தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் கட்டாயம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் கட்டாயம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது!

பிற மாநிலங்களில் 80 விழுக்காடு இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே என்பதே இன்றைய நிலை!

தமிழ்நாட்டிலும் அந்த நிலை உறுதி செய்யப்படவேண்டும்!!

நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாகட்டும்!

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. பிற மாநிலங்களில் 80 விழுக்காடு இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே என்பதே இன்றைய நிலை - தமிழ்நாட்டிலும் அந்த நிலை உறுதி செய்யப்படவேண்டும்! நீதிமன்றங்களி லும் தமிழ் வழக்காடு மொழியாகட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டி.என்.பி.எஸ்.சி., (Tamilnadu Public Service Commission)  என்ற தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் 22.9.2021 அன்று அதன் தலைமையகத்தில் கூட்டிய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் சிறந்த முடிவுகளை எடுத்து அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதும் மட்டுமல்ல; நீண்ட நாள் தமிழ்நாட்டு இளைஞர், மக்களது விருப்பம், வேண்டுகோளுக்கு செயலுருவம் தரும் சிறப்பான முடிவாகும்.

டி.என்.பி.எஸ்.சி. முடிவு வரவேற்கத்தக்கது!

‘‘தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர் களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத் தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. திட்ட மிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்வு எழுதுபவர் களுக்கான புதிய அறிவுரைகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

மேலும் தேர்விலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக் கும்  வகையில், பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

அதாவது ஒவ்வொரு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு முன்பாகவும் தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்பட வுள்ளது. இதில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற வேண்டும். அப்படி தகுதி பெற்றால் மட்டுமே பொதுத் தேர்வுக்குரிய விடைத்தாள்களைத் திருத்த, பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு

பெண்களுக்கான நியமனங்களில் 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியானவு டன், அதையும் நடைமுறைப்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

அரசுத் துறைகளில் காலியாக குரூப் 1, 2, 4 உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர் வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றுக்கான அனுமதி அரசிடமிருந்து கிடைத்தவுடன் தேர்வு நடைபெறும் தேதிகளும் வெளியிடப்படும்'' என்று  அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில்தான் விசித்திரமான ஒரு நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது!

செம்மொழி என்று தகுதி பெற்ற எம்மொழி - தமிழை தமிழ்நாட்டு இளைஞர்களில் பலரும் கூட படிக்காம லேயே  கூட மேற்பட்டப் படிப்பு வரை செல்ல முடியும் என்ற கேலிக்குரிய நிலைதான் அது!

பள்ளிக் கல்வி நிலையில் இருந்தாலும், வேறு பயிற்சி மொழிமூலம் தமிழ்ப் படிக்காமலேயே மேல் வகுப்புக்குச் செல்லலாம்; பட்டமும் பெறலாம் என்பது விந்தையான நிலையல்லவா?

தமிழ்நாடு தேர்வாணையத்தில் அரசு பணிகளுக்குப் போட்டியிட்டும், தமிழ் படிக்காமலேயே - வெற்றி பெற்று வேலை வாய்ப்பைப் பறிக்க முடியும். இது ஒரு நகை முரண் அல்லவா?

தமிழ்நாட்டு இளைஞர்களின் நிலை

அவர்கள் பணியாற்றப் போவது யாரிடத்தில்? எந்த மக்களிடத்தில்?

தமிழ்நாட்டுப் பொதுமக்களிடையே - அதுவும் சாமானிய மக்களுக்காக! அப்படியிருந்தும் தமிழ் தெரி யாதவர்கள் வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் நிலை. இதற்கு இனி ஒரு முற்றுப்புள்ளி வேண்டாமா? பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பும், தமிழ் அறியா தக்கைகளின் ஆதிக்கமும் அரசுப் பணிமனைகளில் இனிமேல் - இதன்மூலம் வெகுவாகக் குறைந்து, தமி ழுக்கும், பண்பாலும், பழக்கவழக்கத்திலும் முற்றிலும் மாறுபட்டவர்களின் ஆதிக்கம் பரவலாகப் பல்கிப் பெருகிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இம்முடிவு பெரிதும் உதவக் கூடும்!

தமிழ்நாட்டில் தற்போதுள்ள பல வீட்டு இளைஞர்கள் தமிழ் நாளேடுகளைக்கூட படிப்பது கிடையாது. காரணம், தமிழ்ப் படிக்க முடியாத நிலை; வெளிநாட் டுக்காரர் தமிழ்ப் படித்துச் சொல்வதே இவர்களைவிட மேல் என்ற அளவில் தடுமாற்றம் - மகாவெட்கக்கேடான நிலை. இது வளர்ந்தால், ‘‘மெல்ல அல்ல - வேகமாகவே தமிழ் இனிச்சாகும்'' என்ற நிலையே ஏற்படக்கூடும்.

மற்ற மாநிலங்களில் பா... ஆளும் மாநிலங்கள் உள்பட - உள்ளூர் மக்களுக்கே அதுவும் அவர்களது தாய்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும் (சுமார் 80 விழுக்காடு) வேலை வாய்ப்புகள் உண்டு என்ற சட்டங்களை இயற்றி, செயல்பட வேகமான முனைப்புக் காட்டும் நிலையில், தமிழ்நாடு மட்டும் திறந்த வீடா? கண்டவர் நுழைந்து ஆதிக்கம் செலுத்த?

எல்லாப் பணிகளுக்கும் தமிழ் அவசியமே!

இதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்கி, இதனை எல்லாப் பணிகளுக்கும் தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் வரம்பில் வராத, வேலைவாய்ப்புகளில்கூட இதுபோன்ற விதி முறையை வகுத்துச் செயல்படுத்த முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை கிட்டாது அவதியுறும் வேதனையை  தீர்க்கவும் இது பெரிதும் உதவும்.

தமிழில் இசை, தமிழில் அர்ச்சனை, தமிழில் நீதிமன்றத்தில் வாதாடுதல் என்பன போன்ற எல்லா உரிமைகளையும் எதிர்நீச்சல் போட்டு, போராடியே பெறவேண்டியுள்ளது - இதுதான் தமிழ்நாடு!

, தாழ்ந்த தமிழகமே! உன் நிலை இனியாவது மாறட்டும்!'

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

27.9.2021

No comments:

Post a Comment