இந்து அறநிலையத்துறையா? தமிழ்நாடு அறநிலையத்துறையா? - ஒரு வரலாற்று பார்வை (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

இந்து அறநிலையத்துறையா? தமிழ்நாடு அறநிலையத்துறையா? - ஒரு வரலாற்று பார்வை (2)

- முனைவர் பேராசிரியர் ..மங்களமுருகேசன்

இந்த உண்மையை மறைத்து ரெங்கராஜன் நரசிம்மன் அய்யங்கார் சமூக வலைத்தளங்களில் பார்ப்பனர்கள் கையில் கோவில் நிர்வாகம் இருந்ததே இல்லை என்று முழுப்பூசணிக்காயை முழுச்சோற்றில் மறைக்கிறார். பட்டியல் போட்டால் அத்தனை கோயில் நிர்வாகமும் அவர்கள் கையிலிருந்து இந்து அறநிலைய சட்டம் நிறைவேறிய பின்னே பிற வகுப்பாரின் கையில், அதுவும் திராவிட இயக்க ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒடுக்கப்பெற்றவர் நிர்வாகத்திற்குள் வந்தது. அதனால் எந்த சொத்தும் கொள்ளை கொள்ளை போகவோ, வழிபாடுகள் முறையாக நடைபெற, விழாக்கள் தேரோட்டம் சிறப்பாகவோ நடைபெற தடையோ இல்லை.

கோயில்களின் இத்தகைய முதன்மையை நன்கு உள்வாங்கியதாலேய கோயில் மீட்பு இயக்கம், இந்துத் தனிப்பட்டவர்களிடம் அதாவது தங்களிடம் ஒப்படையுங்கள் என்று கூக்குரல் போடுகின்றனர்.

நிருவாகப் பொறுப்பில் தக்கார், அறங்காவலர், பேஷ்கார், செயல் அலுவலர், என்று எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கோயில் அர்ச்சகர் கூறும் சம்பிரதாயம், மரபு, வழக்கம், நடைமுறை என்பதை மீறமுடியாது. ஆகக் கோயில் தொடர்பான அனைத்திலும் அர்ச்சகர்களின் சொல்தான் இறுதியானது.

இந்த வேளையில் ஒன்றை நாம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே கோயில்களில் பார்ப்பனர் ஜாதியினரின் ஆதிக்கமும், நிதி தொடர்புடை மோசடிகளும் இருப்பதாக திரும்பத் திரும்ப பக்த ஜன சபைகளில் இருந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. ஆங்கிலேய அரசு தான் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களின் சமய விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை 1857ஆம்  ஆண்டுச் சிப்பாய் கலகத்தின் பின்னே கொண்டிருந்தது.

1905 ஆம் ஆண்டு இதுகுறித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றின் முடியும் ஆயிற்று. ஆங்கிலேய ஆட்சியின்போது கோயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசிடம் தானிருந்தது. 1917ஆம் ஆண்டு சட்டம் ஏழாவது பிரிவின்படி கோயில்கள் அனைத்தையும் நிர்வகித்தவை வருவாய்த்துறையே செய்தது. ஆனால் அதற்குப் பின் கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன.

அன்றைக்கு ஆண்ட ஆங்கிலேயரின் மதம் கிறித்துவ மதம் ஆகையால் இந்துக் கோயில்கள் மீது கிறித்தவர்கள் ஆதிக்கம் என்றனர். அதாவது ஆங்கிலேயே அரசு செலுத்துகிற அதிகாரம் என்பதை இந்துக்களுக்கு எதிரான இங்கிலாந்து கிறித்துவர் ஆதிக்கம் என 2 மதங்களுக்கு எதிரான சிக்கல் என்றனர்.

ஆங்கிலேய அரசு 1863 ஆம் ஆண்டு ஒரு அறநிலைய சட்டம் இயற்றியது.

அதனுடைய இருபதாம் பிரிவின்படி எந்தவிதமான மத விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தது.

1863இல் தொடங்கி முழுவதுமாக பார்ப்பனர் கையில் தான் கோயில் நிர்வாகம் பங்கு எல்லாம் இருந்தன.

இந்த ஆதிக்க சக்திகளைச் சுரண்டல் காரர்களை எதிர்த்து முதல் எதிர்ப்புக் குரல் 1905 ஆம் ஆண்டு எப்படி வங்கப் பிரிவினைக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரல் எழுந்தததோ அதுபோல பெல்லாரியில் கூடிய சென்னை மாகாண மாநாட்டில் எழுந்தது. ஆலய நிருவாகம் அரசின் கீழ் வரவேண்டும், ஆலய கணக்குகள் சரிபார்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர். ஆனால் அந்தக் குரல் எடுபடவில்லை.

