ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 28, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில வழி அதிகப்படுத்துவது சரியா?

- அய்ன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி

பதில்: தவறு என்று சொல்லமாட்டேன் - ஆங்கிலத்தின் இன்றியமையாமை இன்றைய உலகில். ஆனால் தமிழைப் புறக்கணிக்காது, தமிழுக்குரிய முதலிடம் தந்து அதனை நடத்துவது பெரிதும் விரும்பத்தக்கது.

ஆட்சி மொழியில், திராவிடர் ஆட்சியின் கொள்கை - தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு தராசுத் தட்டுகள் என்றாலும், செம்மொழியான தமிழை அறியாது எவரும் பட்டம் பெறக்கூடாத கல்வி முறை எல்லா மட்டத்திலும் அமைதல் அவசியம். ஆங்கிலம் உலக அறிவின்

சாளரம் என்பதை எவரே மறுப்பர்?

கேள்வி 2: ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் அவர்களும், தேஜேஸ்வர் யாதவ் அவர்களும் இணைந்து பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தி இருக்கும் நிலையில், பார்ப்பன ஏடுகள் மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஒருசேர  ஜாதி அரசியல் தொடங்கி விட்டது என்று கொந்தளிக்கின்றனவே?

-சிவகுமார் சண்முகம், பக்ரைன்

பதில்: பார்ப்பன மடாதிபதி - காஞ்சி மஹா பெரியவா, கம்யூனல்ஜி..’ கூடாது; பெண்ணுக்குச் சொத்துரிமை கூடாது என்று பேசியதெல்லாம் என்ன ஆன்மிகமா? அது ஆரிய இனவாதம் அல்லாமல் என்ன?

அவாள் செய்தால் எல்லாம் பிரமாதம் - மற்றவாள் சொன்னால் அனர்த்தம். இதுதான் ஆரிய அகந்தை! புரிகிறதா? வயிற்றெரிச்சல் வசவாளர்கள் வாழ்க! 

கேள்வி 3: நாட்டின் சொத்துக்களை விற்பதற்கு ஒன்றிய அரசுக்கு யார் அதிகாரம் தந்தார்கள் என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளாரே?

- .சே.அந்தோணிராஜ், செங்கோட்டை

பதில்: அனைத்து ஜனநாயகவாதிகளும், பொதுவான சிந்தனையுள்ள பொதுநலவாதிகளும் அக்கறையுடன் கூறுவதைத்தான் துணிச்சலுக்குப் பேர்போன வீர வேங்கை மம்தா கூறியுள்ளார்! பாராட்டத்தக்கது!!

கேள்வி 4: இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தந்தை பெரியாரை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்துவிட்டாலும், பெரியார் பற்றிய கடுமையான அவதூறுகளும் பரவி வருகின்றனவே - தடுக்க எடுக்கப்படும் முயற்சி என்ன?

- சி.இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில்: கானல் நீர் என்றும் உண்மை நீராகி விடாது தானே! இந்த அவதூறு தூசிகள் பெரியார் வயலுக்குக் கிடைக்கும் உரங்களாகும். கவலைப்படாதீர்கள் - என்றும் பெரியாரே வெல்வார்! காரணம் விஞ்ஞானம் ஒரு போதும் தோற்றதில்லை!

கேள்வி 5: அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை அமல்படுத்தியதற்காக முதலமைச்சரும், திமுகவும் நாசமாகப் போக வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனைக்கு சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுக்கிறார்களே பார்ப்பனர்கள்இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியாதா?

-சங்கர் அப்பாசாமி, ஜெயங்கொண்டம்

பதில்: முதலமைச்சர்களில் முதல்வரான மு..ஸ்டாலின் வேகமாக ஆட்சிக் காரோட்டிச் செல்லுகிறார். சில குக்கல்கள், காரைத் துரத்தி குரைத்தால் அது அலட்சியப்படுத்த வேண்டியதே தவிர அவர்களை கவனித்துப் பார்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் தரவே கூடாது; தானே ஒழிந்து விடும்!

கேள்வி 6: பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள், தீண்டாமை என்பது வர்க்கரீதியாக உள்ளது என்றும், ஜாதிக்கு அடித்தளமாக வர்க்கவேறுபாட்டு சிந்தனை உள்ளது என்றும் வர்ண பேதத்தை தாண்டி வர்க்கப் பேதம் முக்கியத்துவம் பெறுகிறது என்கிற நிலையில் நின்றாரா?

-.மு.யாழ் திலீபன், வேப்பிலைப்பட்டி

பதில்: தவறான கருத்து. பாபாசாகிப், வர்ணபேதத்தின் மூலாதாரம் வர்க்கம் அல்ல; வர்க்கத்தை உருவாக்குவதே நம்நாட்டில் வர்ண பேதம் என்பதையே மனுவைக்காட்டி, தந்தை பெரியார் போல தெளிவாகப் பிரச்சாரம் செய்தார்!

பிராமணன் சூத்திரனிடத்தில் கூலி கொடுத்தேனும், கொடுக்காமலேனும் வேலை வாங்கலாம்“ (மனு சுலோகம்)

இது வருணத்தால் ஏற்படும் வர்க்க பேதம், இப்படி பலப்பல. ஏழ்மை மற்றும் வறுமைக்கு நம்நாட்டில் மூலாதாரமான பார்ப்பனீய வர்ணமே அடிப்படை. தலைவிதி தத்துவம் உட்பட பலதும்!

கேள்வி 7: ‘விடுதலை' நாளேட்டில் வெளிவருகின்ற அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை -கடந்து வந்த பாதை எனும் தொடர் கட்டுரையைத்  தொகுத்து நூலாக வெளியிட ஆவன செய்வீர்களா?

- சீ. இலட்சுமிபதிதாம்பரம்.

பதில்: வாசகர் விருப்பம், விழைவே எம் பணி! - போதுமா? மகிழ்ச்சி தானே!

கேள்வி 8: பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தி.மு. வினருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருப்பது வரவேற்க வேண்டிய செய்தி அல்லவா?

                - .மனோகரன், திரு.வி..நகர்.

பதில்: பாராட்டி வரவேற்பதுடன் செயலில் காட்டுதல் மிகவும் அவசியம் ஆகும்.

கேள்வி 9: ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாதம் வெற்றி பெற்றதற்கு வருந்துவதா? ஏகாதிபத்தியம் வெளியேறியமைக்கு மகிழ்வதா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: மதவாதம் ஏகாதிபத்தியத்தைவிட பெரிய ஆபத்து!

கேள்வி 10: 60 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணியில் நீங்கள் வருந்திய சம்பவங்கள் உண்டா?

-கார்த்திகேயன், ஆண்டிமடம்

பதில்: எனக்குப் பெரியார்திடலில் உதவிய பேராசிரியர் இராமநாதன். கு.வெ.கி.ஆசான், இறையன், நிர்வாகி ஆளவந்தார், சிவராசன், திருமகள் போன்ற தோழர்கள் மறைவும், பெரியார் சாக்ரடீஸ் போன்ற பணித்தோழர்கள் மறைவும் பெரும் வருத்தம் தந்தவை.

No comments:

Post a Comment