யாருக்காக பெரியார் போராடினார் என்பதைத் தெரிவிக்கவே ஜப்பான் மொழியில் நூலை மொழி பெயர்த்தோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

யாருக்காக பெரியார் போராடினார் என்பதைத் தெரிவிக்கவே ஜப்பான் மொழியில் நூலை மொழி பெயர்த்தோம்!

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் வரலாறு டாட்.காம் மின்னிதழ் ஆசிரியர் கமலக்கண்ணன்

சென்னை, செப்.27 - யாருக்காக பெரியார் போராடினார் என்பதைத் தெரிவிக்கவே ஜப்பான் மொழியில் நூலை மொழி பெயர்த்தோம் என்றார் வரலாறு டாட்.காம் மின்னிதழ் ஆசிரியர் கமலக்கண்ணன் அவர்கள்.

 கடந்த 17.9.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், வைக்கம் போராட்டம் என்ற நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க் கப்பட்டு, அந்நூல்கள் வெளியீட்டு விழாவில் வரலாறு டாட்.காம் மின்னிதழ் ஆசிரியர் கமலக்கண்ணன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சமூகநீதி நன்னாளில், சுயமரியாதைச் சுடரொளியைப் போற்றும் இத்திராவிடர்த் திருவிழாவிற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவயத்து ஆன்றோர் அனைவரையும் வரலாறு டாட்.காம் மின்னிதழ் சார்பில் வணங்கி மகிழ்கின்றேன்.

என் உழைப்பை தாங்கி அச்சில் வரும் முதல் நூல்கள்

2004 ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய வரலாறு டாட்.காம் மின்னிதழில், சோழர் கால கட்டடக்கலை மற்றும் வரலாறு தொடர்பாக பல புத்தகங்களை எழுதியிருந்தாலும், தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், வைக்கம் போராட்டம் ஆகிய இந்த இரண்டு நூல்களை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்தது - என் உழைப்பை தாங்கி அச்சில் வரும் முதல் நூல்கள்.

இரு நல்ல உள்ளங்களை நினைவுகூர வேண்டிய கடமை

இதற்கான வாய்ப்பை வழங்கிய, திராவிடர் கழகத் திற்கு நன்றி கூறும் இவ்வேளையில், என் சிந்தனைக்கும், எழுத்துக்கும் உரமிட்ட இரு நல்ல உள்ளங்களை நினைவுகூர வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

எதற்கும், யாருடைய தயவையும் எதிர்பார்த்து இருக் காதே  - உதவியை பெற தன்மானத்தை விட்டு யாரிட மும் கெஞ்சிக் கொண்டிருக்காதே என தற்சார்பையும், சுயமரியாதையையும் என்னுள் விதைத்த என் தந்தையார் என் முதல் நூலைக் காண இன்றைக்கு நம்மிடையே இல்லையே என்கிற வருத்தம் எழுகிறது.

இரண்டாவது நபர், திருச்சிராப்பள்ளி டாக்டர் இராசமாணிக்கம் வரலாற்று ஆய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள்.

வரலாற்று ஆய்வையும், ஆய்வு நெறிமுறைகளையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர். நான் எழுதத் தொடங்கிய காலத்தில், என்னை ஊக்கப்படுத்தி, ஒருகட்டத்தில் மேற்கொண்டு எப்படி எழுதுவது என்று தடுமாறிக் கொண்டிருந்த காலங்களில், நல்வழியில் ஆற்றுப்படுத்தி, என் எழுத்துகள் மேம்பட உதவிய அவருக்கு, இந் நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ளாத வருத்தத்துடன் நன்றி கூறி, என் உழைப்பை இருவர் மாண்பின் முன்பாக சமர்ப்பிக்கின்றேன்.

பெரியாருக்குச் செலுத்தும் நன்றிக் கடன்!

இவ்விரு நூல்களையும் மொழி பெயர்த்து, பெரி யாரின் பிறந்த நாளுக்குள் வெளியிடவேண்டும் என்று நண்பர் திரு.செந்தில்குமார் அவர்கள் சொன்னபொழுது, பெரியாருக்கு என்று எண்ணி, எதையும் யோசிக்காமல், இது நம்மால் முடியுமா?   முடியாதா? குறிப்பிட்ட நாளுக்குள் முடியுமா? முடியாதா? என்று எதைப்பற்றியும் யோசிக்காமல், இதை பெரியாருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாக எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

பேசிப் பிரிந்த பின்னர்தான் எண்ணினோம் என் றாலும், நூல் வெளிவரவேண்டிய நாளிலிருந்து ரிவெர்ஸ் கால்குலேசன் செய்து, மொழி பெயர்ப்பில் ஒவ்வொரு கட்டத்தையும் எப்பொழுது முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டோம்.