பின்னர் 1907ஆம் ஆண்டு மதுரையில் தர்மரட்சணசபை அல்லது அறக்கட்டளைப் பாதுகாப்பு சங்கம் எனும் பெயரில் அமைப்பு உருவாயிற்று. அந்த அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்தது.

1917ஆம் ஆண்டு கோவையில் கூடிய பார்ப்பனரல்லாதார் அமைப்பு மாநாடு இந்துமத அறக்கட்டளைகள் தங்கள் நிதியில் சமஸ்கிரதப் பள்ளிகளை ஏற்படுத்துவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது.

இது சமஸ்கிருத எதிர்ப்பு என்பதைவிடப் பார்ப்பனர் நலன் எதிர்ப்பு என்றே கருதிட வேண்டும் ஏன் கோயில் என்பது எல்லா மொழி பேசும் மக்களுக்கும் பொதுவானது. அந்த நிதியில் சமஸ்கிருதப் பள்ளியை நடத்திட முன்வந்தனர் எனில் பார்ப்பனர் நலனைப் பாதுகாப்பது.

இன்றும் 18 மொழிகளில் மோடி அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, ஆதரவு, பள்ளிகளில் திணிப்பை செய்கிறது எனில் பார்ப்பனர் நலனைப் பாதுகாக்கவே என்பது விளங்கும்.

இந்தக் கால வேளையில் 1920இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முடிவொன்றை எடுத்தது. கோயில் நிருவாகம் என்பது மாநில அரசுப் பட்டியலில் (ஷிtணீtமீ றீவீst) ... அதுகுறித்த சட்டமியற்ற முன்வந்தது, பனகல் அரசர் குழு ஒன்றை நியமித்து ஒரு சட்ட முன்வடிவைப் பரிந்துரைக்கக் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறே குழுவின் பரிந்துரையின்படி 1922 டிசம்பர் அந்தச் சட்ட முன்வடிவு வெளிவந்தது. இங்கே ஒரு பிரிவு மிகப்பெரிய எதிர்ப்பை எதிர்கொண்டது

அறக்கட்டளைகளின் தேவைக்குப் போக உள்ள உபரி நிதிகளைப் பொதுவான மக்கள் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அதாவது பயன்படுத்திடாமல் இருக்கும் நிதியை மக்களுக்கான பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் அமைத்தல் ஆகியவற்றிற்கு பயன் படுத்தலாம் என்று சட்ட முன்வரைவு கூறியதுதான் மிக, மிக கடுமையாக எதிர்ப்பை எதிர்கொண்டது.

மெயில் ஆங்கில ஏடு வரவேற்றது. மெயிலின் தலையங்கமும் பாராட்டி கூறியது.

மெயில் பாராட்டிய தலையங்கம் இது:

மெயில் ஏட்டின் தலையங்கத்தில் ஒரு பகுதி

உபரி நிதியை மற்றப் பணிகளுக்குப் பயனாக்கிக் கொள்வது புரட்சிகரமான லட்சியம் ஆகும். மேலும் கொடை வழங்கியவர்களின் எண்ணம் தெரியாத நிலையில் அறக்கட்டளைப் பணி நிறைவடைந்ததும் வேறு பணிகள் மேற்கொள்வது சரியேயாகும். மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய நிறுவனங்களை உருவாக்கிட அந்நிதியைப் பயன்படுத்துவதால் மக்கள் பெரும்பயன் பெறுகிறார்கள். கோயில்களுக்கு இத்தகு கொடை அளித்தவர்கள் மீண்டும் பிறந்து வந்து தாங்கள் நிறுவிய அறக்கட்டளை செயல்களையும் அவற்றின் புதிய பணிகளையும் காண்பார்களாயின் அதனை மகிழ்வுடன் வரவேற்பர்.

ஆனால் பார்ப்பன ஊடகங்கள் அனைத்தும் உபரி நிதியை பொதுமக்களின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்பதை கடுமையாக எதிர்த்தன.

அந்நாளில் மெயில் போல் ஆங்கிலத்தில் நடைபெற்ற பார்ப்பன ஏடுஇந்து’. அரசின் முடிவை எதிர்த்தது. அந்த ஏடு இந்துச் சமூகத்தினரிடையே பெருமளவில் அச்சம் எழுந்துள்ளது எனவும், அறக்கட்டளைகளில் உள்ள உபரி நிதியை வேறுவகையில் செலவிடுவது சரி இல்லை எனவும், சில நன்கொடையாளர்கள் வேண்டுமாயின் அறக்கட்டளைக் கருத்தினை ஒட்டிய கல்விக்கும், மருத்துவத்திற்கும், செலவிடுவதில் மகிழ்ச்சி அடைவர் என்று கூறியதுடன் குறுகிய புத்தியை இக்கேள்வி வாயிலாக காட்டியது.

