பெண்களைப் பெண்களாகப் பாருங்கள் அழகுப்பதுமைகளாக பார்ப்பதை தவிருங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 10, 2021

பெண்களைப் பெண்களாகப் பாருங்கள் அழகுப்பதுமைகளாக பார்ப்பதை தவிருங்கள்

 உக்ரைன் பெண் ராணுவ வீரர்களுக்குஹீல்ஸ்காலணி விவகாரத்தில் கிளம்பிய எதிர்ப்பு

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவ பூட்ஸ்களை அணிந்து அணி வகுப்பு நடத்துவதற்கு பதிலாக, பெண் ராணுவ வீரர்கள் ஹீல்ஸ் ஷூ அணிந்து ராணுவ அணி வகுப்பு நடத்தலாம் என்ற திட்டத்தை முன் வைத்திருக்கிறது.

இந்த திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இது ஒரு விதமான பாலின பாகுபாடு, இது சமத்துவம் அல்ல எனக் கூறியுள்ளார் எதிர்க் கட்சியைச் சேர்ந்த இரியானா கெரஸ்சென்கோ.

உக்ரைன் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி, சுதந்திரமடைந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு ஒரு ராணுவ அணிவகுப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது. அந்த அணிவகுப்பில்தான் பெண் ராணுவ வீரர்கள் ராணுவ பூட்ஸை அணிவதற்கு பதிலாக ஹீல்ஸ் ஷூ அணிந்து அணிவகுப்பில் நடக்கும் யோசனை முன் வைக்கப்பட்டது.

ராணுவ பூட்ஸ் என்பது, ராணுவ சீருடையில் ஓர் அங்கம் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகமே கூறுகிறது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பலரும் தங்கள் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே தாரா, இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.

பெண்கள் ஹீல்ஸ் அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்துவது என்பது உண்மையிலேயே அவர்களை இழிவுபடுத்தும் ஒரு விஷயம்என வர்ணனையாளர் விடலே பொர்ட்னிகோவ் தன் முகநூல் பதிவில் கூறியுள்ளார். மேலும், சில அதிகாரிகள் மத்திய கால மனநிலையில் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

பெண்கள் ராணுவ உடையில், ஹீல்ஸ் அணிந்து கொண்டு அணிவகுப்பு பயிற்சி மேற்கொள்வது போலியானது எனக் கருதினேன் என்கிறார் இரியானா கெரஸ்சென்கோ.

இது பாலின பாகுபாட்டையும், சமத்துவமற்ற சூழலையும் காட்டுகிறது. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், பெண்களுக்கென்றே பிரத்யேகமாக பாதுகாப்பு கவச உடையை வடிவமைப்பதற்கு பதிலாக, ஹீல்ஸ் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதுவது ஏன் என தான் வியப்பதாகவும் கூறியுள்ளார் இரியானா கெரஸ்சென்கோ.

ராணுவ அணிவகுப்பு என்பது அந்நாட்டு ராணுவத்தின் வலிமையைக் காட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் ஹீல்ஸ் அணிந்து அணிவகுப்பு நடத்துவது என்பது அவர்களை கவர்ச்சியாக காட்டுவது போல் அமைகிறது என பெண் ராணுவ வீரர் மரியா பெர்லின்ஸ்கா கூறுகிறார். 13,500 பெண்கள் கிழக்கு உக்ரைன் பகுதியில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளோடு போராடினார்கள். அதே போல் ஜார்ஜியா பகுதியில் இருந்து நீண்ட நாட்களாக போராடிவந்த பிரிவினைவாத குழுக்களையும் அடக்கி உள்ளது. உக்ரைன் பெண்கள் படைப்பிரிவு ஆகும். இவர்கள் ஈராக்கில் அய் எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர்புரிய குர்து இனப்பெண்களுக்கு போர் பயிற்சி அளித்து அவர்களை திறம்பட போரிடவைத்து ஈராக்கில் இருந்து அய் எஸ் தீவிரவாதிகளை விரட்டிவிட துணைபுரிந்தனர்.

இவ்வளவு வீரம் செறிந்த பெண் வீரர்களை அந்த நாட்டு ராணுவம் அழகு காட்சிப் பொருளாக வைப்பதை அந்த நாட்டு ராணுவத்தினரே ஏற்கவில்லை

31,000 பெண்கள் தற்போது உக்ரைனின் பாதுகாப்புப் படைகளில் சேவை செய்து வருகிறார்கள். இதில் 4,000 பெண் அதிகாரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment