தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் தொழிற்பேட்டைகள் குறு சிறு நடுத்தர தொழில் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 6, 2021

தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் தொழிற்பேட்டைகள் குறு சிறு நடுத்தர தொழில் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை,ஜூலை6- தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (5.7.2021) குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கரோனா ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகியுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும்வகையில் இந்த நிதியாண்டின் நிதிநிலை திட்ட முதலீட்டு மானிய ஒதுக்கீட்டில் 60 சதவீதமான ரூ.168கோடியை, 1,975 தொழில் நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இக் கூட்டத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசியதாவது:

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலான முறைசார்ந்த கடன்கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உரு வாக்க செயல்படுத்தப்படும் சுயவேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு 2021-2022ஆம் நிதியாண்டில் முன்னுரிமை அளித்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டும். சுயவேலைவாய்ப்புத் திட்டங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர் ஆகிய பயனாளிகளின் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டை இந்தியாவின் மிகவும் துடிப்பான புத்தாக்கத்துக்கு உகந்த மாநிலமாக்க வேண்டும். ஏற்றுமதியை மேம்படுத்தவும், இறக்குமதி தொழிலுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் ஏதுவாக சிறப்புத் திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உருவாக்க வேண்டும். நீண்ட காலமாக சிட்கோவில் நிலுவையிலுள்ள, மனை ஒதுக்கீடுதாரர்களுக்குப் பட்டா வழங்குதல்,தொழில் மனைக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகமான விலையைக் குறைக்க தீர்வுகாண வேண்டும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விண்வெளி வானூர்திகள், ரோபாடிக்ஸ், துல்லியமான கருவிகள் உற்பத்தி ஆகிய உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபடஏதுவாக திட்டங்களை உருவாக்கவேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியைஉருவாக்க ஏதுவாக, தொழில்வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். வேளாண்உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக் கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறை செயலர் .கிருஷ்ணன், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் விபு நய்யர், டான்சி மேலாண்மை இயக்குநர் எஸ்.விஜயகுமார், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment