இன்று ‘‘தாத்தா'' இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 7, 2021

இன்று ‘‘தாத்தா'' இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்:

 


160 ஆண்டுகளுக்குமுன்பே ‘பறையன்' ஏடு நடத்தியவர் -

அவர் ஒழிக்க விரும்பிய ஜாதியக் கொடுமை இன்றும் பல வடிவங்களில் உலா!

ஜாதி ஒழிப்புக் களத்தில் அறிவாயுதக்காரர்களாக அணிவகுப்போம்!

இதுவே இரட்மைலையாரின் பிறந்த நாள் சிந்தனையாகட்டும்!



‘தாத்தா' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் இன்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜாதி ஒழிப்புக் களத்தில் நின்றவர் - ‘பறையன்' என்ற ஏடு நடத்தி எழுச்சி ஏற்படுத்தியவர் - ஜாதி ஒழிப்புக் களத்தில் அறிவாயுத அறப்போரில் அணி வகுப்போம் - இதுவே அவர்தம் பிறந்த நாள் சிந்தனையாகட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விழிப்புணர்வை விதைத்து 

வீறுகொண்டெழச் செய்த வித்தகர்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்னே பிறந்து, தான் வளர்ந்து, வாழ்ந்த காலத்தில் தனக்கென வாழாது, உரிமையற்று புழுவினும் கேவலமாய் நடத்தப் பட்ட நமது ஆதிதிராவிட சமுதாய உடன் பிறப்புகளின் வாழ்வில் புத்தாக்கமும், புதுமலர்ச் சியையும் உருவாக்க உழைத்த உரிமைப் போராளி!

இன்று 'தாத்தா' 'இரட்டைமலை சீனிவாசன்' என்று பலராலும் புகழப்படுகின்ற அவர்தம் பிறந்த நாள்! (7.7.1859). 'பறையன்' என்ற இழி சொல்லாகக் கருதப்பட்டதை அழுத்தந்திருத்த மாக வலியுறுத்தி, அக்காலத்தில் தனது சொந்தப் பொறுப்பில் 'பறையன்'  எனும் தலைப்பில் ஏடு நடத்தி, விழிப்புணர்வை விதைத்து வீறுகொண் டெழச் செய்த வித்தகர் அவர்!

சமூக விழிப்புணர்வுக்கான பாடநூல்

அவரே எழுதிய 'ஜீவிய சரித்திர சுருக்கம்' என்ற நூலை மீள் பதிப்பாக சென்னை திரு வான்மியூர் 'தடாகம்' பதிப்பகத்தவர் வெளி யிட்டுள்ளனர். புலவர் வே.பிரபாகரன் அவர் களால் தொகுக்கப்பட்ட அந்த நூல், அவரது 'தன் வாழ்க்கை வரலாறு' என்கிற போதிலும், அக்கால சமூக சூழ்நிலையை அப்படியே நமது இளைய தலைமுறைக்கு நினைவூட்டும் ஒருவகை சமூக விழிப்புணர்வுக்கான பாடநூல் போன்றதாகும்.

அதில் ஒரு முக்கிய பகுதி:

''நான் செங்கல்பட்டு கிராமம் கோழியாளம் என்னும் கிராமத்தில் 1860 ஆம் ஆண்டு பிறந்தேன்.

கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்தபோது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர, மற்றவர்கள் பிராமணர். ஜாதி கோட்பாடுகள் மிகக் கடினமாக கவனிக்கப்பட்டன. பிள்ளை களிடம் சிநேகத்தால் ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவற்றைத் தெரிந்துகொண்டால்,  அவர்கள் தாழ்வாக தன்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்து, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புகளுக்குப் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் எட்டாதபடி வீட்டுக்கு கடுகன நடந்து சேருவேன்.

பிள்ளைகளோடு கூடி விளையாடக் கூடா மையான கொடுமையை நினைத்து மனங்கலங்கி, எண்ணி எண்ணி இந்த இறுக்கத்தை எப்படி மேற்கொள்வது என்று யோசிப்பேன்.

கணக்கர் தொழிலில் சேர்ந்து நீலகிரி என்னும் மலைநாட்டில் அய்ரோப்பிய வியாபார சாலை களில் கணக்கராக இருந்த பத்து வருட காலம் மட்டும் தீண்டாமை என்பதை எப்படி ஒழிப்ப தென்னும் கவலை எனக்குள் ஓயாமலிருந்தது.''

இளமை வாழ்வையே துறந்தார்!

''...சமூகம்'' என்ற தலைப்பில் அவர் அதே நூலில் எழுதுகிறார்:

''ஆரியர்கள் நமது தேசத்தில் குடியேறி வந்து, ஜாதிக் கோட்பாடுகள் உண்டாக்கியபோது இப்போது பறையர், பஞ்சமர், ஆதிதிராவிடர்கள் என்னும் திராவிடர்கள் இசையாமல் பல துன் பங்களுக்குட்பட்டுக் கொண்டு, தனியே 'சேரி' என்னும் தங்கள் கிராமங்களை உண்டாக்கி, கோவில், குளம், கிராமத் தலைவர் (நாட்டாண் மைக்காரர்), பஞ்சாயத்தார், வண்ணான், அம் பட்டன், சுடுகாடு, இடுகாடு, விதாவா விவாகம், விவாக சம்பந்த விலக்கு என வாழ்ந்து வந்தனர்....''

