பகுதிநேர வேலை என புதுவகை இணையவழி மோசடி காவல்துறை எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 12, 2021

பகுதிநேர வேலை என புதுவகை இணையவழி மோசடி காவல்துறை எச்சரிக்கை

சென்னை,செப்.12- சென்னை மத்திய குற்றப்பிரிவுசைபர் கிரைம்காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு பொதுமக்களின் அலைபேசி எண்களுக்கு பிரபல நிறுவனங்களில்பார்ட் டைம்’ (பகுதி நேர) வேலை செய்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மோசடி நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது.

அதில், ‘வாட்ஸ்-அப்குரூப்பில் இணைவதற்கான ஒரு லிங்க்கும் அனுப்பப்படுகிறது. அதனைகிளிக்செய்தவுடன் ஒருஆப்’ (செயலி) பதிவேற்றம் ஆகிறது. இந்த ஆப்பில் இருந்து ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறி, பண மோசடி நடக்கிறது. எனவே இந்தஆப்'களை (honey, making) பதிவேற்றம் செய்திருந்தாலோ அல்லது இதுபோன்ற வேறு பெயரில் உள்ள ஆப்களில் பணம் முதலீடு செய்திருந்தாலோ அதனை உடனடியாக கைவிட வேண்டும்.

மேற்கொண்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதுபோன்று பகுதி நேர வேலை என்று எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அணுகும் மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் வரும் எந்தவித லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் செப்டம்பர் மாதத்தில்

10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

சென்னை,செப்.12- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், மற்றும் கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் 12 ஆயிரத்து 722 மில்லியன் கனஅடி (12.722 டி.எம்.சி.) தண்ணீரை சேமித்து வைத்துகொள்ளலாம். கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றது. இதனால் 2 ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

இதேபோல் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் மட்டம் 46.90 அடியாக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் உயரம் 47.50 அடியாகும். இங்கிருந்து சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 61 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் 10 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி அதாவது 10.757 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் இல்லாத அளவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குடிநீர் ஏரிகளில் 5.725 மில்லியன் கன அடி அதாவது 5.725 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருந்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 8 ஆயிரத்து 002 மில்லியன் கன அடி அதாவது 8.002 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் உடல் நிலையை கண்காணிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

 உடுமலை, செப்.12   கரோனா பரவல் ஏற்படாமல் இருக்க, தினமும், தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து  தமிழ்நாட்டில் 9 முதல், பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் நிலையை தீவிரமாக கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உடுமலை பகுதி பள்ளிகளில் எவருக்கேனும் உடல்சோர்வு, காய்ச்சல் என தொற்றுக்கான அறிகுறி இருந்தால்  தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்படுத்தி அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.

இதுகுறித்து உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி கூறுகையில்: எவருக்கேனும் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் பள்ளியில் உள்ள அனைவரும் சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். நோய்ப்பரவலை தடுக்க, தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

 

No comments:

Post a Comment