அறக்கட்டளை நிதியைக் கொண்டு அமைக்கப் பெறும் சாலைகள், நலப்பணிகளால் இந்துக்கள் மட்டுமா பயன் பெறப் போகிறார்கள்? எனும் கேள்வி. எனவே இந்து கோவிலிலிருந்து பயன்படும் நிதி இந்துக்களுக்கு மட்டுமே பயனாக வேண்டும். பொதுவான சாலைகள், மருத்துவமனைகள், கல்விச்சாலைகள் ஆகியவற்றில் அனைவரும் பயன்பெறுவார்களே என்ற தீய எண்ணம் அது.

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று நம்மவர்கள் நக்கலடிக்கும் இந்து ஏடு மட்டும் தானில்லை. சட்டமன்றத்தில் தீரர் சத்தியமூர்த்தி என்பவரும் கவலைப்பட்டார். நாடெங்கும் பார்ப்பனர்கள் திட்டமிட்டு எதிர்ப்பு வலையை பரப்பினர். வைதீக, சனாதன, நம்பிக்கையுள்ள பார்ப்பனரல்லாத சிலரும், சில நிறுவனங்களுமான பார்ப்பன அடிமைகளும் இந்தச் சட்ட முன்வரைவை எதிர்த்தனர்.

தமிழும், சைவமும் வளர்க்கும் ஆதினம் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனரல்லாத தருமபுரம் ஆதீனம் இச்சட்ட முன்வரைவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அரசை கேட்டார். இவர்கள் ஏன் எதிர்த்தார்கள் எனில் மடங்களின் சொத்துக்களும், அறநிலையத்துறையினால் நிருவகிக்கப்படும் என்பதால் தங்களின் சொத்துக்களின் மீதான உரிமை பறிபோய்விடுமே என்பதால் கடுமையாக எதிர்த்தனர். பார்ப்பனரல்லாத தங்களை உயர்ஜாதி எனக் கூறிக்கொண்டவர்களும் எதிர்த்தனர்.

அந்நாளில் பர்மாவிற்குச் சென்று வர்த்தகம் செய்து வருவாய் ஈட்டிய நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தமிழகக் கோயில்களில் அறக்கட்டளைகளை பெருமளவில் உருவாக்கியிருந்தனர். அவர்களும் ரங்கூனிலேயே கூடி அங்கிருந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்தச் சட்ட முன்வரைவு வெறுமனே கோயில்களை யார் நிருவகிப்பது எனும் விவாதம் மட்டுமில்லை அப்படியானால் வேறு என்ன.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் எனும் உணர்ச்சிகளுக்கு இடையில் எழுந்த முதல் வெளிப்படையான மோதல். இன்றும் கூட கோயில் பாதுகாப்பு, கோயிலைத் தனியாரிடம் விட்டுவிடு என்பதெல்லாம் அத்தகையதுதான்.

மேலோட்டமாகப் பார்த்தால் கோயில்கள் அனைத்தும் இந்துக் கோயில்கள், இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என முன்வைக்கும் கருத்து இந்துக்களிடமே கொடுத்துவிட வேண்டும் என்று கேட்பது நியாயம் தானே எனத் தோன்றலாம்.

இந்துக்கள் என்றால் ஒரே சம நிலையில் எல்லா இந்து மக்களையும் கொண்ட சமுதாய அமைப்பு இல்லையே. ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட, ஏற்றத்தாழ்வுகளையே அடிப்படையாக உடைய ஒரு மதத்தின் கூறு என்பதை யார் மறுக்கவியலும்.

தொடரும்...

இந்துக்களில் ஆயிரம் உண்டு இங்கு ஜாதி. இந்த ஜாதியில் எந்த ஜாதியிடம் கொடுப்பது, சமூகத்தில் மேன் மட்டத்தினர் என்கிற அவ்வாறு நம்ப வைக்கப்பட்டுள்ள பார்ப்பனர்களிடம் தான் அனைத்து அதிகாரமும் போய்ச் சேரும். ஆகவே அதன் ஆழத்தில் இருக்கும் உண்மை இந்துக் கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்களிடம் கொடுத்துவிடு என்பதுதான். பார்ப்பனர்கள் ஒன்றாயிருப்பது போல் பார்ப்பனரல்லாதவர் ஒருவருக்கொருவர் முட்டிமோதிப் பார்ப்பனரிடமே இருந்து விட்டுப் போகட்டுமே எனும் தீங்கான முடிவிற்கு வரவழிவகுக்கும். அன்றைக்கு அதாவது ஒரு நூற்றாண்டிற்கு முன்பு இந்து அறநிலையச் சட்டமுன் வரைவை எதிர்த்தவர்கள் எதிர்த்து எழுதியது, பேசியது ஆகியவற்றுடன் நின்றுவிடவில்லை. அரசப் பிரதிநிதி (வைஸ்ராய்) ரீடிங்கை போய்ப் பார்த்து மனு அளித்து, பிரபுவே இதில் கையெழுத்திடாதீர்கள், இது இந்து மக்களின் அதாவது இந்து மக்களின் உணர்வைப் புண்படுத்துகிறது என ஒப்பாரி வைத்தனர்.

