தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 22, 2021

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை, ஆக.22 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு செப்.15, 16 மற்றும் 23, 24ஆகிய தேதிகளில் ஆன்லைன் வழியாகநடத்தப்பட உள்ளது. இதற்காக, மாணவர்கள் செப்.1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் 43 மத்தியபல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அதில், திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழகத்தில் 2020-2021ஆம் ஆண்டுமாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவித்துள்ளது: தமிழ்நாடு, பிஹார், ராஜஸ்தான், கருநாடகா, ஜார்கண்ட், ஜம்மு, அரியானா, குஜராத், ஆந்திரபிரதேசம், அசாம், பஞ்சாப், கேரளா ஆகிய 12 மாநிலங்களை ஒருங்கிணைத்து, செப்.15, 16 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரி அறிவியல், பொருளாதாரம் போன்ற பாடங்களுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும், பிஎஸ்சி, பி.எட் போன்ற இளநிலை பட்டப் படிப்புகளுக்கும் இந்த நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ,மாணவிகள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.1ஆம் தேதியும், நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் செலுத்த செப்.2ஆம் தேதியும் கடைசி நாளாகும். மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியான வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நுழைவுத் தேர்வுகள் இணையம் வழியாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற குடிசை மாற்று வாரிய கட்டடம்; 2 பொறியாளர்கள் இடைநீக்கம்

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை,ஆக.22- சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் 864குடியிருப்புகள், 1,056 குடியிருப்புகள் கொண்ட 2 அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. இதன் சுவர்கள், படிக்கட்டுகள் உள்ளிட்டவை தரமின்றி கட்டப்பட்டுள்ளதால், பெயர்ந்து விழுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் நேரில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதில் அளித்தஅமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘‘அந்த கட்டடத்தின் தரம் குறித்துஆய்வு செய்ய அய்அய்டி வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில், தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 20.8.2021 அன்று கூறியதாவது:

குடிசை மாற்று வாரிய கட்டட விவகாரம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் பாண்டியன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அய்அய்டி வல்லுநர்களின் ஆய்வு அறிக்கை வந்தபிறகு, அதில் தவறு நடந்திருப்பது உறுதியானால் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு தவறுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவார். அவர் மேற்கொண்டு வரும் மற்ற திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 பகுதி நேர பி., பி.டெக். படிப்புகளுக்கு செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஆக.22- தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில்,கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம், பர்கூர்,திருநெல்வேலி ஆகிய இடங்களில்உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதி நேர பி., பி.டெக் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பொறியியல் கல்லூரிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக கடந்த 6ஆம் தேதி முதல் மாணவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். செப்.5 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

இதுதொடர்பாக, பகுதி நேரபி., பி.டெக். மாணவர் சேர்க்கைசெயலரும், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வருமான .ராஜேஸ்வரி, மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ ஆகியோர் கூறியது: இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறும். விண்ணப்பித்தல் மற்றும் விவரங்களை <www.ptbe-tnea.com> என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தரவரிசை செப்.22 காலை 10 மணிக்கு வெளியிடப்படும். செப்.25 வரை கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தலாம்.

சிறப்புப் பிரிவு - செப்.26, பொதுப்பிரிவு - 27, 28இல் கலந்தாய்வு நடைபெறும். 30இல் சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்படும். சந்தேகங்களுக்கு 94869 77757, 0422-2574071, 2574072 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

No comments:

Post a Comment