அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிப் பாகுப்பாடு என்பதே இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு ஆணித்தரமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 6, 2021

அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிப் பாகுப்பாடு என்பதே இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு ஆணித்தரமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கட்கு ,

பொருள் : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - பணி நியமனம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தொடர்பாக.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் அரசு திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக் கப்பட்ட வழக்கில் நான் ஒரு இணை மனுதாரர். அதனாலும், சான்று கொள்ளத்தக்க ஆகமத் தொடர்புடையவன் என்பதாலும், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆகமச் சான்றுகளை எடுத்துரைத்தவன்.

எனவே, என்னுடன் நட்புடன் பழகும் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்   வி.வி.சுவாமிநான் அவர்கள் அண்மையில் ஒரு நாளிதழில் வந்த கட்டுரையின் நகலை அனுப்பி விளக்கங்கள் கேட்டார். அவருக்கு மட்டும் அல்ல, இப்பிரச்சினை இன்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருவதால் அனைவருக்குமே உதவும் என்பதற்காக இதனை எழுதுகிறேன்.

அதாவது இந்துக் கோயில்களில் அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று இன்றைய அரசு கருதுகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகளையும் எடுக்கத் துவங்கி உள்ளது. ஆனால் இந்துப் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று கருதும் பெரியவர்கள் அரசின் முன்னெடுப்பு குறித்து கவலைப்படுகிறார்கள் என்று கட்டுரை தொடங்குகிறது.

இதில் உண்மை சிறிதும் இல்லை. ஏதோ இப்போது பதவி ஏற்ற புதிய அரசின் திட்டம் போலக் கூறுவது பிழை. இதற்கு முன்பே இந்தத் திட்டம் பல கட்டங்களைத் தாண்டி வந்துவிட்டது.

இதற்கான அரசாணை எண்.118 நாள் 23.05.2006 சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. அதையொட்டி அதற்காக ஆளுநர் ஓர் அவசரச் சட்டமும் இயற்றினார். அவற்றைச் செல்லாதென உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே எண்.354/2006 என்ற வழக்கெண்ணில் வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்து இறுதியில் 16-12-2015இல் உச்ச நீதிமன்றம் இதில் தீர்ப்பும் வழங்கிவிட்டது. அதாவது மேற்படி அரசாணை செல்லும் என்று தீர்ப்பும் வந்துவிட்டது.

எனவே, இப்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசின் திட்டம் போல கட்டுரை எழுதுவது ஆச்சரியமாக இருக் கிறது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இப்போதுள்ள அரசு நடைமுறைப் படுத்துவதற்காகத் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவே ஒழிய வேறொன்றுமில்லை. தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தவறா? கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை.

"யாரோ சில பெரியவர்கள் இதுபற்றி இப்போது கவலைப்படுகிறார்கள்" என்கிறது கட்டுரை. ஏறத்தாழ

6 ஆண்டுகள் தீர்ப்புக்குப் பின் ஓடிவிட்டன. வறிதே

6 ஆண்டுகள் கவலைப்பட்டிருந்தனர் என்றால் அதில் பொருள் இல்லை.

இப்போது அந்தப் பெரியவர்களிடம் கேட்டதில் இப்படிச் சொல்கிறார்கள் என்று சில கருத்துக்களை எடுத்து வைக்கிறது கட்டுரை. அவை தான் இங்கு சிந்திக்கப் படுகின்றன.

"சைவத்திற்கு ஆகமங்கள், இந்து சமயத்திற்கு அடிப்படை வேதங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

சைவத்திற்கு ஆகமங்கள்; இந்து சமயத்திற்கு வேதங்கள் என்று கட்டுரை கூறுவதன் மூலம் சைவம் வேறு; இந்து சமயம் வேறு என்று கட்டுரை கூறுவதாகக் கொள்ளலாம். அப்படிக் கொள்வதே சரி!

"சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாகங்கொண்ட முழுமையான ஆகமங்கள் கிடைக்கவில்லை." எனக் கூறப்பட்டுள்ளது. ஆக, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கையும் கொண்டது ஆகமம்; வட வேதங் களில் ஏது சரியை, கிரியை, யோகம் ஞானம்? எனவே வேதம், அதாவது வட வேதம் சைவக் கோயில்களுக்கு எப்படி அடிப்படையாக முடியும்? அதோடு ஆகமம் தமிழ் வார்த்தை என்று வேறு கட்டுரை கூறுகிறது. வடவேதமோ முதலில் சந்தத்திலும், பிற்காலத்தில் சமஸ்கிருதத்திலும் ஆக்கப்பட்டது. எனவே, வடவேதத்திற்கும், ஆகமத்திற்கும் தொடர்பே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது.

