நூல் அரங்கம் - இனியன் காட்டும் குழந்தைகள் உலகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 25, 2021

நூல் அரங்கம் - இனியன் காட்டும் குழந்தைகள் உலகம்

நூல் : விடுபட்டவர்கள் (இவர்களும் குழந்தைகள்தான்).

ஆசிரியர்: இனியன்

வெளியீடு: நாடற்றோர் பதிப்பகம்,

16, வேங்கடசாமி சாலை கிழக்கு,

இரத்தினசபாபதிபுரம்,

கோவை - 02.

குழந்தைகள் செயல்பாட்டாளர் தோழர் இனியன் அவர்களின் அனுபவம் மற்றும் அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் தரும்  தீர்வு ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல்.

முதல் பயணம் என்னும் தலைப்பிலான முதல் கட்டுரையில் நிரந்தர வேலைவாய்ப்பும், குடியிருப்பும் கூட இல்லாத இருளர் என்னும் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமத்தைப் பதிவிட்டுள்ளார். இது அம்மக்கள் அதிகம் வாழும் அரியலூர், பெரம்பலூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேலும் சிரமமாக உள்ளது. அண்மைக் காலமாகத்தான் அக்குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

பொதுவாக மாநில மாவட்ட எல்லை களை அரசியல் ரீதியாகவும், தொழில், சந்தை பொருளாதாரம், போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் நாம் பார்க்கிறோம். ஆனால், தோழர் இனியன் குழந்தைகளுக்கான பார்வையில் இதனை அணுகி புதிய பார்வையை அளித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளை அணுக வேண்டிய முறையில் இரண்டு மாநிலங்களும் அணுகாமல், தனியார் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளுக்கான தங்கள் செயல்பாடுகளைத் துவக்கியிருப்பதையும், அவை பெரும்பாலும் மதம் சார்ந்த அல்லது மதவாத அமைப்புகளால் நடத்தப்படுவதையும், அதனால் அக்குழந்தைகளிடம் அத்தகைய மத நிறுவனங்களால் போதிக்கப்படும் வறட்டுத்தனமான மத நம்பிக்கைகளும், அந்த வறட்டு நம்பிக்கையின் பரிணாம வளர்ச்சியான மதவெறி குழந்தைகளிடம் வேரூன்றி அதனால் ஏற்படும், எப்போதும் நிரந்தரமாக இருந்து வரும் அமைதியற்ற சச்சரவுகளையும் விளக்கியுள்ளார். இது முற்போக்குச் சக்திகள் கவனிக்க வேண்டிய முக்கிய இடம் என்பதை மறுக்க முடியாது.

மேலும், எல்லைகளில் வாழும் குழந்தைகள் எதிர்நோக்கும் மற்றொரு துன்பம் மொழிச் சிக்கல்.

குறிப்பாக, ஆந்திராவையொட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பகுதிகளில் ஏற்படும் சிக்கலை விளக்கியுள்ளார். முழுவதும் தெலுங்கு பேசும் அப்பகுதி வாழ் குழந்தைகள் மக்கள் விகிதாச்சார அடிப்படையில் சிறுபான்மையினராக இருப்பதால்  தமிழில் படிக்கும் வகையிலான பள்ளிகளே உள்ளன என்பதால்,  அவர்கள் கற்றலில் ஏற்படும் சிக்கல்களை விளக்குகிறார்.

அடுத்து, மற்றொரு எல்லைப் பிரச்சினையான ஜாதியின் கொடுமை குறித்து விளக்குகிறார். பள்ளியில் தொடங்கி ஊர், விளையாட்டு மய்தானம் வரை ஆதிக்கம் செலுத்தும் ஜாதியால் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கலை விளக்கும் போது,  ஒரே ஜாதிக்குள் ஏற்படும் தெருப் பிரிவினை, வகையறாப் பிரிவினை என்று குழந்தைகளின் உள்ளத்தில் ஏற்படும் உளவியல் ரீதியிலான, அவர்களால் அவர்களுக்குள் அமைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எல்லைப்  பிரச்சினைகளை விளக்குகிறார்.

