பெண்கள் என்றால் மனச்சஞ்சலக்காரர்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 7, 2021

பெண்கள் என்றால் மனச்சஞ்சலக்காரர்களா?

"தினமலர்" நாளிதழில் பெண் அர்ச்சகர் நியமனம் அவசியமா?" என்ற தலைப்பில் 5.7.2021 அன்று நாகசாமி என்பவர் கட்டுரை எழுதியுள்ளார், 

யார் இந்த நாகசாமி? முழுக்க முழுக்க தமிழ் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டுபவர். சமஸ்கிருதத்தின் கிளைதான் தமிழ் என்று கூறியவர். திருக்குறள் மனுதர்மத்தின் நகல் என்று கூறியது மட்டுமல்லாமல் அது குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளார். இந்தக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாகவே ஆங்கிலத்தில் வெளியிடவும் செய்தனர்.

 இவர் தொல்லியல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர், பார்ப்பனர். தமிழைப் பகைப்பதையே பிறப்பு நோக்கமாகக் கொண்டவர். மோடி ஆட்சி என்பது அவாளுடைய ஆட்சி என்பதாலும், ஹிந்துத்துவா என்னும் பெயரில் பார்ப்பனியம், சமஸ்கிருதம், வேதம், வேதாந்தம் இவற்றைத் தவிர இவர்களுக்கு வேறு சிந்தனையே கிடையாது.

ஆண்கள் பஞ்ச சுத்திகரணம் என்ற அய்ந்து சுத்தங்களைக் கடைபிடிப்பார்களாம், பெண்களால் இது முடியாதாம், 

பெண்கள் எப்போதும் மனச்சஞ்சலத்தில் இருப்பார்களாம். இந்த 2021இலும் இப்படி எழுதுவதற்குப் பெயர்தான் பார்ப்பன - மனுதர்மத் திமிர் என்பது! இவர்களின் தாயும் ஒரு பெண்ணல்லவா?

பெண்களால் உடல், மனத்தை எப்போதும் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதாம்! 

காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனையும், சிறீவில்லி புத்தூர் பத்ரி நாராயணனையும் எந்தப் பட்டியலில் வைக்க உத்தேசம்? சஞ்சலம் இல்லாத உருக்கு மனிதர்களோ?

பெண்களை அர்ச்சகர் ஆக்கினால் வழிபாட்டு முறைகள் அழிந்துபோய் கடவுள் பக்தி மீதான நம்பிக்கை குறைந்து போய்விடும் என்கிறார். அப்படியானால் பெண் கடவுள்களான பார்வதி, சரஸ்வதி, இலட்சுமி இவர்களை எந்தப் பட்டியலில் வைத்துள்ளனர்?

இவர்கள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அதற்கும் ஆகம விதி என்று இவர்களே எழுதிவைத்த விதிகளைத் தூக்கிக்கொண்டு வந்து நிற்கின்றனர். 

இப்போது பெண்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் என்றால் அதற்கு மறைமுகமாக பெண்ணினம் மனச்சஞ்சலக்காரர்கள் (ஒழுக்கம் கெட்டவர்கள்), அவர்களை எப்படி அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று முறுக்கிக் கொண்டு வருகின்றனர்.  வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறவில்லையா?

மேற்கு வங்கத்தில் பெண்கள் அர்ச்சகர்களாகி, புரோகிதம் கற்று திருமணங்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வைக்கின்றனர். 

 கொல்கத்தாவில் உள்ள பெண் அர்ச்சகர் அமைப்பில் பயிற்சி பெற்ற பெண் ஒருவர் மகாராட்டிர மாநிலத்தில் பூஜை உள்ளிட்ட செயல்களைச் செய்து அனைவரின் வரவேற்பையும் பெரிதும் பெற்றார். 

 பிரபல நடிகர் தனது திருமணத்தை அந்தப் பெண் புரோகிதர்தான் நடத்திவைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துப் பெண் புரோகிதர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார், 

மத்தியப் பிரதேசத்தில் பெண் சாமியார் அமைப்பு ஒன்று உள்ளது, இந்த அமைப்பினர் கும்பமேளாவின் போது சிறப்புப் பாதுகாப்புகளோடு சென்று, ஆற்றில் முழுகிவிட்டு வருவார்கள். இவர்கள் எல்லாம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர் என்பது  நினைவிருக்கட்டும் நாகசாமி குருக்கள் கம்பெனி என்பது மனுதர்மத்தின் சந்ததியினர். "படுக்கை, ஆசனம், அலங்காரம், கோபம்,பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்." (மனுதர்மம், அத்தியாயம் 9 - சுலோகம் -17)

ஒட்டுமொத்தமாக பெற்ற தாயையும், மகளையும் கூட  மனச்சஞ்சலம் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கும் கூட்டம் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது.


No comments:

Post a Comment