்பதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அந்த வகையில், இன்றைக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைவர் தளபதி அவர்கள், பெரியார் நெஞ்சில் தைத்த முள் - அதனை நனவாக்க - பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்நாளும் உழைத்தார் - அதை சட்டமாக்கினார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதனை நடைமுறைப்படுத்திக் காட்டிய பெருமை இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களையே சாரும்.

அன்னைத் தமிழில் வழிபாடு

ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல், மிகவும் அமைதியாக யாரையெல்லாம் கோவில் கருவ றைக்குள் செல்லக்கூடாது என்று காலங்காலமாகத் தடுத் துக் கொண்டிருந்தார்களோ - அவர்களை எந்தவிதமான கத்தியின்றி, ரத்தமின்றி - யுத்தம் வந்தபோதிலும் வெற்றி காண்போம் என்பார்களே, அதுபோல வெற்றிகரமாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிக் காட்டிய பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு உண்டு.

அதோடு, நின்றாரா, என்றால் இல்லை. அன்னைத் தமிழில் வழிபாடு.

நான் நேற்றைக்கு முன்தினம் திருச்செந்தூர், திருத் தணி, சமயபுரம் சென்று வந்தேன். எங்கு பார்த்தாலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பதாகைகள் பெரிய அளவில் தொங்கவிடப்பட்டு இருந்தன. அதற்கும் ஒரு தடை - அந்தத் தடையையும் எந்தவிதமான ஆர்ப் பாட்டமும் இல்லாமல், எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் - அன்னைத் தமிழில் வழிபாடு என்று 47 முதுநிலை திருக்கோவில்களில் செயல்படுத்திய பெருமை - நம்முடைய பெரியாருடைய கனவை நன வாக்கிய பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச் சரை சாரும் என்று இந்நேரத்தில் எடுத்துக் கூறுகிறேன்.

குடிஅரசு' இதழில் எழுதியிருந்ததை எடுத்துக்காட்டினார்

நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் முகப்புரை யில், ‘குடிஅரசு' இதழில் அன்னதானத்தை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்த சொற்றொடரை எடுத்துக் கூறினார்.

இன்றைய தினம் பெரியார் அவர்களுடைய 143 ஆம் ஆண்டு பிறந்த நாள். மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் சார்பாக கடந்த 4 ஆம் தேதி மானிய கோரிக்கையில் அறிவித்த அறிவிப்புகளில் அதுவும் ஒன்று.

பெரியாருடைய பிறந்த நாளில்முழு நேர அன்னதான திட்டம் அறிவிப்பு!

பெரியாருடைய பிறந்த நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி - அந்த 17 ஆம் தேதியன்று, திருச்செந்தூர், திருத் தணி, சமயபுரம் ஆகிய மூன்று திருக்கோவில்களிலும் முழு நேர அன்னதான திட்டத்தை அறிவித்து, பெரியார் அவர்களுடைய இந்தப் பிறந்த நாளுக்கு ஒரு மகுடம் வைத்தார் மாண்புமிகு தலைவர் தளபதி அவர்கள் என்றால், அது மிகையாகாது.

தலைவர் தளபதி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற அருமை அய்யா ஆசிரியர் வீரமணி

அந்த வகையிலே, ஆன்மிகவாதிகளையும், ஆன் மிகத்திற்கு எதிராக இருப்பவர்களையும், ஒருசேர ஒன்று சேர்த்து, கைகோர்த்து அழைத்து, இந்த மண் திராவிட மண் - இது திரவிடியன் மூவ்மெண்ட் என்பதை நிரூ பித்துக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி அவர் களுக்கு உறுதுணையாக இருக்கின்ற அருமை அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு நோய் நொடி இல்லாமல் எல்லாப் புகழும் பெற்று வாழவேண்டும் என்று இறைவனையும், இயற்கையையும் வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு இந்து சமயம் மற்றும்  அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment