நாடாளுமன்ற முடக்கத்திற்கு யார் காரணம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

நாடாளுமன்ற முடக்கத்திற்கு யார் காரணம்?

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் ஜூலை 19இல் தொடங்கி ஆகஸ்டு 13 முடிய நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டது.

இத்தொடரில் 23 மசோதாக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது ஆளும் தரப்பு.

அவசர சட்டங்களாக அறிவிக்கப்பட்ட பல சட்டங்களும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் காத்துக் கொண்டிருந்தன.

(1) ஆயுத தளவாடங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் மசோதா,

(2) மின்சார விநியோகத்தையும் தனியார் வசம் அளிக்கும் சட்ட முன்வடிவு

(3) நிலக்கரி தோண்டி எடுக்க வாய்ப்புள்ள நிலங்களையும் தனியாருக்கு அளிக்கும் சட்டமுன்வடிவு - போன்றவை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருந்தன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையான Socialist Republic என்ற சொற்களை சொத்தையாக்கும் ஒரு வேலையை பா... தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவசர அவசரமாக போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிடத் துடியாய்த் துடிக்கிறது.

ஏற்கெனவே குடியரசு நாள் விளம்பரத்தில் 'செக்குலர்' (மதச்சார்பின்மை) என்ற சொல் நீக்கப்பட்டு இருந்ததும் நினைவில் இருக்கலாம்.

அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்கலாம் என்று நேரடியாகச் சொன்னால் பிரச்சினை வெடிக்கும் என்பதால் இப்படி தந்திரக் கண்ணி வெடிகளை வைத்து அரசமைப்புச் சட்டத்தின் ஆணி வேரை வீழ்த்தும் வேலை வேக வேகமாக நடந்து கொண்டுள்ளது.

மற்றொன்று - கோடானு கோடி  மீனவர்களின் வாழ்வைக் கடலில் மூழ்கடித்துக் கொல்லும் மசோதாவாகும்.

மீன்வள மசோதா என்ற ஒன்றினை எப்படியும் நிறைவேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பா... அரசு கடும் எதிர்ப்புக் கொந்தளிப்பினால் பதுங்கிப் பதுங்கிக் காலத்தை எதிர் நோக்கி காத்திருந்தது.

இந்தத் தொடரில் எப்படியும் நிறைவேற்றி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர்.

இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டால் அவ்வளவுதான், கடலை தலைமுறை தலைமுறையாக நம்பி வாழும் மீனவ சமுதாயம் - இந்தத் தொழிலுக்கே முழுக்குப் போட்டு விட்டு பிழைக்க வேறு வழியைத் தேடித்தான் செல்ல வேண்டும்.

இடக்கு முடக்கான நிபந்தனைகள் - அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் - கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் என்று இதற்குள் ஏகப்பட்ட வெடி மருந்துகள் இருக்கின்றன.

கடலில் சிறப்பு மண்டலங்களை ஒன்றிய அரசு ஏற்படுத்துமாம். அந்த மண்டலங்களில் மீன்பிடிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

விதிகளை மீறினால் ரூபாய் 5 லட்சம் வரை அபராதமாம். 12 கடல் மைல் வரை தான் மீன் பிடிக்கலாமாம்.

'வேறு தொழிலைப் பார்!' என்று மீனவர்களிடம் சொல்லாத குறைதான். மற்றபடி கார்ப்பரேட்டுகளின் கைகளில் இந்தத் துறை சென்று விடும்.

'பெகாசஸ்' உளவுச் செயலி விவகாரம் வெடித்துச் சிதறுவதால், நாடாளுமன்றம் நடக்க முடியாத நிலையில் இது போன்ற சட்ட முன் வடிவுகள் மேசைக்கு வர முடியாமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே காத்துக் கிடக்கின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கோரிக்கையை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும்போது, அதனை எதிர்கொண்டு விவாதத்துக்கு அனுமதிப்பதுதான் நாணயமான, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகாகும்.

ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் என்ன நடந்து கொண்டுள்ளது?

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அறவே முடங்கினாலும் பரவாயில்லை - விவாதத்துக்கு அனுமதிக்க முடியாது என்ற முரட்டுப் பிடிவாதம் மக்கள் நாயகத்துக்கு எதிரானது.

"பெகாசஸ்" உளவுப் பிரச்சினை இந்தியாவுக்கு மட்டுமல்ல, பல நாடுகளிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் - பிரான்சு, ஹங்கேரி போன்ற நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் - இந்தியாவில் விவாதத்துக்கே அனுமதிக்க முடியாது என்ற பாசிசப் போக்கில் நடந்து கொள்வதன் மூலம் மடியில் கனமிருக்கிறது- அதனால்தான் பயம் என்ற முடிவுக்குத் தானே வர வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத்தின் முடக்கத்துக்கு ஆளும் கட்சித் தரப்பின் போக்கே காரணம் என்பதை மறைத்து, எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த அனுமதிக்கவில்லை என்று பழி போடுவது அதைவிடக் கொடுமையானதே!

No comments:

Post a Comment