"தலை சிறந்த மனிதர் யார்?" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

"தலை சிறந்த மனிதர் யார்?"

மனிதர்களில் தலை சிறந்த மனிதர் எவரென் றால்  அவர், பெரிய பட்டங்கள் பெற்றவர்களோ, பெரும் அதிகார பீடங்களை மக்களின் அறியா மையில் 'திடீர் லாட்டரி'   போன்று  பெற்று அனுப விப்பவர்களோ அல்ல - வள்ளுவர் வகுத்த இலக்கணத்தில்! உள்ளபடியே மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டு, தன்னலங் கருதாத தலை வர்களாக அங்கீகரிக்கப்பட்டு, பதவிகளை பொறுப்புகளாக கருதி உழைத்து வரலாறு படைப் போர் என்றுமே தலைசிறந்த மனிதர்கள்தான்.

எனினும் 'செய்நன்றியறிதல்' என்ற பண்புக்கு இலக்கணமாய் - இலக்கியமாய்த் திகழும் மனி தர்களே மாமனிதர்கள் - உயர்ந்த சிறந்த  எடுத்துக் காட்டான பின்பற்றுதலுக்குரிய பெரிய மனிதர்கள் என்பதை திருவள்ளுவர் குறளில் கூறுகிறார்.

"பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், நன்றி காட்டுதல் என்பது, பயனடைந் தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்" என்று கூறி, 'உதவி செய்' 'நன்றியை எதிர்பார்க்காதே' என்பதை மிகுந்த நயத்தக்க நாகரிகத்தோடு எடுத்துரைத்தார்.

நாம் உதவிடும் மனிதர்கள் பலரும் எல்லா வகையிலும் நம்முடைய முழு மனநிறைவுக்கும், ஒப்புதலுக்கும் ஆளாகாதவர்களாகக் கூட இருப்பர். சிற்சில நேரங்களில் என்றாலும் அவர்கள் படும் துன்பம், தொல்லைகளைக் கண்டறிந்து - மற்ற அம்சங்களைக் கொண்டு வந்து போட்டு குழப்பிக் கொள்ளாமல் - உதவிடும் நேரத்தில், மனதைக் குழப்பிக் கொள்ளாமல், நோயாளிக்கு சிகிச்சை தர ஓடோடி வரும் மருத்துவர் போல, தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நாம் அந்த உதவியை நல்ல மனத்தோடு செய்து, மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

சிலர் என்னைக் கேட்பது உண்டு. "என்னங்க, உங்களைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசினார்; விமர்சித்தார் அவருடன் உங்களால் - ஒன்றுமே நடக்காததுபோல பழக, உதவிட உங்களால் எப்படி முடிகிறது" என்பார்கள்.

தந்தை பெரியாரிடம் கொள்கைகளை மாத் திரம் கற்றுக் கொண்டவனல்ல. அவரது ஒப்பற்ற மனிதநேய அடிப்படையிலான வாழ்வியல் பண்புகளையும் அருகில் இருந்து பார்த்து பார்த்து, ஈர்த்து செதுக்கிக் கொண்டதின் பயன் அது என்பதே எனது எளிமையான விடையாகும்!

தனக்குத் துரோகம் இழைத்து  விட்டவர்கள், கடும் விமர்சனங்களை வீதிகளில் கொட்டி ஆர்ப்பரித்த 'வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள்' எல்லாம் பிறகு தத்தம் கடையை நடத்த முடியாமல் மூடி விட்டு தந்தை பெரியாரிடம் வந்தபோதிலும் சரி; அல்லது வராமலேயே ஒதுங்கி இருந்தாலும் சரி, அய்யா அவர்கள், அவர்கள் தன்னுடன் இருந்த காலத்தில் அவர் செய்த பணிகளில் குறிப்பிடத்தக்கவை பற்றி மறக்காமல் குறிப்பிட்டு பாராட்டி விட்டு, பிறகு எப்படியோ இப்படி வீணாகிப் போய் விட்டார் என்று விசனித்து தனித்த உரையாடலில் குறிப் பிடத் தவற மாட்டார்! பெரும்பாலான  தலை வர்கள் - பெரிய மனிதர்களிடம் காண முடியாத ஒன்று இந்த பண்பு நலன்.

தன்னை விட்டுப் போய் விட்டால் ஒரே அடியாக குற்றப் பத்திரிகை - தொடர் குற்றச்சாற்றுகள் பட்டியலை அடுக்குவதுதான்; மண்ணை வாரி மேலும் தூற்றுவதுதான் உலகியலில் நாம் காணும் காட்சி. ஆனால் தந்தை பெரியார் விதி விலக்கு. தூற்றித்திரியும் ஒருவர்  நம்மிடமிருந்தபோது போற்றிக் கொண்டாடி யதைவிட மக்களுக்குப் பயன்பட்டவை ஏதோ ஒன்று - ஒன்றே ஒன்று - செய்திருப்பார். அத்தகை யவர் என்றால் அதற்காக அவரை மன்னிப்பதற்கு, அவரது குறைகளை மறப்பதற்கு என்றும் தயா ராவார்! இன்று பிரிந்துபோன பலரும் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைவர்.

'செய்நன்றி அறிதல்' அத்தியாயத்தில் ஒரு குறள்:

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்

(குறள் 109)

இதன் பொருள்: "முன்பு தனக்கு உதவி செய்த ஒருவர், பின்பு கொலைக்கு ஒத்த தீமைகளைச் செய்ய முயன்றாலும், அவர் முன்பு செய்த அந்த ஓர் உதவியை நினைத்துப் பார்க்க முற்பட்டால், அத்தீமைகளால் ஏற்படக் கூடிய துன்பங்கள் உடனே நீங்கி விடும்."

நன்றியில் இது தலைசிறந்தது,

இந்தப் பண்புடையோரே தலைசிறந்த மனிதர்கள்! - இல்லையா?

No comments:

Post a Comment