குழந்தைகள் ஏங்கும் தங்களுக்கான உறவுமுறைகளை ஏற்படுத்திக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை விளக்குவதுடன், பதின்பருவத் துவக்க நிலைக் குழந்தைகளை மய்யப்படுத்திச் செயல்படும் அமைப்பு ஒன்றை அரசு கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

குழந்தைகள் அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசினால், குழந்தைகளுக்கு எதற்கு அரசியல் என்று நீட்டி முழக்கும் சந்தர்ப்பவாத குழந்தை உரிமை பேசுபவர்களுக்கு சரியான பதிலடியை வழங்கியுள்ளார். இங்கே அரசியலை நோக்கி மட்டுமே கேட்கப்படும் இந்தக் கேள்விகளைப் போல, மேடைகள், பொது இடங்கள் மற்றும் ஊடக நிகழ்வுகளில் சமஸ்கிருத சுலோகங்கள் சொல்வதையோ, பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதக் கதைகள், பைபிள் கதைகள், திருக்குரான் கதைகள் ஆகியவற்றைப் பேசுவதையோ, தேவாரம், திருவாசகம், சினிமாப் பாடல்கள் பாடுவதையோ, ஆடுவதையோ மத அடையாளங்களைச் சுமத்தல் பற்றியோ எந்தக் கேள்விகளையும் எழுப்புவதில்லை என்பதையும் விளக்குகிறார். இது போன்ற செயல்கள் எல்லாம் குழந்தைகளின் இயல்பான பண்புகளில் ஒன்று என்று கூறப்படுவதை தம் வாதத்தின் மூலம் மறுத்து, குழந்தைகளிடம் திணிக்கப்படுபவைதான் குழந்தைகளின் இயல்பான பண்புகள் போல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று விளக்குகிறார்.

மேலும் குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து அரசியல் பழகலாம் என்னும் கேள்விக்கு குழந்தைகளுக்கு எப்போது கோயிலும் கடவுளும் ஜாதியும் மதமும் ரசனை என்ற பெயரில் இசையும் பாடல்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றனவோ, அப்போது அரசியலும் கற்பிக்கலாம் என்றும் அதில் தவறு இல்லை என்றும் தெரிவிக்கிறார்.

மனநலக் குறைபாடு, மன நலிவு, சிறுமூளை முடக்கம், தசைநார்ச் சிதைவு, தண்டுவட கட்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் - அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் - பெரும் துன்பத்தையும் சொல்ல முடியா கவலையையும் அடைவதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் சிறப்புக் குழந்தைகள் என்றும், சிறப்புக் குழந்தைகள் என்றால் கூடுதல் கவனம் தேவை என்பதாக ஒரு புதிய பொருளைத் தந்து, இவர்களும் குழந்தைகள் தாம் என்னும் மனப்பான்மையை அதிக அளவில் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையை உணர்த்துகிறார்.

பாலியல் கல்வி மற்றும் சமத்துவக் கல்வியை பல்வேறு அனுபவ நிகழ்வுகளின் வழியே வலியுறுத்துகிறார். கல்வி நிலையங்களில் கை கழுவுதல், குளித்தல் உள்ளிட்ட உடல் தூய்மை பற்றிய விழிப்புணர்வுடன் நிறுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, மானிட அடையாள உறுப்புகளின் தூய்மை குறித்தும், தன்மை குறித்தும் அனைத்து பாலினருக்கும் அனைவரது அடிப்படை உடல் அமைப்பு பற்றியும் தெரிந்துகொள்ள உதவும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கவேண்டுமென்னும் தீர்வைத் தருகிறார்.

குழந்தைகளுக்கு சமூகவியலைக் கற்பிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் கலைத்துறை - குறிப்பாக திரைத்துறை - சரியாகச் செயல்படாததைச் சுட்டிக் காட்டுவதுடன், கார்ட்டூன் நிகழ்வுகள் பெரும்பாலும் மதம்,  உச்சக்கட்ட மாயை - மற்றும் அறிவுக்கு ஒவ்வாத கற்பனைகள் ஆகியவற்றை  உள்ளடக்கியதாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, பாலியல் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகளுடன் அவை தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும்,  குழந்தைகள் புழங்கும் அனைத்து இடங்களிலும் பாலியல் சமத்துவம் மற்றும் பாலியல் உரிமை குறித்து தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

குழந்தைகள்  பற்றிக் குறித்து பேசும் பொழுதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சமான அவர்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி ஏராளமான முக்கிய செய்திகளை தருகிறார்.

