ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்விபீகாரில் இராம்விலாஸ் பஸ்வான் கட்சியை பிளந்து அதிருப்தியாளருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதே பா..? அதிமுக பாடம் கற்குமா?

-தமிழ்வாணன், மதுரை

பதில்: நிச்சயம் கற்காது; இருவரில் எவர் முந்தி அக்கட்சியை ஒழிப்பது என்பதில் போட்டியிட்டு, பத்திரமாக இருக்க ஓநாய் வயிற்றில் இடந்தேடும் புத்திசாலித்தனத்தில் உள்ளனர்!

ஜெயலலிதா தவறை உணர்ந்ததால்தான் 'மோடியா? லேடியா' என்று கேட்டு, தனித்து நின்றார்; அந்த பாடம் இவர்களுக்குப் புரியவே இல்லை;  ஆசாபாசங்களும், அச்சங்களும் புதுவகை பாதுகாப்பைத் தேடுகின்றன போலும்!

கேள்வி: மாநில அரசின் அதிகாரத்தையும், கருத்துரிமையையும் பறிக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளதே ஒன்றிய அரசு, ஒத்திசைவு பட்டியலில் உள்ள துறை குறித்த சட்டம் இயற்ற மாநில அரசின் இசைவு தேவை இல்லையா?

- முரளிகிருஷ்ணன்,  கல்லக்குடி

பதில்: ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள எத்தனையோ சட்டமீறல்களில் இது லேட்டஸ்ட்! அவ்வளவுதான். “நினைத்ததை முடிப்பவன் நான் - நான்  என்று ஒன்றிய அரசில் பாடுகிறார் பிரதமர் - எல்லா சட்டங்களிலுமே! (வேளாண் சட்டங்கள், ‘நீட்போன்றவை!)

கேள்வி:  கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா மீதான வழக்கு விசாரணையை முடிக்குமாறு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி குன்ஹா விசாரணையை முடித்து வைக்க மறுப்பு தெரிவித்து விரிவாக நடத்த ஆணையிட்டுள்ளாரே!

-தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: அத்தி பூத்தது போல, இப்படி அலகாபாத் (1975) அக்கால சின்ஹாக்களும், இக்கால குன்ஹாக்களும் இருப்பதில்தான் நீதியும், ஜனநாயகமும் இன்னமும் வாழ்கின்றன என்ற நம்பிக்கையை நாட்டுக்கு நாளும் அளிக்கிறது.

கேள்வி:  கேந்திரிய வித்யாலயாவில் ஆறாம் வகுப்பிலிருந்து ஹிந்தி, ஆங்கிலத்துடன் சமஸ்கிருதம்தான் விருப்பப் பாடம் என்று ஆக்கி, விருப்பப் பாடமாக இருந்த தமிழை நீக்கி உள்ளார்களே?

- பகுத்தறிவு, ஈரோடு

பதில்: தமிழுக்கு இடமில்லை என்று கூறலாமா? தமிழ்நாட்டு பண்புகள் - தமிழ்மொழியின் பெருமை பற்றிப் பேசும் பிரதமர் தலைமையிலான ஆட்சியில் இப்படி ஒரு கொடுமையா?

இதனை எதிர்த்து மக்கள் அறப்போர் தொடங்கி, உரிமையை நிலைநாட்ட முன்வர வேண்டும்.

கேள்வி:  மேகதாது அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

 - எஸ்.பத்ரா, வந்தவாசி.

பதில்: உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளிலும் காலந் தாழ்த்தாது ஈடுபட வேண்டும் தமிழ்நாடு அரசு. ‘தானாக மயில் இறகு போடாது’ - முன்பே பலமுறை ஏமாற்றியது கருநாடக அரசு என்பது பழைய வரலாறு!

கேள்வி:    பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் காணொலி வழியாக பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கட்ட பயிற்சிகள் குறித்த திட்டம் இருக்கிறதா?

- அய்ன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி

பதில்: நிச்சயம் இருக்கிறது! அடுத்து பல கட்டங்கள் வரவிருக்கின்றன! மகிழ்ச்சிதானே!

கேள்வி:  ரஃபேல் ஊழலை பிரான்சு அரசு மீண்டும் விசாரிப்பதாக கூறியுள்ள நிலையில் இங்குள்ள ஊடகங்கள் அதை மூடி மறைப்பதில் குறியாக உள்ளனவே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: ஜனநாயகத்தின் நான்காம் தூண்தான் ஊடகம். பலரால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. என்றாலும்நேர் கொண்ட பார்வைஎன்று வசனம் மட்டும் பேசுகிறார்கள்!

கேள்வி: பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்தெந்த ஜாதிகளைச் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறியிருப்பதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

         - இல. சீதாபதி,  மேற்கு தாம்பரம்.

பதில்: நமது போராட்டத்திற்குக் கிடைத்துள்ள அச்சார வெற்றி. கைக்கெட்டியது வாய்க்கெட்டும் வரை ஓயக்கூடாது! விழிப்பும் தேவை.

கேள்வி: சிறையில் இருந்த பாதிரியார் ஸ்டான் லூர்துசாமி மரணம் என்பது பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்த படுகொலை அல்லவா?              

 - பொன்மணி, பூவிருந்தவல்லி.

பதில்: நான் வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலே தெளிவாக குறிப்பிட்டுள்ளேனே! - அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்து அவர் போன்றகுற்றம் சுமத்தப்பட்டவர்களின் கணினிஹேக்செய்யப்பட்டுள்ளதுஎன்று கண்டுபிடித்துள்ளது உலகை அதிர வைக்கிறது. விசாரித்து நீதி கிடைக்க வேண்டும்.

கேள்வி:    கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் உள்ளிட்ட அய்ந்து செம்மொழிகளுக்கு ரூ.29 கோடி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643.84 கோடி ஒதுக்கியிருப்பது எதைக் காட்டுகிறது?

         - எஸ்.முருகேசன்,  கூடுவாஞ்சேரி

பதில்: தமிழ்மொழி மீது அபாரப்பற்று கொண்டுள்ளதாக பா... கூறுவது எத்தகையஉண்மைஎன்பதை பறைசாற்றுவதாக இருக்கிறது! இரண்டு செம்மொழிகளுக்குள் - இப்படி ஒரு பேதம் - ‘ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு’ - நியாயம்தானா?

No comments:

Post a Comment