- இப்படி பல உள்ளம் வேதனைப்படும்படியான ஜாதிகள்!

இளம் மாணவப் பருவத்தின் பிஞ்சு உள்ளம் இந்த ஜாதி - தீண்டாமை நஞ்சிடமிருந்து தன் னைப் பாதுகாக்க எப்படியெல்லாம் இளமை வாழ்வையே துறந்துள்ளது!

''அதெல்லாம் அப்பங்க - இப்போ எவ்வ ளவோ மாறிடுச்சுங்க''  ''பிராமணர்கள் எல்லாம் திருந்திட்டாங்க'' என்று நுனிப்புல் மேயும் புதிய பேண்ட்தாரிகள் சிலர் திராவிடர்களாகப் பிறந்து - திராவிடர் இயக்கப் புரட்சியால் பயன் பெற்ற தையும் தாண்டி இவ்வாறு கூறுவது வாடிக்கை!

''இப்போ எவ்வளவோ மாறிடிச்சுங்க'' என்கிறார்களே, இந்த கூற்று உண்மையா?

ஆக்டோபஸ் கொடுங்கரத்துக்குள் 

சிக்கித் தவிக்கின்றனர்!

சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனம் என்ற நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதியுள்ள நிறுவனத்தில் தொடர்ந்து நடக்கும் தற்கொலை கள், இட ஒதுக்கீட்டினால் தப்பித் தவறி உள்ளே நுழையும் திராவிட இனத்தவர் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என்ற பிரிவுக்காரர்கள் - பெண்கள் உள்பட இன்றும் எப்படி பார்ப்பனிய ஆதிக்கக் கொடுமை என்ற ஆக்டோபஸ் கொடுங்கரத் துக்குள் சிக்கித் தவிக்கின்றனர்!

''பட முடியாதினி துயரம்; பட்டதெல்லாம் போதும்'' என்று விஞ்ஞானிகளாக, பொறியா ளர்களாக ஜொலிக்கவேண்டிய எம் மாணவ கருப்புக் கற்கள் - தற்கொலைகளாலும், 'மர்ம' மரணங்களாலும் அவதிப்படும் நிலை ஏன்? மனோதத்துவ ரீதியான உயர்ஜாதி ஆரியத்தின் தாக்குதல் காரணமாக மனமுடைந்து உள்ளனர் என்பதுதானே உண்மை!

ஜாதிக்கொடுமை, ஆணவம், 

அதிகாரம் குறையவில்லையே!

160 ஆண்டுகளுக்குமுன் தாத்தா இரட்டை மலை சீனிவாசன்கள் பெற்ற கசப்பான அனுபவங்கள், 'சுதந்திரம் வந்ததாகக்' கொண் டாட 75 ஆம் ஆண்டுக்கு ஆயத்தமாக பெரிய கட்டடம் கட்டி, வெளிச்சம் காட்ட விழையும் 'பரந்த பாரத தேசத்தில்' இன்னமும் அதே ஜாதிக்கொடுமை, ஆணவம், அதிகாரம் பெரிதும் குறையவில்லையே!

இளைஞர்களே, சமூகநீதிப் போரின் தேவை - இப்போதாவது புரிகிறதா?

இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போர்ப் பரணி பாடி களங்கண்ட புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் தொடங்கிய பெரும்பணி இன்னும் முடியவில்லை. மேலும் தேவைப்படுகிறது; இன்றும், நாளையும் என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? எது உணவு? எது விஷம்? பகுத்துப் பார்க்கத் தெரியாமல், விஷத்தை உணவாகக் கருதி, உண்ணத் துடிப்பதும், நல் உணவை 'விஷம்' எனக் கருதி ஒதுக்குவதும் அறியாமையின் உச்சமல்லவா?

இரட்டைமலையாருக்கு 

நாம் சூட்டும் மலர்மாலை!

இன்று 'திராவிடம் என்ன செய்தது?' என்று நன்றி மறந்து, இன எதிரியின் 'விரல் சூப்பும்' வெட்கங்கெட்டவர்களுக்கும் சேர்த்து விழிப் புணர்வை உருவாக்கிப் பாதை தவறியவர்களை சரியான பாதைக்கு, அறப் போராட்டக் களத்திற்கு அழைத்து வருவதே, இரட்டைமலையாருக்கு நாம் சூட்டும் மலர்மாலை - என்பதை மறவாதீர்.

திராவிடர் ஆட்சி மலர்ந்ததால்தான் அத்த கையவர்களுக்குத் தமிழ்நாட்டில் மணிமண் டபங்கள் - அவை மட்டும் போதுமா?

சுடர் முகம் தூக்கி 

சுயமரியாதை முழங்கு!

அவர் காண விழைந்த ஜாதி, தீண்டாமை ஒழிக்கப்பட்டு, மானுட நேயம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் பொங்கிடப் பணி செய்யும் களத்தில், அறப்போர்  ஆயுதக்காரனாக,  அறிவாயுத அணி வகுப்பு வீரனாக சிங்க இளை ஞனே, உடன் சுடர் முகம் தூக்கி சுயமரியாதை முழங்கு!

இதுவே அவரது பிறந்த நாள் சிந்தனை யாகட்டும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

7.7.2021


No comments:

Post a Comment