அவ்வாறு முறையிட்டவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமா? பார்ப்பனர் அல்லாதவர்களையே இன்றுபோல் அன்றும் முன் நிறுத்தினர். நம்மவர்களில் தான் அடிமைகள் எளிதாகக் கிடைக்கிறார்களே. இதன் விளைவு அரசப் பிரதிநிதிக்குப் பல்வேறு ஜாதியினரும் இந்தச் சட்ட முன் வரைவை எதிர்க்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே அவர் அந்தச் சட்ட முன் வடிவைச் சட்டமாக்குவதற்கான ஒப்புதலைத் தரும் தன் கையெழுத்தை இடவில்லை.

அதே நேரத்தில் சென்னை மாநில ஆளுநராயிருந்த வெலிங்டன் கள நிலவரம் அறிந்தவராததால் இதில் கையொப்பமிடுவதில் பிழை ஏதுமில்லை என்பதோடு அரசப் பிரதிநிதியிடமும் பேசினார்.

ஆளுநர் வெலிங்டன் கையொப்பம் இடலாம் என்கிறார். அரசப் பிரதிநிதி கையொப்பம் இடக்கூடாது என்கிறார். இது ஆளுநர், அரசப் பிரதிநிதி இடையே சிக்கலை உருவாக்கியது. மேலே உள்ளவர் என்பதால் ரீடிங் கையெழுத்திடவில்லை. 1922இல் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டு வந்த சட்ட முன்வரைவு கிடப்பில் போனது. 1923இல் பனகலின் முதல் பதவிக்காலம் முடிந்து 1923இல் தேர்தலைச் சந்தித்தார். அதுவரை சட்ட முன் வடிவு சட்டமாக்காமல் இருந்தது.

நீதிக்கட்சி திமுகவின் பாட்டன் கட்சி ஆயிற்றே. சொன்னதைச் செய்வோம். சொல்வதை செய்வோம் எனும் கோட்பாடு அன்றும் இருந்தது. 1923ஆம் ஆண்டுத் தேர்தலின்போதுநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த இந்து அறநிலையத்துறைச் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனும் உறுதிமொழியை கூறினார்கள்.

1923ஆம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மையைப்க பெற்று வென்றது. 1924இல் அறநிலையத்துறை சட்டத்தைப் பனகல் அரசர் நிறைவேற்றினார்.

இன்றுபோல் காமராசர் முதல்வராக இருந்தபோதும் விவாதம் எழுந்தது. காமராசர் அதனை ஏற்கவில்லை. அரசிடம் தான் இருக்க வேண்டும் என உறுதியாக கூறிவிட்டார். பக்தவச்சலம் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை அரசின் நிருவாகத்திற்குட்பட்ட துறையாகவே இருந்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த போது அறநிலையத்துறை நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பில் இருந்தது. பகுத்தறிவுவாதி அவர்களால் திராவிட இயக்க ஆட்சியில் ஆலய நிருவாகம் சிறப்பாகவே நடைபெற்று வந்தது. வழிபாடுகள், திருவிழாக்கள், குடமுழுக்குகள், ‘சீரங்கநாதரையும், தில்லை நடராசரையும் பீரங்கி கொண்டு பிளப்பது எக்காலம்என்று பேசியவர்கள் ஆட்சியில் குறையேதுமின்றி 50 ஆண்டுகளாக நடைபெறுகிறது. கோயில் சொத்தை எவரும் கொள்ளையடித்து விடவில்லை.

கடவுள் நம்பிக்கையில்லாதவன் கருவறை நுழைவுப் போராட்டத்தை ஏன் நடத்த வேண்டும்?

கோயில்களை நம்ப வேண்டாம். கடவுளை நம்ப வேண்டாம் என்று கூறுவது ஒரு பக்க வாதம் எனில், நம்புகிற மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது மற்றொரு பக்க வாதம்.

அறிவுத்தளம் சார்ந்து பகுத்தறிவு அடிப்படையிலானது. இரண்டாவது கருத்து உரிமை அடிப்படையிலானது. நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு உள்ளே செல்ல உரிமை வேண்டும். அரசாங்கம் என்பது பல்லாயிரக்கணக்கான மக்களுக்குரியது. கோயில்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு உரியவை. கோடிக்கணக்கான மக்களுக்குரிய அரசுதான் இதை நிருவகிக்க வேண்டும்.    

 (தொடரும்)

No comments:

Post a Comment