அடுத்து, 'சிவாச்சாரியார்களைத் தேர்ந்தெ டுத்தல் முதல் சிவாகமத்தில் அடங்கும்' என்பது கட்டுரை கூறுவது. ஆக கட்டுரையே ஆகமப்படி சிவாச்சாரியார்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்களே ஒழிய பிறப்பால் அமைபவர்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டதாயிற்று. சில தகுதிகளினால் தான் சிவாச்சாரியார்கள் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதும் உறுதியானது. ஒன்று தீக்கை; மற்றது சிவாகம வழிபாட்டுப் பயிற்சி. இந்த இரண்டும் தான் தகுதிகள் என்பதும் மரபு.

கட்டுரையில் சைவ ஆகமங்கள் என்ற உட்தலைப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதே மாதிரி வைணவ ஆகமம் என்ற உட்தலைப்பிலும் சிலத் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சிவாகம என்ற உட்தலைப்பில், "சிவாச்சாரியாரும், பட்டாச்சாரியாரும் பூணூல் அணியும் சடங்கான உபநயனம் செய்வதால் மட்டுமே பிராமணர் ஆகின்றனர்" என்று கட்டுரை கூறுகிறது.

இங்கே குறிப்பிடப்பட வேண்டியது என்ன என்றால், உபநயனம் செய்யப்பட்டால் ஒருவர் "பிராம்மணர்" ஆகிறார் என்பது வடவேதங்கள். வடவேதங்களுக்கும், ஆகமங்களுக்கும் தான் தொடர்பே இல்லை என்று முன்னாலேயே கட்டுரை சொல்லிவிட்டதே! எனவே, ஆகமத்தில் தீக்கையால் தான் ஒருவர் சிவாச்சாரியார் ஆகலாம். இரண்டிற்கும் பாரதூரமான வேறுபாடுண்டு.

எனவே சிவாச்சாரியார் பிராம்மணர் அல்லர், பிராம்மணர் சிவாச்சாரியார் அல்லர். இதைக் கட்டுரை மேலும் அழகாக இப்படி வெளிப்படுத்துகிறது.

"ஆகமங்கள் ஜாதி சார்ந்தவை அல்ல; பிராம்மணர் யாரும் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் குடும்பத்தோடு சம்பந்தம் செய்யமாட்டார்கள்; அவர்களும் பிராம்மணர் வீட்டில் கை நனைப்பதில்லை.

இப்படி எழுதிய அதே கட்டுரையில் சிவாகம தீட்சையை சிவாச்சாரியார் அல்லாத யாருக்கும் கொடுக்கக்கூடாது; இப்படிச் சொல்கிறது சிவாகமம் என்று கட்டுரை சொல்கிறது. இது பரமவேடிக்கை; முன்னுக்குப் பின் முரண்!

ஆகமங்கள் ஜாதி சார்ந்தவை அல்ல என்று முன்னால் கட்டுரையில் கூறிவிட்டு சிவாச்சாரியார் அல்லாதவருக்குத் தீக்கை கொடுக்கக் கூடாது என்று சிவாகமம் சொல்கிறது என்பது முற்றிலும் முரண். சிவாச்சாரியாருக்கு ஜாதி ஏது? - சிவாகமப்படி.

உண்மை என்ன என்றால் மெய்கண்ட சிவம் என்ற வேளாளர் அருள்நந்தி சிவம் என்ற சிவாச்சாரியாருக்குத் தீக்கை அளித்துள்ளார். இப்படியே சிவாச்சாரியார் ஆகிய மறைஞான சம்பந்தர், 'சுமார்த்தப் பிராம்மணரான' உமாபதி சிவத்திற்குத் தீக்கை அளித்துள்ளார். தீக்கை ஜாதி பார்த்துக் கொடுப்பதில்லை; பக்குவம் பார்த்துக் கொடுப்பது.

நடராசப் பெருமான் உமாபதி சிவத்திற்கு ஒரு சீட்டுக் கவி கொடுத்தார். அதன்படி உமாபதிசிவம் பெத்தாள் சாம்பாள் என்ற விறகு வெட்டிக்குத் தீக்கை கொடுத்தார் என்பது வரலாறு.

அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் கொற்றங்

குடியார்க்கு எழுதியகைச் சீட்டு - படியின் மிசை

பெத்தாள் சாம் பானுக்குப் பேதமற தீக்கை செய்து

முத்தி கொடுக்க முறை!

