சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் 140 நாள் ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 23, 2021

சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் 140 நாள் ஆட்சி!

சமூகநீதி - மகளிர் நலன் - தொழில்துறை - திராவிடப் பண்பாட்டு மறுமலர்ச்சி என்று மளமளவெனப் பெருகிவரும் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள்!

 திராவிட மாடல்' - ‘‘பொற்கால ஆட்சி'' உருவாகிவிட்டது!

தி.மு..வின் 140 நாள் ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களும், செயல்பாடுகளும்  பாராட்டத்தக்கவை என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நமது முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - பதவியேற்று 140 நாள்கள் ஆகின்ற நிலையில், நாளும் தவறாமல் அவர்தம்  ஆட்சி அடுக்கி வருகின்ற அபார சாதனைகள் நாள்களின் எண்ணிக் கையையும் மிஞ்சுவதாகவும், ஒரு மக்கள் நல அரசு எப்படியெல்லாம், ஏழை எளிய மக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக் களுக்குமான ஆட்சியாகச் சுழன்று செயல் படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்களாகவும் உள்ளன!

24 மணிநேரமும் மக்கள் நலன் சிந்தனைகள் - செயல்பாடுகள்!

24 மணிநேரமும் மக்கள் நலன், முன்னேற்றம், புதுவாழ்வு அவர்களுக்குக் கிட்ட என்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்தித்து செயல்படுத்தி சிறந்த ஆட்சியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருகிறது - தி.மு.. ஆட்சி.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்ததேன்?' என்ற சிறு நூலில், தனது இயக்கம் குறுகிய நோக்கம் கொண்டதல்ல, சுயமரியாதை இயக்கம் என்பதுஅனை வருக்கும் அனைத்தும்' தர இலக்குடன் உழைக்கும் இயக்கம் என்பதை இரண்டே சொற்களில் கூறினார் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

1967 இல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் அண்ணா சொன்னார், ‘‘சாமானிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களை மகிழ்விப்பது தான் தனது ஆட்சியின் இலக்கு'' என்றார்.

அண்ணாவுக்கு அடுத்து முதலமைச்சர் பொறுப்பேற்ற நம் முத்தமிழறிஞர் கலைஞர், அதனை விரிவாக்கி, வினையாக்குவதி லேயே கண்ணுங்கருத்துமாக செயலாற்றி னார். திராவிட ஆட்சி பொற்காலத்திற்குரிய அத்துணை அடிக்கட்டுமானத்தையும் அழகுற அமைத்தார்.

அவரது பார்வை படாத துறை இல்லை!

பயனடையாத மக்களும் இல்லை!!

அவர் எழுப்பாத உரிமை முழக்கம் எதுவுமில்லை - காரணம், அவர் ஒருமானமிகு சுயமரியாதைக்காரர்' என்பதால்!

குடிசெய்வார்க்கில்லை பருவம்!

அவரால் செதுக்கப்பட்டு, அவரிடம் கற்ற உழைப்பை மேலும் கடுமையாக்கி, நாளும்குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்ற குறள் நெறிக்கேற்ப உழைத்து, குவ லயத்தின்கொள்ளைப் பாராட்டைப்' பெறு கிற நமது முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புகள், செயலாக்கத் திட்டங்கள் சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்ததுபோல் உள்ளன!

இவரது ஆட்சியில் பயன்பெறாதார் எவரும் இல்லை என்ற பெருமிதத்துடன் மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு மகிழ்ச்சிக் கூத்தாட வைக்கிறது.

தமிழ்நாடு விவசாய உற்பத்தியைப் பெருக்கிட இன்று ஒரு லட்சம் விவசாயி களுக்குப் புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும் விழா!

இதற்குமுன் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்; தமிழ்நாட்டின் வேளாண் பரப்பை மேலும் மூன்றில் ஒரு மடங்கு கூடுதலாக்கி, அதன்மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், உழ வர்களுக்கு எளிதில் கூட்டுறவு கடன் வசதி, அவர்களின் முந்தைய கடன் தள்ளுபடி  - கலைஞர் ஆட்சி சாதனையின் தொடர்ச் சியாக!

மகளிருக்கு மளமளவென திட்டங்கள்!

மகளிருக்கோ பேருந்தில் இலவசப் பயணம் முதல் அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவிகிதம் என்று இருந்ததை, 40 சத விகிதமாக கூடுதல் இட ஒதுக்கீடு, மளிகைப் பொருள்கள்  வழங்கல், பண உதவி (ரூ.2000+2000=ரூ.4000) போன்ற பல உதவிகள் என்ற சமூகநீதி கொழிக்கும் பாலியல் நீதி பளிச்சிடுகிறது! மகளிர் சுய உதவிக் குழுக்கள் மறுமலர்ச்சி யுகத்தைக் காணுகின்றன!

மாணவர்களும், பெற்றோரும் மகிழும் வண்ணம் அரசுப் பள்ளி  இட ஒதுக்கீடு பெற்ற பொறியியல் பட்டப் படிப்பாளிகளின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கிறது என்ற இனிய அறிவிப்பு - விளை யாட்டுத் துறையில், திறமையால் சோபித்தும், வறுமையால் சோகத்துடன் வருந்திய குடும்பங்களிலிருந்து வந்த எளிய முப்பாலருக்கும் முந்திக்கொண்டு தமிழ் நாடு அரசும், முதலமைச்சரும் செய்திடும் உதவி - அவர்கள் வாழ்வில் புத்தொளி பிறக்கச் செய்துள்ளது.

திராவிட நாகரிக மறுமலர்ச்சித் திட்டங்கள்

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து, பாரம்பரிய திராவிடப் பண்பாடு, நாகரிகம், மொழி வளம் இவற்றைப் பாதுகாக்க, கிடைக்கும் நாகரிகச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒரு புது வேகம்; திராவிட நாகரிகம் - காலத்தாலும், கருத்தாலும் எவ்வளவு மூத்தது என்று உலகு அறியச் செய்ய தோண்டத் தோண்ட கிடைக்கும் தரவுகளும், கல்வெட்டுகளும், சின்னங்களும், கீழடி, சிவகளை, பொருநை யாற்று நாகரிகத்தின் புத்தெழுச்சி வடிவம் எல்லாம் நடுநிலையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றன!

‘‘திராவிட மாடல்'' - பொற்கால ஆட்சி!

பெரியாரைத் துணை கோடல், அறிஞர் களை அரவணைத்து, ஆலோசனை பெற்று, ஆட்சிக்கு அரண் செய்வது, வறியாரை வளமிக்கோராக்கவே நாளும் புதுப்புதுத் திட்டங்கள் என்ற அடைமழை, இலக்கிய கர்த்தாக்களுக்கு இதற்குமுன் எப்போதும் கிடைக்காத தனி மரியாதை - அப்பப்பா, எத்தனை, எத்தனை! எழுதவே இடமில்லாத அளவுக்குச் சாதனை சரித்திரத்தில் தமிழ்நாட்டுதிராவிட மாடல்' ஆட்சி - ‘பொற்காலம் உதயமாகிவிட்டது' என்று அனைவரும் மகிழும் வண்ணம் நடைபெற்று வருகிறது - நமது பாராட்டுகள், வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

23.9.2021

No comments:

Post a Comment