ஒற்றைப் பத்தி:இரட்டைமலை சீனிவாசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 7, 2021

ஒற்றைப் பத்தி:இரட்டைமலை சீனிவாசன்

 


சென்னை அரசாங்க இலாகா, உள்ளூர் அரசாங்க இலாகா, அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25 செப்டம்பர் 1924 ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலத்தில் உள்ள உள்துறை நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது.

1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் (நீதிக்கட்சி) கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொது சாலைகள், கிணறுகள் பற்றியது. திரு.ஆர்.சீனிவாசன் (இரட்டைமலை) அவர்களின் தீர்மானம் இது.

1. (அ) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவற்றை நிறைவேற்றி  அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(ஆ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ, எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்குள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(இ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவையாய் இருந்தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு,அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.

- பி.எல்.மூர்

அரசாங்க செயலாளர்

இதன்படி பொதுவான பாட்டைகள், மார்க்கெட்டுகள், பொதுவான கிணறுகள் இவற்றைப் பயன்படுத்துவோரைத் தடுப்போருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

அரசாணை எண்: 817 மூலம் 25.3.1922 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 - மயிலாடன்

குறிப்பு: இன்று (ஜூலை 7) தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்த வரலாற்றுத் திருநாள் (1860)..

No comments:

Post a Comment