முதன் முதலாக அய்யாதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 25, 2021

முதன் முதலாக அய்யாதான்!

ஈடு இணையற்ற சுய சிந்தனையாளரான அய்யா பெரியார் அவர்களின் அத்தனை சிந்தனைகளும், அத்தனை செயல்களும் முன்மாதிரியற்ற முதல் சிந்தனைகளே! முதல் செயல்களே! அவற்றில் சில இவை:

1. தீண்டாமையை எதிர்த்து வைக்கம் என்னும் இடத்தில் போராடியதன் மூலம் தீண்டாமையை எதிர்த்து அறப்போர் நடத்திய தலைவர் அய்யாதான். ஆண்டு : 1924.

2. உலகிலேயே முதன்முதலாக முழுக்க முழுக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கென்றே ஏடு நடத்திய இயக்கம் அய்யாவின் இயக்கம்தான். நாள் : ‘குடிஅரசு’ 02.05.1925.

3. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து முதன்முதலாக குரல் கொடுத்த தலைவர் அய்யாதான். ‘குடிஅரசுஇதழில் தலையங்கம் எழுதினார். ஆண்டு : 1926.

4. இந்தியாவில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளிப்படையாக வெளியிட்டவர் அய்யா (1931).

5. லேவாதேவி முறையை ஒழித்து அரசாங்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனளிக்கவும், கடன் காரணமாக விவசாயிகளைக் கைது செய்வதை நிறுத்தவும் ஆன திட்டத்தை முதன் முதலாக அறிவித்த தலைவர் அய்யாதான். ஆண்டு : 1934 (ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம்).

6. பிராமணாள் சாப்பிடும் இடம் இதராள் சாப்பிடும் இடம் என்று ரயில்வே நிலையங்களில் இருந்த பிரிவினைக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் போராடி முற்றுப்புள்ளி வைத்த முதல் போராளி பெரியாரே! ஆண்டு : 1928

7. வன்முறையில்லாமல் நெடுந்தொலைவு கொள்கை விளக்கப் பிரச்சாரப் படையொன்றை நடத்திச் செல்லச் செய்த முதல் தலைவர் அய்யாதான். தளபதி அழகிரிசாமி தலைமையில் திருச்சியிலிருந்து படை நடந்துவந்தது. ஆண்டு : 1938.

8. மாநாடு, தோழர்களே, திரு ஆகிய சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்த முதல் தலைவர் அய்யாதான்.

9. 1961லிருந்து விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வெற்றிகரமாக்கப்பட்டுள்ள சோதனைக்குழாய் குழந்தை கருத்தை இப்போது நடந்த முறைப்படியே 1938லேயே மிகச் சரியாக அறிவித்த முதல் தலைவர் அய்யாதான். 1943ஆம் ஆண்டு. நூல் : ‘இனிவரும் உலகம்’.

10. முதன்முதலாகத் திருக்குறள் மாநாடு நடத்தித் திருக்குறளை பொதுமக்கள் நூலாகப் பிரகடனப்படுத்திய தலைவர் அய்யாதான். ஆண்டு : 1948

11. இந்தியத் துணைக் கண்டத்தில் தனிச் சுதந்திர நாடு கோரி முதலில் குரல் கொடுத்தவர் பெரியாரே ஆவார். ஆண்டு : 1938. இதற்குப் பிறகு 1940இல்தான் முஸ்லீம் லீக் இஸ்லாமியருக்குத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தது.

12. உலக வரலாற்றில், ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை எரிப்பது என்கிற போராட்டத்தை மக்கள் இயக்கமாக முதன்முதல் நிகழ்த்தியவர் பெரியார் ஒருவரேயாவார். ஆண்டு : 1957 நவம்பர் 20

13. இன்று எங்கும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற குடும்பக்கட்டுப்பாட்டை முதன்முதலாக வலியுறுத்திய இந்தியத் தலைவர் அய்யா தான். ஆண்டு : 1928

14. ஜாதி குறிகள், பெயர்கள் ஆகியவற்றைப் பொது இடங்களிலிருந்து நீக்கப் போராடிய முதல் தலைவர் அய்யாதான்.

15. சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இந்தியாவின் புதிய அரசியல் சட்டத்திற்கு அது எதிரானது என்று கூறி அதைப் பார்ப்பனர்கள் செல்லுபடியற்றதாக்கியதைத் தொடர்ந்து, அதற்காகப் போராடி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லுபடியாகும் வகையில் முதன்முதல் அரசியல் சட்டம் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த முதல்வரும் தந்தை பெரியாரே. ஆண்டு : 1951

16. தேசியச் சின்னங்களை அவமதிப்பதாக அறிவித்து அதன் காரணமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் புதிய பிரிவுகளைச் சேர்க்கச் செய்த முதல் தலைவர் அய்யாதான்.

17. புராணங்கள், கடவுள் படங்கள் ஆகியவற்றின் ஆபாசங்களைப் பொது மக்களிடம் விளக்கி, அவற்றைப் பொது இடத்தில் கொளுத்தி மக்களுக்குத் தெளிவுண்டாக்கிய முதல் தென்னகத் தலைவர் அய்யாதான்.

தொகுப்பு : அகரம் பெரியார்தாசன்

No comments:

Post a Comment