நேரிடையாக ஒரு மொழியில் எழுதப்படும் ஒரு நூலுக்கும், மொழி பெயர்க்கப்படும் நூலுக்கும் நடையில் நிச்சயமாக வேறுபாடு இருக்கும்.

இந்தியத் துணைக் கண்டத்தில்தமிழ்நாடு தனித்தன்மை பெற்றது

அதே சமயத்தில், இருவேறு கலாச்சாரங்களைக் கொண்ட இரண்டு நிலப்பரப்புகளை இணைக்கும் பொழுது, அதற்கே உரிய சிக்கல்களும் எழும். இவற்றையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று இரு வரும் நன்கு கலந்தாலோசித்து இந்த நூல்களை மொழி பெயர்த்திருக்கிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்தாலும், தமிழ்நாடு தனித்தன்மை பெற்றது. வள்ளலார் போன் றோர் இத்தமிழ் மண்ணில் சமநீதியைப் பேசியிருந்தாலும், பெரியாரின் சிந்தனையோட்டமும், சமூகநீதி கண் ணோட்டமும் முற்றிலும் வேறானது.

எந்தப் பின்புலத்தில் அவர் இச்சிந்தனைகளைப் பெற்று, யாருக்காக, எதையெல்லாம் பெறவேண்டி போராடினார் என்பதை, முற்றிலும் வேறான பின்புலம் கொண்ட மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும் என்ற பணி மிகப்பெரிய சவாலாக இருந்தது.

உதாரணமாக, ஆலய நுழைவு என்பது ஒரே சொல் லில் இன்று தமிழ்நாட்டில் எளிதாகப் புரிந்துகொள்ளப்படக் கூடியது.

மூல நூலில் பின்புல விளக்கங்கள் எளிதான நடையில் எழுதப்பட்டிருந்தன

ஆனால், இப்பிரச்சினை இல்லாத வரலாறு கொண்ட ஜப்பானியர்களுக்கு, இதன் பின்புலத்தை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

எங்களுக்குக் கிடைத்த மூல நூலில் இத்தகைய பின்புல விளக்கங்கள் எளிதான நடையில் எழுதப்பட்டி ருந்தது எங்களுக்குப் பேருதவியாக அமைந்திருந்தது.

இதற்கு எதிர்மறையானதும் உண்டு. சுயமரியாதைத் திருமணம் என்பது இயல்பான ஒன்றாக மாற, பெரியார் பட்ட பாடுகள் தமிழ்நாட்டில் வாழும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்வது கடினமானது.

கடந்த அரை நூற்றாண்டில், இத்தகைய திருமணங்கள் ஜப்பானில் நடைமுறையாகிவிட்டது. திருமணம் செய்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் பெண்கள் முடிவெடுக்கவேண்டிய விஷயங்கள் என பெரியார் சொன்னதைப்போல, இன்றைய ஜப்பானிய பெண்கள், பொருளாதார தற்சார்பு பெற்று, அதே சிந்தனையைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களால், இவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

மொழி பெயர்ப்பு நூல் என்ற உணர்வு வராமல்...

அடுத்ததாக, இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்ற உணர்வு வராமல், இயல்பாக ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் என்று படிப்போருக்கு வரவேண்டும் என்று எண்ணினோம். எனவே, எங்களால் முடிந்த அளவிற்கு மொழி பெயர்த்து, பிறகு அதனை செம்மைப்படுத்துவதற்காக, இரண்டு முறை அதனை உறுதி செய்து, மீண்டும் ஒருமுறை எங்கள் இருவருடைய ஜப்பானிய மொழி ஆசிரியர் திரு.இட்டகா நகானோ அவர்களின்  உதவியைப் பெற்று, இந்த நூல் முழுமையாக ஒரு ஜப்பானியரே எழுதியதுபோன்ற வடிவத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம்.

எனவே, பெரியாருக்கு நன்றிக் கடன் செலுத்த இப்படி ஒரு அருமையான வாய்ப்பை வழங்கிய திராவி டர் கழகத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள் கிறோம். இம்முயற்சிக்குப் பாலமாகவும், உறுதுணை யாகவும் நின்ற திரு.வி.சி.வில்வம் அவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

- இவ்வாறு வரலாற்று டாட்.காம் மின்னிதழ் ஆசிரியர் கமலக்கண்ணன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment