ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை மூடப்படுவதா? தமிழ்நாடு முதலமைச்சருக்கு அன்பு வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 7, 2021

ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை மூடப்படுவதா? தமிழ்நாடு முதலமைச்சருக்கு அன்பு வேண்டுகோள்!

ஜெர்மனி நாட்டின் பழைமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று கொலோன் பல்கலைக் கழகம். அப்பல்கலைக் கழகத்தில் கடந்த 58 ஆண்டுகளுக்கு மேலாக பல காலமாக இயங்கிவந்த தமிழ்த்துறை வரும் செப்டம்பரில் மூடப்படும் என்ற அறிவிப்பு வேதனையைத் தருகிறது.

2014 முதல் தமிழ்த் துறைப் பேராசிரியராக பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலஸ் அம்மையார் அதனை 2020 ஆம் ஆண்டுவரை மிகவும் சிறப்பாக நடத்தி வந்து, பல வெளி நாட்டு ஆய்வாளர்களைக் கொண்டு தமிழ்நாட் டின் திராவிடர் இயக்கம்பற்றியெல்லாம் ஆய்வு களையும், சொற்பொழிவுப் பாடங்களையும் நடத்தியவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கட்கு அறிமுகமானவர். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பங்கேற்றவர். பன்முகத்தன்மையாளர். இவருடன் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மான் மற்றும் சிலரும் இணைந்து சிறப்பாக அத்துறையை, தமிழ் கற்று நடத்தி வந்தனர்.

நிதிப்பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடி யைத் தீர்க்க பாதித் தொகையான ஒரு கோடியே 24 லட்சத்தை தமிழ்நாடு அரசு அளிப்பதாக 2019 இல் கூறியது. இதை அங்கிருந்த தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும் உறுதி செய்தனர்.

பிறகு, கரோனாவினால் தமிழ்நாடு அரசு அதை வழங்காமல் இருந்து வந்தது. 

எனவே, பேராசிரியர் ஸ்வென் வொர்ட் மானைப் பணி நீக்கம் செய்து, தமிழ்ப் பிரிவை மூட கொலோன் பல்கலைக் கழகம் முடிவு செய்தது. இதைத் தடுக்க ஜெர்மனியின் 8 நகரத் தமிழர்கள், 'அய்ரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு' என்னும் அமைப்பைத் தொடங்கி, உலகத் தமிழர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலிக்க முடிந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக அன்று இருந்த நமது முதலமைச்சர் அவர்கள், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை கொலோன் பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப் பரிந்துரையும் செய்தார்.

என்றாலும், அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது பலனில்லை.முதலமைச்சர்அவர்கள்அப்போது கூறிய தொகையையோ, அதற்குக் கூடுத லாகவோ தந்து, ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத் 'தமிழ்த்துறை' அடுத்து 2 ஆண்டுகளில் 'மணிவிழா' (60 ஆண்டு காணும் நல் வாய்ப்பை) உருவாக்கிட முன்வரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம். தமிழ்நாடு அரசு இதற்குக் கணிச மாக உதவிட முன்வருதல் அவசியம்.

செம்மொழி தமிழ் உலகப் பல்கலைக் கழகங்களில் - பற்பல நாட்டிலும் பயிற்றுவிக்கப் படும் திட்டத்தை விரிவாக்குவதை தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு அமைச்சகமும் புதிய திட்டங்கள் தீட்டி, தமிழாய்ந்த பெருமக்கள் உலகக் குடிகளாக ஏராளம் இருக்கின்றனர் என்ற சாதனையைச் சரித்திரமாக்க வேண்டுமெனவும் விழைகிறோம்!

தமிழ்நாடு அரசு இப்படிப்பட்ட திட்டங்களுக்கு உதவிட நிதி ஒதுக்கீடு செய்வது தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம், உலகளவில் பரவ வாய்ப் பேற்படுத்துவதாக அமையும்!

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை

7.7.2021

No comments:

Post a Comment