உழைப்பு, ஒழுக்கம் - கொள்கை - கூட்டுத்தான் "தங்கதுரை" (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 6, 2021

உழைப்பு, ஒழுக்கம் - கொள்கை - கூட்டுத்தான் "தங்கதுரை" (1)

மத நம்பிக்கை, மத வழிபாடு - இவற்றில் ஊறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தோழர், குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் என்ற சிற்றூரில் வாழும் தோழர்

சீ. தங்கதுரை அவர்கள் ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளத் தோழர்!

மனிதாபிமானம், ஒழுக்கம், கொள்கை வாழ்வு, சகோதர பாசம், குடும்பம், ஊர் உறவுகளுடன் மிகுந்த கடப்பாடு - இவற்றுக்கு எடுத்துக் காட்டானவர்.

தென்காசி பள்ளியில் படித்த  இவரும், இவரது தம்பியும் (டேவிட் செல்லதுரை) தினமும் நடந்தே சென்று படித்துத் திரும்புவர். அவர் 'கனவுலகு' என்று தனது வாழ்க்கையை ஒரு சிறு நூலாக எழுதியிருப்பது படிப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளது. இளமையில் வறுமையை அனுபவித்த எம் போன்றோருக்கு இதன் சுவை இன்னமும் கூடுதலாகவே தெரியும்.

அவர் தனது பள்ளி வாழ்க்கையைப் பற்றி எழுதுகின்றார்.

"அக்காலத்தில் 11ஆம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி. என்பது. எனது தம்பி 8ஆம் வகுப்பு வரை பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளியில் முடித்து, நான் படிக்கும் அய்.சி.அய். ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேர்ந்தான். எனது பொறியியற்பிரிவு ஆசிரியர் திரு. ஆதிமூலம் அவர்கள், நான் மதிய உணவு கொண்டு வராமல் பட்டினி இருப்பதை அறிந்து, அவருக்கு வீட்டிலிருந்து வரும் உணவில் ஒரு பகுதியை என்னை சாப்பிட கட்டாயப்படுத்துவார்.

எனது சுயமரியாதை இடம் தராது, மறுத்து விடுவேன். எனக்குத் தெரியாமல் வேறொரு மாணவரிடம் காசு கொடுத்து வாழைப்பழம் வாங்கி வரச்செய்து எனக்குத் தருவார்.

 நான் கிழிந்து, தைத்த சீருடை அணிந்து வருவதையும், அதுவும் ஒரே ஒரு சீருடை மட்டும் இருப்பதையும் அறிந்த ஆசிரியர்அண்ணா பிறந்த நாளில் உனக்கு ஒரு பரிசு தருகிறேன்" எனக் கூறி ஒரு சீருடை (டவுசர், சட்டை) வாங்கிக் கொடுத்தார்."

(காமராசர் பகல் உணவுத் திட்டம், திராவிட அண்ணா, கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு - ஏழை மாணாக்கர்க்கு இலவச திட்டங்கள், பகல் உணவு, முட்டை, வாழைப்பழம் தருவது எவ் வளவு பெரிய உதவி எப்படி என்பது புரிகிறதா?)

இப்படி பள்ளிப் படிப்பு முடித்து தமிழ்நாடு மின் வாரியத்தில் 2.11.1969இல் தினக் கூலியாக ரூ.3.25 காசு சம்பளத்தில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, 12.3.1981இல் வரைவாளர் 3ஆம் நிலை பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மின்விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்!

"9.2.1982இல் நீலமலை மாவட்டத்தில் குந்தா உற்பத்தி வட்டத்தில் காலியிடம் உள்ளது எனத் தெரிந்து கொண்டு, அவ்விடம் கேட்டு விண்ணப்பித்தேன். கிளைன்மார்க்கன்கோட்டக் கிளையின் சங்க செயலாளராக தேர்வு செய்தனர். பிறகு 8.5.1987இல் திருநெல்வேலி  கிராமப்புற கோட்டத்தில் விருப்ப மாறுதலில் - பணி ஒப்புக் கொண்டேன்.

13.12.1999இல் பதவி உயர்வு பெற்று எண்ணூர் சென்னை அனல் மின் நிலையத்தில் பணி ஒப்புக் கொண்டேன். மீண்டும் திருநெல்வேலி உற்பத்தி வட்ட மத்திய அலுவலகராக 2002இல் பணி ஒப்புக் கொண்டேன்."

31.07.2005இல் விருப்ப ஓய்வு பெற்றார்.

இவரது பணிக் காலத்தில் வெளிப்படையாக கொள்கைக்காரனாக இருப்பதை மறைக்காமல் தெரிவித்து வாழ்ந்தார். தூய வாழ்க்கை என்பதால் சமரசமற்ற கொள்கை வாழ்வு வாழ்ந்து வரலாறு படைத்தார்!

"எண்ணூர் அனல் மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற் சங்கங்களையும் ஒருங்கிணைத்தோம் - பெரியார் படம் திறக்க ஏற்பாடு செய்தோம். தலைமைப் பொறியாளருக்கு நான் அனுமதி கேட்டு விண் ணப்பம் அளித்தேன். தலைமைப் பொறியாளர் (CE) என்னை அழைத்தார் - சென்றேன். "நான் தீவிர இந்து பக்தன். கோயம்புத்தூர் கவுண்டர் - பெரியாருக்கு எதிரானவன். அவரது படம் திறக்க அனுமதி வழங்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது? மிக சுவையான கதை - நாளை பார்ப்போம்!

No comments:

Post a Comment