அனைத்து குழந்தைகளுக்கும் சரியான அளவிலான சரிவிகித ஊட்டச்சத்து உணவு அடையும் நிலையே உணவு சமத்துவம் என்று விளக்குவதுடன், அப்படியான உணவு சமத்துவம் இந்தியக் குடும்பங்களில் கூட கையாளப்படுவது இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் ஆதிக்கம் நிறைந்த மனிதருக்கு உணவு ஒன்று பிடிக்கவில்லை என்றால், ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்தாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் அது போய்ச் சேர்வதில்லை என்பதையும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம் என்பதையும் விளக்குகிறார்.  இஸ்கான் அமைப்பினர் பள்ளிகளில் நுழைந்து தங்களது உணவு ஆதிக்கத்தை சமூகத்தின் மீது செலுத்தத் துவங்கி இருப்பதையும், அதற்கு மக்களின் உணவு முறையைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அனுமதி அளித்து அவர்களின் ஆதிக்கத்தை ஆதரிப்பதும் சுட்டிக்காட்டுகிறார்.

இறுதியாக, உணவு ஆதிக்கத்தை கலாச்சாரம், கருணைக் காலம் என்றெல்லாம் சொல்லி குழந்தைகளின் மீது திணித்துக் கொண்டு இருப்பவர்கள் தங்களின் உணவு ஆதிக்க மனப்பான்மையால் குழந்தை களுக்குக் கிடைக்க வேண்டிய சரிவிகித ஊட்டச்சத்து கிடைக்க விடாமல் செய்தே குழந்தைகளின் உரிமைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சம்மட்டி அடி போல் அடித்துக் கூறுகிறார். அதற்குப் பதிலாக சரிவிகித உணவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், அதனுடன் உணவு சமத்துவத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தீர்வாகக் கூறுகிறார்.

குழந்தைகளின் வாசிப்பு குறித்த கட்டுரையில் அடர்த்தியான பல்வேறு செய்திகளைக் கூறுகிறார். இதுகுறித்து அனைத்து மக்களுக்கும் அடிப்படையான வாசிப்புக் கலை தற்போது 'எலைட்' எனப்படும் மேல் மட்ட சமூகத்தோடு தொடர்புடையதென்ற ஒரு கட்டமைப்பு உருவாகியுள்ளது என்கிறார். சிறார்களுக்கான புத்தகங்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றும், அதன் வாசகர் பட்டியல் குறிப்பிட்ட பிரிவு மக்களைத் தாண்டி மற்ற குழந்தைகளிடம் பரவலாகச் சேரவில்லை என்றும் கூறும் நூலாசிரியர் அதற்கான தேவை தற்போது உருவாகியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி அறிவொளி இயக்கம் மற்றும் திராவிட இயக்க படிப்பவர்களில் அடுத்த கட்டமாக இதனைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்றும், அதற்கான செயல் திட்டங்கள் அரசால் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தோறும்,  ஒன்றியங்கள் தோறும் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட வேண்டும் என்றும், அவை சமத்துவக் கொண்டாட்ட வடிவம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

இனிவரும் காலங்களில் பேரிடர்களை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளை ஆயத்தப் படுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் நூலாசிரியர் அதற்கான ஆயத்த நிலை குறித்தும், நிகழ்வுக்குப் பிறகான செயல்பாடுகள் குறித்தும், புரிதல்களை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பித்து குழந்தைகள் எதையும் எதிர்க்கொள்ள தைரியத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

குழந்தைகள் தொடர்புடைய அரசுத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை சமூக நலத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஒவ்வொரு அலுவலரும் ஊழி யரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

சமூகத்தில் களப்பணியாளர்களாகத் திகழும் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். படிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழி நடத்தும் நெறி முறைகளை உருவாக்கி அதன்படி நடக்க வேண்டும்.

- வை.கலையரசன்

No comments:

Post a Comment