இது தான் நடராசப் பெருமான் கொடுத்த கைச்சீட்டு என்று சைவ சித்தாந்த இலக்கியங்கள் எல்லாம் பேசுகின்றன. இங்கே ஜாதி எங்கே வந்தது?

உண்மை இப்படி இருக்க, ஆகம தீட்சை கொடுப்பதற்கோ பெறுவதற்கோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று கட்டுரை கூறுவது வேடிக்கை. அடுத்து, கட்டுரையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது.

"கர்ப்பக் கிரஹத்தில் மற்ற வேலைகள் மட்டுமே செய்யலாம்; வேதம் கற்றாலும் சரி, ஆகமம் கற்றாலும் சரி, ஒரு பிராம்மணர் அர்ச்சகர் அல்லது பட்டாச்சாரியார் ஆக முடியாது. வேத ஆகம கல்வி கற்றோர் அர்ச்சகர் ஆவது செல்லாது என உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது."

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்தப்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை செல்லும் என்று தான் தீர்ப்பு அளித்துள்ளது.

அது மட்டுமல்ல; உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பை ஒட்டி மன்றத்தின் ஒரு நிலைப்பாட்டையும் அறிவிக்கிறது.

"ஏதாவது ஒரு வழக்கம் அரசமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன் இது தொடர்பான ஜாதி வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், அதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கிறோம். இதனால் இப்படி சில சாதி வழக்கங்கள் ஆகமத்தில் குறிக்கப்பட்டிருந்தாலும், அவை அரசமைப்பு சட்டத்திற்கு முன்னது பின்னது என்றெல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல், அவை அரசமைப்பு சட்ட விரோதமானது என்று உறுதியாக நசுக்கி எறியப்பட வேண்டியவையே"

மேலதைப் படித்தாலே, உச்ச நீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிப் பாகுப்பாடு என்பதே இருக்கக் கூடாது என்பதை அறுதியிட்டு ஆணித்தரமாகக் கூறியுள்ளது என்று அறியலாம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படி இருக்க கட்டுரை ஆகமக் கல்வி கற்ற எவரும் அர்ச்சகர் ஆகிவிட முடியாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது என்பது உண்மையைப் புதைத்துப் பொய்க் கொடி நாட்டும் வேலை.

சட்ட விளக்கம் என்ற பெயரில் கட்டுரையில் இன்னொரு குளறுபடியும் காணப்படுகிறது. அதாவது ஒரு குடியில் பிறந்தவர்களுக்கே ஆலய நிர்வாக உரிமைகள் உள்ளன என்பதை அரசமைப்பு சட்டமே ஒப்புக் கொண்டுள்ளது என்று கட்டுரை கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை.

ஒரு குடியில் பிறந்தவர்களுக்கே உரிமை என்று சட்டத்தில் எங்காவது கட்டுரை காட்டுமா? சட்டத்தில் டினாமினேஷன் (denomination) என்று தான் வருகிறதே ஒழிய ஒரு குடிப் பிறந்தவர்கள் என்பது வரவில்லை டினாமினேஷன் என்றால் ஒரு குடிபிறந்தவர்கள் என்றா பொருள்?

அடுத்து, கட்டுரை இப்படி முடிகிறது.

"எனவே, அந்தந்த மதத்தின் ஆகமங்கள் அதாவது கோவில் நிர்வாக விதிகள் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட வேண்டும். அந்த உரிமையில் அரசு தலையிடக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது."

கோவில் நிர்வாகம் வேறு; கோயில் வழிபாட்டு முறை வேறு என்ற அடிப்படை உண்மையையே கட்டுரை பாராமல் கண்ணை மூடிக்கொண்டு எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழிபாட்டு முறைகளை மட்டும் கூறுவது தான் ஆகமம்; அதில் கோவில் நிர்வாகம் வராது. வழிபாட்டு முறைகளில் நிர்வாகம் தலையிட முடியாது என்பது தான் உண்மை .

கட்டுரையை எழுதியவர் இத்துறையின் வட்டத்திற்குள்ளேயே இல்லாதவராக இருக்கலாம். அதனால் தான் இந்தக் குளறுபடிகள்!

ஆக, இக்கட்டுரை மேற்காட்டிய காரணங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.

தங்கள் அன்புள்ள,

மு.பெ.சத்தியவேல் முருகன்

ஆசிரியர் குறிப்பு: கட்டுரையாளர் கருத்துகள் அப்படியே தரப்படுகின்றன.

No comments:

Post a Comment