என்றும் மதிக்கப்படுவது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

என்றும் மதிக்கப்படுவது எப்படி?

வாழ்க்கை நிலையாமையைப்பற்றி தத்துவ ஞானிகள் கூறுவதுண்டு. "நேற்றிருந்தார் - இன்று இல்லையே" என்பதுதான் இயற்கைமனித வாழ்வு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! அதுவும் கரோனா   கொடுந்தொற்று - கோவிட் 19 எத்தனை லட்சம் மனிதர்களை நம்மோடு  'இல்லாதவர் களாக' பறித்து விட்டது என்பதைப் பார்க்கும் போதும், படிக்கும் போதும் நம் மக்களின் மனதில் அதன்மூலம் பெற வேண்டிய பாடங்கள் ஏராளம்! ஏராளம்!!

மாய்ந்து மாய்ந்து, ஓடி ஓடி, அலைந்து திரிந்தும், ஆலாய்ப் பறந்தும் பல கோடி பொருள் சேர்த்தவர்களைக்கூட கரோனா விட்டு வைத்ததா  - இல்லையே!

மரணம் என்பதுதான் சமத்துவத்தை நிறுத்தும் இயற்கையின் கூறு என்பதை ஆங்கிலச் செய்யுள் - பாட்டு (Poem) 'Death The Leveller' என்ற தலைப்பில் கல்லூரி காலத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது!

ஏழை, பணக்காரன், படித்தவன் - படிக் காதவன், உயர் பதவியாளன் - ஒன்றுமில்லாதவன் இப்படி சமூக ஏற்றத் தாழ்வுகளின் உருவமாய் நடமாடிய மனிதர்கள். கல்லறையும், சுடுகாடு, மயான பூமியும்தானே சமத்துவ பாடத்தைச் சொல்லிக் கொடுக்கின்றன!

வாழ்நாளில் சமத்துவத்தைக் கற்றுக் கொள்ள மறுக்கும் மமதை வாய்ந்த மனிதா! மரணத் திலாவது அது உனக்குத் தெரியாமலேயே கிட் டட்டும்  - அப்படியாவது ஆதிக்க ஆணவத்தில் புரண்ட உனக்கு ஆறடி நிலம்கூட இப்போது தேவையில்லை; காரணம், உன்னை எரிப்பது மின்மயானத்தில் - சில மணித் துளிகளில் உன் உடல் சாம்பலாகும்! தெரிந்து கொள்!!

முன்பு இதில்கூட மனித பண ஆதிக்கம் தன் 'பொல்லா சிறகை விரித்தே' காட்டியது சுடுகாட்டில் -

பணக்காரனின் சிதையில் விலை உயர்ந்த சந்தனக் கட்டைகள் அடுக்கினர்.  நெருப்பு - நெருப்புக்கு அழுக்கில்லை - அழகில்லை - சமத்துவத்தோடு, ஏழையா, பணக்காரனா என்று பேதப்படுத்தாமல், சுட்டெரித்து அனைவரையும் சாம்பலாக்கித் தருகிறது!

சாம்பல் என்று நல்ல தமிழில் அழைக்கத் தெரியாமல் - அல்லது தாழ்வு மனப்பான்மையில் அதை "அஸ்தி" என்கின்றனர் - நெறிகெட்ட மொழி என்ற விழி இழந்த நம் மனிதர்!

ஆஸ்திக்காரனின் அஸ்தியும் அதாவது பத்திரங்களில்கூட "சுகஜீவனம்" என்ற முன்னுரை, மற்ற சிலருக்கு "கஷ்ட ஜீவனம்" என்ற அடைமொழி போட்டு எழுதும் பழைய பழக்கம் எப்படியோ 'மகாராஜ ராஜஸ்ரீ மகாகனம் பொருந்திய தேவரீர்!' என்பது மாறி, "அன்பு டையீர்" எப்படி உள்ளே நுழைந்தது போல், 'உத்தரகிரியைப் பத்திரிகை' என்பது 'நீத்தார் நினைவு நாள்' என்று அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது!

பதவி வாழ்வும் இதேபோல் நிலை இல்லாதது!

'நேற்றிருந்தார் - வீற்றிருந்தார், பிறகு தோற் றோடினார்' என்பதும், முகமன் கூறிய முகமனுக்கு முதலீடு நாயகர்கள் முழு முகவரியை மாற்றி, புதியவருக்கு புது முகஸ்துதி பாட முனைப்புடன் முயலுவது உலகில் நாம் காணும் வேடிக்கை காட்சிகள் அல்லவா?

நேற்று வரை முதலமைச்சர் பதவியில் அமர்ந்து வலம் வந்த ஒருவர் - கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பதவிவிலகுவதா? நானா என்று மார்தட்டியவர் ஒடுங்கிய கோழிக் குஞ்சுபோல ஆளுநர் மாளிகை சென்று இராஜி னாமா கடிதம் கொடுத்து, தனது 'மீசையில்- குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை' என்றார்!

"நேற்று மந்திரி' - இன்று எந்திரி' எவ்வளவு பதவியின் மாண்பு இப்படி - நிலையற்றது! இதில் உள்ளபோது செய்த சாதனைகள் - பனகல்  அரசர் ஓமாந்தூரார், காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற பல முதல்வர்கள் - (ஜெ.யின் சில செயல்கள் பரிமாணத்தின் இறுதிக் கட்டம்  விழுங்கி விட்டதால் இப்பட்டியலில் இடம் பெற இயலவில்லை - ரசிகர்கள் மன்னிப் பார்களாக!) எனவே பதவியால் மனிதர்களின் உயரத்தை அளக்காதீர்கள்!

அவர்கள் மக்களுக்குச் செய்யும் உதவியால் அவர்களை அளந்து பாருங்கள்!

தொண்டு செய்தவர்கள் நேர்மையாளர்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே எடை, ஒரே மரியாதை, ஒரே மதிப்பை என்றும் பெறுவார்கள்!

பதவியை தொண்டாற்றும் வாய்ப்பு எனக் கருதி நாளும் வாழ்ந்தவர்களே  மக்கள் நினைவில் நிலை பெறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

No comments:

Post a Comment