பார்ப்பனர்களின் கோணல் புத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

பார்ப்பனர்களின் கோணல் புத்தி

 பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே - பார்ப்பனர்  - பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டம்தான். சமூகநீதிக்கு எதிரான பார்வைதான். தங்களின் வேத சனாதன கொள்கைக்கு எதிராக யாராக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்கள்மீது பழி சுமத்துவது, குறுக்குச் சால் ஓட்டுவது, உள்நோக்கம் கற்பிப்பது, அபாண்டமாக பழி சுமத்துவது, புனைச் சுருட்டுகளைக் கட்டவிழ்த்து விடுவது - இன்னோரன்ன அணுகுமுறைகளை கொஞ்சம்கூட ஈவு இரக்கமின்றிப் பட்டாக் கத்திகளாக ஏவுவார்கள்.

சமூகநீதி என்று வரும்போது, அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து  ஆதரிக்கும் ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

பகுத்தறிவுப் பேசும் பார்ப்பனர்களைக் கூடப் பார்த்து விடலாம் - ஆனால் இடஒதுக்கீட்டுக்குப் பச்சைக் கொடி தூக்கும் பார்ப்பனர்களைப் பார்ப்பது முயற்கொம்பே!

இடஒதுக்கீடு என்று வந்தால், தகுதி - திறமை பார்க்க வேண்டாமா? தகுதியில்லாத மருத்துவர்களால் உயிருக்கு ஆபத்து அல்லவா! என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

இவர்கள் சொல்லும் தகுதி- திறமை என்பது மனப்பாடத்தால் பெறும் மார்க்குகள்தானா?

"100க்கு 60 மார்க் சர்டிபிகேட் மார்க் என்பதை எதிர்பார்க்காமல் சேர்க்கப்பட்ட பிள்ளைகளில் எத்தனைப்பேர் தொழில் படிப்பில் ஃபெயில் ஆனார்கள்? பாஸ் செய்து தொழிலில் ஈடுபட்ட பின் தொழிலுக்குத் தகுதி அற்றவர்கள் என்று எத்தனைப் பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள்? குற்றங் கூறப்பட்டார்கள் கண்டனம் செய்யப்பட்டார்கள்? (விடுதலை 11.5.1967) என்ற தந்தை பெரியாரின் கேள்விக்குப் பார்ப்பன வட்டாரங்களிலிருந்து பதில் உண்டா?

மெட்ரிக்குலேசன் தேர்வில் 750க்கு வெறும் 282 மதிப்பெண் பெற்ற அம்பேத்கர் தானே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி! இதனை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி இரவிந்திரன் சுட்டிக்காட்டவில்லையா?

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில்தான் திராவிடர் கழகத்தின் அரும்பணியால் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது சட்ட ரீதியாக உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.

1994 முதல் சட்டமுறையிலும் உள்ளது. இதுகுறித்து பார்ப்பன ஏடான 'துக்ளக்' என்ன எழுதுகிறது?

"உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கிலிருந்து சமீபத்திய மராத்திய இடஒதுக்கீடு வழக்குவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டை விஞ்சி இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றே கூறி வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் மீது உச்சநீதிமன்றத்தின் பார்வை விழுந்தால், அது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதையே கூறும். மீதமுள்ள 19 சதவிகித இடஒதுக்கீடு தானாகவே இல்லாமல் போய் விடும். இது எந்தப் பிரிவினரைப் பாதிக்கும் என்பது தீர்ப்புக்குப் பின்னர்தான் தெரியவரும்.

எனவே 9 ஆவது அட்டவணையால் பெரிய பாதுகாப்பு கிடைத்து விடும் என்று கருதுவது சிறுபிள்ளைத்தனமே" - என்று தன் ஆசையை குதிரையாக்கி அதன்மீது பார்ப்பன 'துக்ளக்' ஏடு சவாரி செய்வதைக் கவனிக்க வேண்டும்.

69 விழுக்காடு பாதுகாப்புக்கான ஆலோசனையை கூறியதோடு அல்லாமல், அதற்கான மாதிரி சட்ட வடிவைத் தயாரித்துக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அன்றைய முதல்அமைச்சர் ஜெயலலிதா அதனை ஏற்றுக் கொண்டு செயல்பட்டதன் காரணமாகவே 69 விழுக்காடு இங்கு நிலை பெற்றது என்பது நமது கண்ணுக்கு எதிரே நடத்த வரலாறு.

'வாய்ஸ்' என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இதன்மீது வழக்குத் தொடர்ந்தும் அந்த சட்டம் (45/1994) செல்லாது என்று உச்சநீதிமன்றம் சொல்லாதது ஏன் என்று இந்த உச்சிக் குடுமிகளுக்குத் தெரியாதா? தெரியும் என்றாலும் பலித்தவரை இலாபம் என்னும்  பூணூல் புத்தியின் சேட்டையும், விஷமமும்தான் அவர்களை அவ்வாறு எழுத வைத்திருக்கிறது.

50 சதவிகிதத்துக்கு மேல் கருநாடக மாநிலத்தில் இடஒதுக்கீடு சம்பந்தமான உச்சநீதிமன்ற வழக்கில் தமிழ்நாட்டின் 69 சதவீதத்தோடு ஒப்பிட முடியாது; காரணம் 9ஆம் அட்டவணையின் பாதுகாப்புப் பெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறிடவில்லையா? இதெல்லாம் 'துக்ளக்' வகையறாக்களுக்குத் தெரியாதா? இடஒதுக்கீட்டைக் குறைகூறும் இதே பார்ப்பனர், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளதே - இதுபற்றி மூச்சுவிடாதது ஏன்?

பிறவியில் குற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது - அது போன்றதே பார்ப்பனர் தன்மை என்று தந்தை பெரியார் உயர்நீதிமன்றத்திலேயே.. உறுதியாக சொன்ன அந்தக் கூற்றை மறுமுறை ஒரு முறை எண்ணிப் பாரீர்!

No comments:

Post a Comment