தமிழியக்கம் வெல்லட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

தமிழியக்கம் வெல்லட்டும்!

வி.அய்.டி. பல்கலைக் கழக துணைவேந்தர் திரு.கோ. விசுவநாதன் அவர்களை நிறுவனராகக் கொண்ட "தமிழியக்கம் - தமிழர் சமூக மேம்பாட்டுப் பேரவை"யின் தொடக்க விழா கூட்டம் 7.7.2021 அன்று மாலை காணொலி வழி நடைபெற்றது.

பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்களான கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் அப்துல்காதர், கலி. பூங்குன்றன், முனைவர் து. இரவிக்குமார் எம்.பி. செ. இராசேந்திரன் அய்..எஸ். (ஓய்வு), நாஞ்சில் சம்பத், ஒரிசா பாலு, முனைவர் .ஆர். வெங் கடாசலம் ஜெகத் கஸ்பர், மல்லை சத்தியா, சாலமன் பாப்பையா, பிரபல டாக்டர் சொக்கலிங்கம், பழ. கருப்பையா, பொழிலன் முதலியோர் தமிழியக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். 

நடைபெற்ற முதல் கூட்டத்தில் (தமிழர் சமூக மேம்பாட்டுப் பேரவை) முக்கியமாக எடுத்துரைக்கப்பட்ட கருத்துகள்.

(1) தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது.

(2) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்குதல்

(3) வழிபாட்டு மொழியாகத் தமிழுக்கு முதலிடம்.

(4) ஜாதி மத உணர்வுகளுக்கு எதிரான சிந்தனைகளை வளர்த்தல்.

(5) ஜாதிப் பெயரில் உள்ள வீதிகள், சாலைகளின் பெயர்களை அகற்றுதல்

(6) கல்வி நிறுவனங்களுக்கு ஜாதிப் பெயர் சூட்டக் கூடாது.

(7) ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்துதல்

(8) சட்டப்படி ஜாதி ஒழிக்கப்படும் வரை இப்பொழுதுள்ள இடஒதுக்கீடு தொடரச் செய்தல்.

(9) தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லர் - எனவே தமிழ் நாட்டில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை என்பதை பெயர் மாற்றம் செய்தல்

10) சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் என்ற சட்டத்தை முழுமையாக நிறைவேற்றி செயல்படுத்துதல்.

11) திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கச் செய்தல்.

(12) தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, திருவள்ளுவர் பிம்பங்களை உடைக்கும் கூட்டத்தின் செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள உணர்வைப் புரிந்து கொள்ளல் - வெளிப்படுத்துதல்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1: 2013ஆம் ஆண்டில் மராட்டிய அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. (Maharashtra Prevention and eradication of human sacrifice and other inhuman evil and aghori practices and black magic act 2013).

அதனைத் தொடர்ந்து கருநாடகக் காங்கிரஸ் அரசு 2017ஆம் ஆண்டு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. (Karnataka prevention and eradication evil practices and black magic bill 2017) அச்சட்டத்தை 2020 ஜனவரியில் கருநாடக பாரதிய ஜனதா அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றி பெரியார் பிறந்த மண் தமிழ்நாடு என்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழ்நாடு அரசை தமிழியக்கம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் பொறுப்பேற்கும் போது, உறுதிமொழி ஆவணங்களில் தேவநாகரி எழுத்துகளைக் கொண்டே கையொப்பமிட வேண்டும் என்பதே தற்போதைய சட்டம், இதன்படி 11 இந்திய மொழிகளில் மட்டுமே தாய்மொழியில் கையொப்பமிட இயலும். இந்திய மொழிகள் அனைத்தும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதால், நீதியரசர்கள் அவரவர் தாய்மொழியிலேயே கையொப்பமிடும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்திட ஒன்றிய அரசை தமிழியக்கம் வேண்டுகிறது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல்  கலப்புகளுக்கு இடமில்லாத வகையில் முற்போக்கான சிந்தனைகளைத் தாங்கி - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூகநீதி, மதச் சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்தல் (51a(h)) சுயமரியாதை, பகுத்தறிவு, மொழியுரிமை உள்ளிட்ட தளங்களில் முத்திரை பொறிக்கும் நேர்கொண்ட நோக்கு தமிழியக்கம் என்ற அமைப்புக்கு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜாதியற்ற ஹிந்து என்று சொல்லுவதற்கு இதுவரை வழியில்லை என்ற நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம். மதம், ஜாதி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டதாக அரசு இயங்க வேண்டும் மதம் மேலாதிக்கம் செய்யும் நாடுகளில் மனித வளர்ச்சிக் குறியீடு Human Development Index  குறைவாக இருக்கிறது.

வடக்கே இருந்து வந்த ஜாதி இன்று நம்மை ஆதிக்கம் செத்துகிறது; ஜாதி என்ற சொல்லே தமிழில் இல்லை ஜாதி ஒழிப்புக்கு கலப்பு மணம் அவசியம். ஜாதி ஒழிப்பு இணை யர்களுக்கு அனைத்து முன்னுரிமைகளையும் வழங்கவேண்டும். அவர்தம் வாரிசுகளுக்கும் அந்த முன்னுரிமைகள் தொடர வேண்டும் என்று தமிழியக்கத்தின் நிறுவனரும், தலைவரும் வி.அய்.டி. வேந்தருமான கோ. விசுவநாதன் அவர்கள் எடுத்து வைத்த கருத்துகள் வரவேற்கத்தக்கவை.

தமிழியக்கம் நாடெங்கும் கிளைகளைப் பரப்பி புத்துணர்வை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லட்டும் - வெற்றி பெறட்டும் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment